Advertisment

சமந்தா கேரியர் பெஸ்ட்; வரலட்சுமி ஆ..! யசோதா விமர்சனம்

Yashoda movie review: ஒரு சாதாரண படமாக தொடங்கினாலும், காட்சிகள் செல்ல செல்ல விறுவிறுப்பின் வேகம் அதிகரித்து, மர்மங்கள் நிறைந்த இடைவேளை வரும்போது இது ஒரு "சாதாரண படம் அல்ல" என்று தோன்றும் அளவிற்கு சிறப்பாக முடிகிறது.

author-image
WebDesk
Nov 11, 2022 21:24 IST
yashoda new movie, yashoda movie review, Yashoda movie, yashoda tamil movie, Samantha, Varalaxmi, Samantha movie Yashoda

நவீன் குமார்

Advertisment

Yashoda movie review: தமிழ் சினிமாவில் நாயகிகளை முன்னிறுத்தி பிரமாண்டமாக வெளிவரும் படங்களின் எண்ணிக்கை சொற்பமே, அவற்றுள் ஒன்றாக சமந்தா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ள படம் யசோதா. வாடகைதாய் முறை நம்நாட்டில் பல நிபந்தனைகளுக்குட்பட்டு சட்டபூர்வமாக இருந்தாலும் அதை சட்ட விரோதமாக இன்றைய தொழில் நுட்பங்களைக் கொண்டு எவ்வாறு தவறாக பயன்படுத்துகின்றனர் என்பதையும், அப்பாவி பெண்களை பணத்தாசை காட்டி சட்டவிரோதமாக வாடகை தாய் முறைக்கு ஒத்துழைக்க வைத்து அதன் மூலம் பிறக்கும் குழந்தைகளின் சீரத்தை (serum)கொண்டு எவ்வாறு அழகு சாதன பொருட்கள் (Cosmetics) தயாரிக்கப்படுகின்றன போன்ற அதிர்ச்சிகரமான உண்மைகளை எடுத்துரைக்கும் படமே யசோதா.

சமந்தா தமிழில் முன்னணி கதாநாயகியாக இருந்தாலும் இப்படத்தில் அவருடைய நடிப்பு மாஸ் ஹீரோகளுக்கு ஈடாக அமைந்துள்ளது. முதல் பாதியில் வாடகை தாயாக வரும் அப்பாவி பெண் சமந்தா, இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியதோடு, சில இடங்களில் அவர் செய்யும் குறும்புகளும் ரசிக்க வைக்கின்றன. சண்டைக் காட்சிகளில் சமந்தாவின் ஆக்ஷன் பிரமிப்பை ஏற்படுத்துகின்றது. இன்பம்,அழுகை, ஏமாற்றம்,பாசம்,கோவம், சண்டை என நடிப்பின் அத்தனை பரிமாணங்களையும் அழகாக வெளிப்படுத்தி பாராட்டுகளை அள்ளுகிறார் சமந்தா. இரண்டாம் பாதியில், சமந்தா உண்மையில் யார்? என்று வெளிப்படும் காட்சிகளில் ரசிகர்களின் விசிலும், ஆரவாரமும் மெய்சிலிர்க்க வைக்கின்றன.

இந்த படம் சமந்தாவின் திரை வாழ்வில் அவருடைய "பெஸ்ட்" என்றே சொல்லலாம். இப்படத்தின் பின்னணி இசை பல இடங்களில் நம்மை பயமுறுத்தும், இப்படத்தின் கதையோட்டத்திற்கு தனது இசையின் மூலம் உயிர் கொடுத்து இருக்கிறார் இசையமைப்பாளர் மணி ஷர்மா. வில்லியாக வரும் வரலட்சுமி வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். பல படங்களுக்கு பிறகு அவருக்கு ஒரு தரமான கதாபாத்திரம். இவர்களை தவிர்த்து படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களின் அமைப்பும் அவர்களின் நடிப்பும் இப்படத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.

ஒரு சாதாரண படமாக தொடங்கினாலும், காட்சிகள் செல்ல செல்ல விறுவிறுப்பின் வேகம் அதிகரித்து, மர்மங்கள் நிறைந்த இடைவேளை வரும்போது இது ஒரு "சாதாரண படம் அல்ல" என்று தோன்றும் அளவிற்கு சிறப்பாக முடிகிறது. இரண்டாம் பாதியில் ஒவ்வொரு மர்ம முடிச்சுகளும் அவிழும் போது படபடப்பையும், எதிர்பார்ப்பையும் எகிற வைக்கிறது.

இதுபோல ஒரு புதுமையான கதை என்பதைவிட புதுமையான உண்மைகளை அழகான திரைக்கதையின் மூலம் ரசிக்கும் படியாக கொடுத்த இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரிஷிற்கு பெரிய பாராட்டுக்கள். பெரும்பாலான காட்சிகள் மருத்துவமனையில் நடந்தாலும் கலக்கலான ஒளிப்பதிவின் மூலம் ரசிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார் மொத்தத்தில் யசோதா - புதுமை.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

#Actress Samantha #Samantha Ruth Prabhu #Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment