பிகில் படத்தில் வரும் ராயப்பன் கதாப்பாத்திரம் நமக்கு மிகவும் பழக்கப்பட்டவரும்/மறைக்கப்பட்டவரும் ஆவார். உதாரணமாக, ராயப்பன் யார்? குப்பத்தைப் பற்றிய அவரது கனவு என்ன ? என்ன போராட்டம் ? அவரின் எதிரிகள் யார் ? சமூகமா, அரசியலா, அரசு அதிகாரமா? என்ற எந்த கேள்விகளுக்கும் பிகில் படத்தில் நேரடியான பதில் இல்லை. அலெக்ஸும்/அவரது மகனும் (டேனியல் பாலாஜி) ராயப்பனுக்கு ஒரு சவாலே தவிர, ராயப்பன் தேடும் தீர்வு இவர்களைத் தாண்டியது. அவர் எதிர்பார்ப்பது ஒரு அடையாளம், மாற்றம், அங்கீகாரம். இதன் வெளிப்பாடாகத்தான் 'கப்பு முக்கியம் பிகிலு' என்ற வசனத்தை நம்மால் உணர முடிகிறது.
ராயப்பன் மகனாக வருகிறார் மைக்கல் விஜய். மைக்கலின் புட்பால் விளையாட்டுத் திறனில் தனது சமூகம் மனமாற்றம் அடைவதை காண்கிறார் ராயப்பன். ராயப்பன் வேறு, மைக்கல் வேறு என்பதை ஒவ்வொரு காட்சியமைப்பிலும் தெளிவுபடுத்தி இருக்கிறார் இயக்குனர் அட்லீ. இருவருக்கும் உள்ள நடை, உடை பாவனை, வார்த்தை உச்சரிப்பு (படத்தின் முற்பகுதியில் ராயப்பன் காட்சியில் இருக்கும் போது மட்டும் மைக்கல் வசனம் இயல்பாக இருக்கும், மற்ற நேரங்களில் சேரி பாசையாக இருக்கும் ) போன்றவைகள் எல்லாம் வேறுபடுத்தப்படுகிறது.
உதாரணமாக, பிகில் படத்தில் வரும் ஒரு காட்சி :
(விஜய் கால்பந்து போட்டியில் கப்பு ஜெயித்து விட்டு தந்தை ராயப்பன் உடன் உரையாடும் ஒரு காட்சி )
ராயப்பன் விஜய் : தப்பு பண்றதுக்காக அவங்க கத்தி எடுக்குறாங்க, தப்ப தடுத்து நிறுத்துறதுக்காக நாம கத்தி எடுக்கிறோம். ஆனா வெளியில இருந்து பாக்கும் போது ரெண்டு பேரும் ரவுடியாத் தான் தெரியுது...... என்னோட போகட்டும் பிகிலு ... என்னோட போகட்டும் பிகிலு . நீ வேறையா.... நீ வேற ரூட்டு .... பள்ளிக்கூடம் வந்தா மாறிடினும் சொன்னங்க ........ ஒன்னும் நடக்கலையே ...... ஆனா .... நீ பந்த தூக்கி இந்த பையன்கிட்ட கொடுத்த பாரு...... அப்ப மாற ஆரம்பிச்சது எல்லாமே இதேல்லாம் யாராலா ? ராயப்பனாலையா ? மைக்கல்னாலயா ? இல்ல இல்ல....... பிகிலு......
பிகில் வாங்கும் கோப்பையின் மூலம், தனது சமூக அடையாளம் மாறும் என நம்புகிறார் ராயாப்பன். இருந்தாலும், நீ வேற .... வேற ரூட்டு... பிகிலு..... என சொல்லக் காரணம். மாற்றம் தான் சார்ந்த சமூகத்திற்குள் இருந்து பிறக்காது என்று ராயப்பனை யோசிக்க வைத்தது யார்?
சற்று பின்னோக்கி சென்று 1992ம் ஆண்டு வெளிவந்த 'தேவர் மகன்' படத்தில் வரும் ஒரு சின்ன உரையாடலை நாம் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் -
(தேவர்மகன் படத்தில் வரும் காட்சி : கமல் ஊர் கோயிலுக்கு சென்றதினால் வடிவேலுவின் (எசக்கி) இடது கை வெட்டப்படுகிறது. இதை அறிந்த கமல் விரக்தியோடு வெளிநாடு செல்ல கிளம்புகிறார். அப்போது, கமலுக்கும், சிவாஜிக்கும் நடக்கும் உரையாடல்)
சிவாஜி கணேசன் - இப்ப இந்த ஊரோட நிலைமை புரிஞ்சுதா?
கமல்ஹாசன் - நல்லாவே புரியுது - நான் செஞ்ச தப்பும் புரியுது ! நான் செஞ்ச தப்புக்கு பரிகாரமா இந்த ஊரவிட்டு போலாமனு இருக்கேன்...யா
சிவாஜி கணேசன் - நடந்ததற்கு பரிகாரம் தேடாம ஊரவிட்டு போறேன்னு சொல்றது கோழத்தனமா தெரியலா ?
( சில வசனங்களுக்குப் பிறகு)
கமல்ஹாசன் - 200 வருஷம் பின் தங்கிருக்கிற கிராமத்துல நான் படிச்ச படிப்பெல்லாம் வேஸ்ட்டாக்க விரும்பல யா ..... என்ன விட்டுருங்க !
(சில வசனங்களுக்குப் பிறகு )
சிவாஜி கணேசன் - நீ படிச்சவன் ஆச்சே.... கூட்டிட்டு வா ! , அங்க கூட்டிட்டு வா ! (விஞ்ஞானம் பேச கூட்டிட்டு வா )
கமல்ஹாசன் - என்னைய விட்டுருங்கையா நான் போறேன் !
இரண்டு படத்திற்கும் உள்ள ஒற்றுமை :
ஒரு மனிதன், தான் சார்ந்த சமூகத்தைப் பற்றிய எண்ணம், உள்ளார்ந்த கோபம், நல்லது செய்ய வேண்டும் என்ற படபடப்பு போன்றவைகள் இந்த இரண்டு படங்களுக்குள் இருக்கும் அடிப்படை ஒற்றுமை.
சிவாஜி கணேசன் , ராயப்பன் விஜய் இருவரும் ஒரு மாற்றத்தை தேடுகின்றனர். அந்த மாற்றம் தங்களால் வராது என்பதை இருவரும் ஒத்துக் கொள்கின்றனர். சிவாஜி கதாபாத்திரம் லண்டனில் நிர்வாகம் படித்த தனது மகனை நம்புகிறது. ராயப்பன் கதாபாத்திரம் தனது மகனையும் தாண்டி 'பிகிலு' என்ற கற்பனையை நம்புகிறது.
ஏன் இந்த ஒற்றுமை :
இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றார் மகாத்மா காந்தி. காந்தியைப் பொறுத்த வரையில் கிராமம் என்பது வெறும் இடம், பொருள், ஏவல் மட்டுமல்ல. கிராமம் மனிதனின் தேவையைக் குறைப்பதால், ஒவ்வொரு கிராமமும் ஒருவகையான முழுமை, உண்மை, நெறிமுறை, மனிதன் தேடிவைத்த ஞாபகம்.
சுதந்திரம் அடைந்த இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கொள்கை இதற்கு சற்று நேர்மாறாக இருந்தது. நேருவின் இந்தியா கிராமங்களில் இருந்து நகரத்தை நோக்கி நகர்ந்தது. நகர்ப்புறங்கள் தனக்கான கிராமங்களை தானே உருவாக்கிக் கொண்டன (குடிசைப் பகுதி, ராயப்பன் வசிக்கும் சேரி.....)
நகர்ப்புறங்கள் ஜாதி, மதம், இனம் என பாகுபாடற்ற இடமாக இருப்பதால், நேருவைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு நகர்ப்புறமும் ஒருவகையான தொடக்கம், தேடல் சுதந்திரம், சமநிலை.
நேருவின் இந்தியா, கிராமங்களுக்கான கற்பனையை இழந்தது. நிலவளம், விவசாயப் புரட்சி, வறுமைக் கோடு, போன்றவைகள் எல்லாம் டெல்லியில் அமைந்திருக்கும் திட்டக்குழுவால் உருவாக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டது. சுருங்கச் சொன்னால் - பிரச்சனைகள் கிராமத்தில் இருக்கும், பதில் டெல்லியில் இருக்கும்.
சினிமாவிலும் நாம் இந்த தாக்கத்தை பார்த்திருப்போம்.
நகர்ப்புறங்களில் இருந்து கிராமத்திற்குள் வரும் வாத்தியார், ராணுவ வீரர், மருத்துவர், பொறியியாளர், படிப்பு முடித்து வரும் இளைஞர் போன்ற கதாபாத்திரங்கள் .... கிராம மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். கிராம மக்களுக்காக போராடுவார்கள்.
எனவே தான், 1992 சிவாஜி கணேசன் கதாபாத்திரமும் , 2019 ராயப்பன் விஜய் கதாபாத்திரமும் மாற்றத்தை மற்றொரு இடத்தில் தேடியது.
இரண்டு படத்திற்கும் உள்ள வேறுபாடு :
தேவர்மகன் படத்தின் முடிவில், கமல்ஹாசன்,' போதும் டா, போய் விவசாயம் பண்ணுங்க, புள்ளக்குட்டிய படிக்க வைங்க டா' என்று சொல்லிவிட்டு போலீசிடம் (அரசு, அரசு நிர்வாகத்திடம் ) தனது அருவாளை கொடுத்து விட்டு மாற்ற நினைத்த தனது கிராமத்தை விட்டே நகர்வார்.
தேவர்மகனின் உட்கருத்து என்ன சொல்ல வருகிறதென்றால் 'இனி இந்த கிராமம் அரசாங்கத்திடம் சென்று விட்டது, அரசாங்கத்தின் தலையீடு தேவைப்படுகிறது. இந்த கிராமம் தன்னுடைய சொந்த கலாச்சாரத்தால், சொந்த சத்தத்தால், சொந்த முயற்சியால் இயங்க முடியாது' என்பதாகும்.
பீகில் படத்தின் முடிவில், பிகில் விஜய் பல்வேறு சோதனைகளை கடந்து, வெற்றியடைகிறார். கால்பந்து பயிற்சியாளராக இருந்து பெண்களுக்குள் தேவைப்படும் ஒற்றுமை பற்றி பேசுகிறார். காயத்ரி (கால்பந்தை விடுத்து, கணவர் வீட்டில் வீட்டு வேலை செய்யும் பெண்), அனிதா ( ஆசிட் அடிக்கப்பட்ட பெண்) வீட்டிற்கு சென்று மனமாற்றம் செய்கிறார். இந்த போட்டியில் ஜெயித்ததன் மூலம் தனது தந்தை நினைத்த மாற்றம் உருவாகிவிட்டது என்று நம்மை சிந்திக்க வைக்கிறார்.
இந்த வேறுபாடு என்ன சொல்ல வருகிறது :
பிகில், தேவர்மகன் இரண்டுமே ஒரு சமூகம் சார்ந்த பிரச்சனை தான் .... 1992ல் காட்சியமைக்கும் போது சமூக மாற்றம், சமூக நீதி தோல்வியில் முடிவடைந்தது . 2019ல் காட்சியமைக்கும் போது சமூக மாற்றம், சமூக நீதி வெற்றியில் முடிவடைகிறது.
அப்படியானால், இந்தியாவில் சமூக நீதிக்கான வாய்ப்பு அதிகமாகிவிட்டதா? மாறாக, தற்காலத்து சமூக நீதி, சமூக அடையாளம் தனக்கான அர்த்தங்கள் பெறாமல் வெறும் வெற்றியை நோக்கி மட்டும் பயணிகின்றதா?
உதாரணமாக, பிகில் படக்காட்சி ( தென்றல் இரண்டு மாதம் பிரசவமாக இருக்கும் போது )
தென்றல் நீ விளையாட வேணாம். இத நான் கோச்சா யோசிக்கிறத விட ...ஒரு அண்ணனா யோசிக்கிறேன் ..... நீ இந்த கேம்ல இல்ல
இந்த காட்சியில, நமக்கு அண்ணன் முறையில இருக்குற ஒருத்தரோட பதில் வேணுமா? இல்லை, பிகிலு அப்டிங்கற ஒரு கோச்கிட்ட இருந்து பதில் வேணுமா?
பெண்.....ஆண்..... கரு....கருகலைப்பு ......20 வாரம் ...... மருத்துவ கருக்கலைப்பு சட்டம் 1971 ......10 வயது சண்டிகர் பெண் ...... 30 வாரம்...... உச்சநீதிமன்றம் ...... குழந்தைகளுக்கான உரிமை..... பெண்களின் உரிமை.......கால்பந்து விளையாட்டு .... போன்ற இணைக்கப்படாத கோடுகள் தான் தென்றல் என்கிற கதாப்பாத்திரம்.
புத்தி, யுக்தி, ஆப்பிள் தொழிநுட்பம், உலகமயமாக்கல் சிந்தனை, ரொமான்டிக் லவ், தனியுரிமை போன்ற நவீன சிந்தனையால் கட்டமைக்கப்பட்ட பிகில் என்கிற ஒரு கதாபாத்திரம் பதில் தர மறுப்பது ஏன்?
மேலும், குண்டு- கருப்பு-சாப்பாடு-பாண்டியம்மா - பூமி தள்ளாடும் காட்சி - எல்லாம் பெண்ணியலைத் தாண்டி ஒரு வெற்றிக்காகவே கட்டமைக்கப்பட்டதாய் தோன்றுகிறது.
1992ல் வெளிவந்த தேவர்மகன் படத்திற்குள் இருந்த உணர்வு போராட்டங்களும், கேள்விகளும் தான் படத்திற்கு நல்ல முடிவைத் தரவில்லை. பிகில் படம் வெற்றியை மட்டும் நமக்கு தெரிகிறது. ஆனால், வெற்றிக்கான காரணங்கள் புரியவில்லை.
இது சினிமா காட்சிகளோடு நின்றுவிடாமல் - ஸ்கில் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, மேக்-இன்-இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா , வறுமையில்லா இந்தியா, ஒளிர்ந்த இந்தியா,பயங்கரவாதம் இல்லாத இந்தியா, புது இந்தியா 2024 என நாம் தேடும் அனைத்து மாற்றங்களும்...... எந்த கேள்விக்கும் பொருந்தாத ஒரு பதிலாக மட்டும் உருவாகுகிறதோ! என்றே தோன்றுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.