முகாம்களில் இருக்கும் யானைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் என்ன தெரியுமா?

வொர்க்கிங் டையட், ரெஸ்ட் டையட் என இரண்டு விதமான டையட்கள் யானகளுக்காக பின்பற்றப்படுகிறது.

Anamalai tiger reserve Kumki Elephants diet chart
மூத்த கும்கி யானை கலீமுக்கு உணவினை வழங்கும் கவாடி (Express Photos by Nithya Pandian)

Anamalai tiger reserve Kumki Elephants diet chart : யானைகள் அறிவோம் என்ற தலைப்பில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வழங்கும் இரண்டாவது கட்டுரை இது. யானைகளுக்கும் அதனை வளர்க்கும் பாகன்களுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையையும் அழகான உறவையும் நாம் நம்முடைய முதல் கட்டுரையில் பார்த்தோம். தமிழக வனத்துறை சார்பில் நடத்தப்படும் இந்த யானைகள் முகாம்களில் யானைகளுக்கு எப்படி உணவு அளிக்கப்படுகிறது? செயற்கையான உணவுப் பொருட்களை கொடுத்து யானைக்கு ஏதாவது ஆச்சுனா? இந்த மாதிரி கவலையெல்லாம் எனக்கும் இருந்தது. ஆனால் யானைகளை தேடிக் கொண்டு யானைகள் முகாம்களுக்கு சென்றால் அங்கோ வேறொரு கோணத்தை கண்முன்னே காட்டுகின்றனர் வனத்துறையினரும், யானை பாகன்களும்.

Anamalai tiger reserve Kumki Elephants diet chart
உணவுக்காக நிறுத்தப்பட்டிருக்கும் அசோக்கும் கஜேந்திரனும் விளையாடிக் கொண்டிருக்கும் காட்சி (Express Photos by Nithya Pandian)

வொர்க்கிங் டையட் மற்றும் ரெஸ்ட் டையட் என இரண்டு வகையான உணவு முறைகள் யானைகளுக்காக பின்பற்றப்படுகிறது. பொதுவாக யானைகள் நாள் ஒன்றுக்கு 100 முதல் 200 கிலோ வரை உணவினை உட்கொள்ளும். காட்டில் மேய்ச்சலில் கிடைக்கும் உணவினை தவிர்த்து முகாம்களில் யானைகளுக்கு 50 முதல் 70 கிலோ வரை உணவுகள் வழங்கப்படுகிறது.

வொர்க்கிங் டையட் யாருக்கு?

கும்கிகள், காட்டு யானைகளை பழக்கப்படுத்த பயன்படுத்தப்படும் யானைகள் மற்றும் யானை சவாரிக்கு பயன்படுத்தப்படும் யானைகளுக்கு வொர்க்கிங் டையட் முறையில் உணவுகள் வழங்கப்படுகிறது. பொதுவாக யானைகளின் உயரம் மற்றும் எடைக்கு ஏற்றவகையில் ஒவ்வொரு யானைக்குமான தேவைகளை அறிந்து உணவுகள் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க : யானைகள் ஏன் கும்கிகள் ஆக்கப்படுகிறது? தமிழக பாகன்களின் கதை தெரியுமா உங்களுக்கு?

Anamalai tiger reserve Kumki Elephants diet chart
வாகை மற்றும் தேக்கு மரங்களால் செய்யப்பட்ட துடுப்பு,உலக்கை மற்றும் கரண்டி வகைகள் (Express photo by Nithya Pandian)

ரெஸ்ட் டையட் யாருக்கு?

மனிதர்களைப் போலவே 58 வயதில் ஓய்வினைப் பெறும் யானைகளுக்கு ரெஸ்ட் டையட் வழங்கப்படுகிறது. 5 கிலோ முதல் 10 கிலோ வரை மட்டுமே மாறுபாடு இருக்கிறது. ஆனாலும் பெரும்பாலான நேரங்களில் அனைத்து யானைகளுக்கும் ஒரே அளவில் உணவு வழங்கப்படுகிறது என்கிறார் ஃபாரஸ்டெர் கீர்த்தி குமார்.

இயற்கை உணவு முறைகள்

யானைக்கு வழங்கப்படும் உணவானது முழுக்க முழுக்க ஆர்கானிக் உணவு மட்டுமே. வாரத்திற்கு ஒருமுறை என மூன்று பேர் கொண்ட, உணவு தயாரிக்கும், கவாடிகள் குழு இந்த உணவினை சமைக்கின்றனர். கைகளால் செய்யப்பட்ட வாகை மற்றும் தேக்கு மரங்களால் செய்யப்பட்ட உலக்கை, துடுப்பு மற்றும் தட்டு கொண்டு உணவினை செய்கிறார்கள்.

ராகியும் கொள்ளும் அரிசி சாதமும்

நாள் ஒன்றுக்கு இரண்டு நேரங்களிலும் கொடுக்கப்படும் உணவுகள் (இரண்டு வேளைகளுக்கு பிரிக்கப்பட்ட அளவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

ராகி, கொள்ளு மற்றும் அரிசி சாதம் 25 கிலோ +25 கிலோ (உயரம் மற்றும் எடைக்கு ஏற்றபடி வேறுபடும்)

மினரல் மிக்ஸர் (50 கிராம் + 50 கிராம்)

கருப்பட்டி (100 கிராம் + 100 கிராம்)

தேங்காய் (1+1)

நாள் ஒன்றுக்கு ஒரு கரும்பு

யானைகள் நோய்வாய்ப்படும் தருணங்களில் மட்டும் கால்நடை மருத்துவர் தரும் மருந்துகள் உணவோடு கலந்து வழங்கப்படுகிறது.

Anamalai tiger reserve Kumki Elephants diet chart
யானைகளுக்காக தயாராகிக் கொண்டிருக்கும் ராகிக் களி (Express Photo by Nithya Pandian)

கலீமுக்கே முதல் மரியாதை

காலையில் மேய்ச்சலுக்கு செல்வதற்கு முன்பு ஒரு முறை, மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு முகாமிற்கு திரும்பும் போது ஒரு முறை என இரண்டு தடவை குளிப்பாட்டப்படும் யானைகளை பந்தியில் கட்டி வைத்து யானைக்கான உணவுகளை வழங்குகிறார்கள் பாகன்களும், கவாடிகளும். இந்த முகாம்களில் இருக்கும் மூத்த யானையான கலீமுக்கு முதலில் உணவு வழங்கிய பிறகு தான் இதர யானைகளுக்கு உணவுகள் வழங்கப்படுகிறது.

Anamalai tiger reserve Kumki Elephants diet chart
யானைகளுக்காக எடுத்து வைக்கப்பட்டிருக்கும் கொள்ளு மற்றும் அரிசி சாதம் (Express photo by Nithya Pandian)

தெக்கமல்லி மருந்து

இந்த மருந்து யானை குளித்துவிட்டு வந்த பிறகு நான்கு கால்களிலும் தடவப்படுகிறது. நோய் தொற்றில் இருந்து தப்பிக்க பயன்படுத்தப்படும் இந்த மருந்தினை கம்பிளி பிசின், பச்சை கற்பூரம், பூண்டு மற்றும் வேப்பெண்ணெய் கொண்டு தயாரிக்கின்றார்கள். கால்வாரி என்றும் அழைக்கப்படும் இந்த மருந்தில் மழை காலங்களில் வேப்பெண்ணெய்க்கு பதிலாக விளக்கெண்ணெய் பயன்படுத்தி  தயாரிக்கின்றனர் கவாடிகள்.

Anamalai tiger reserve Kumki Elephants diet chart
தன்னுடைய கல்பனா யானைக்கு தெக்கமல்லி மருந்தினை தடவும் பாகன் பழனிசாமி (Express Photo by Nithya Pandian)

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Anamalai tiger reserve kumki elephants diet chart check the details here

Next Story
டெல்லி தேர்தல் முடிவுகள்: பாஜக.வில் என்ன தாக்கத்தை உருவாக்கும்?amit shah, narendra modi, jharkhand election results, jharkhand polls, bjp cms, india cms bjp, indian express
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express