உலகை அச்சுறுத்தும் காடழிப்பு வேகம்… மனித குலமே ஆபத்தில்! புதிய அறிக்கை எச்சரிக்கை

உலகின் நிலப்பரப்பில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களில் 80% உயிரினங்களுக்கு அடைக்கலம் அளிக்கும் காடுகள், புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்தி, உலகளாவிய காலநிலையை நிலைப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகின்றன.

உலகின் நிலப்பரப்பில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களில் 80% உயிரினங்களுக்கு அடைக்கலம் அளிக்கும் காடுகள், புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்தி, உலகளாவிய காலநிலையை நிலைப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகின்றன.

author-image
abhisudha
New Update
Deforestation

இன்றைய உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்ன? புவி வெப்பமயமாதல், கடல் மட்ட உயர்வு, பருவநிலை மாற்றம்... இவை அனைத்திற்கும் மூல காரணம் ஒன்றுதான் - காடுகளின் அழிவு! ஆம், உலகெங்கிலும் உள்ள காடுகள், உயிர்களுக்கும் கால நிலைக்கும் ஆதாரமாக விளங்கும் பசுமைப் போர்வைகள், கடந்த ஆண்டும் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளன. இந்த நிலை தொடர்ந்தால், மனிதகுலத்தின் நலனே கேள்விக்குறியாகும் என்று புதிய அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.
 
'வன அறிக்கை மதிப்பீடு 2025' (Forest Declaration Assessment 2025) என்ற தலைப்பிலான இந்த ஆய்வறிக்கை, உலகத் தலைவர்கள் அளித்த உறுதிமொழிகள் எப்படிச் செயல்படவில்லை என்பதை நேரடியாகச் சுட்டிக்காட்டுகிறது.

Advertisment

இலக்கை அடைய 63% பின்தங்கிய உலகம்!

2021-ல் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடந்த (COP26) மாநாட்டில், உலக நாடுகள் அனைத்தும் ஒருமித்த குரலில், 2030-ஆம் ஆண்டுக்குள் காடழிப்பு மற்றும் காடுகளின் சீரழிவைத் தடுத்து நிறுத்துவதாகச் சபதம் ஏற்றன. ஒரு தசாப்தத்தின் முடிவுக்குள் ஒரு ஆரோக்கியமான உலகைப் படைப்போம் என உறுதியளித்தோம்.

ஆனால், இந்த அறிக்கையின்படி, நாம் அந்த இலக்கை அடைவதில் 63% பின்தங்கியுள்ளோம்.

கடந்த ஆண்டில் மட்டும் 8.1 மில்லியன் ஹெக்டேர் காடுகளை இழந்துள்ளோம். இந்த அளவு கிட்டத்தட்ட ஆஸ்திரியா நாட்டின் மொத்தப் பரப்பளவுக்குச் சமம் என்பது அதிர்ச்சியூட்டும் தகவல்!

Advertisment
Advertisements

இதில் 6.73 மில்லியன் ஹெக்டேர் வெப்பமண்டலக் காடுகள் ஆகும். அதாவது, உலகின் உயிர்ப்பன்மயம் செறிந்த இடங்களே அதிக அச்சுறுத்தலைச் சந்திக்கின்றன.

காடழிப்பிற்கு முக்கியக் காரணம்? நிரந்தர விவசாயத்திற்காகக் காடுகளை அழிப்பதுதான். கடந்த பத்தாண்டுகளின் காடழிப்பில் சராசரியாக 86% இந்த ஒற்றை காரணத்திற்காகவே நடந்துள்ளது.

காடுகள் புவியின் நுரையீரல்கள். நிலத்தில் உள்ள 80% தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு அவை அடைக்கலம் தருகின்றன. புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸ் என்ற இலக்குக்குள் கட்டுப்படுத்த காடுகளே ஒரே வழி. ஆனால், நாம் அந்த நுரையீரல்களையே வெட்டி வீழ்த்திக்கொண்டிருக்கிறோம்.

நிதிக் கொள்கையின் தலைகீழ் நிலைப்பாடு! 

காடுகளின் அழிவுக்குப் பின்னணியில் இருக்கும் மிக முக்கியமான மற்றும் சோகமான உண்மை, நிதிக் கொள்கைகள்தான். காடுகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, அழிப்பதற்கே அதிக நிதி செலவிடப்படுகிறது.

காடுகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேசப் பொது நிதி 2022-2024-ல் $5.7 பில்லியனாக உயர்ந்திருந்தாலும், இது மிகக் குறைவு.

ஏனெனில், காடழிப்பிற்கான முதன்மை காரணமான விவசாய மானியங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் $409 பில்லியன் பொது நிதியில் இது வெறும் 1.4% மட்டுமே!

ஒருபக்கம் காடுகளைப் பாதுகாக்கக் கோடிக்கணக்கில் செலவிட்டுக்கொண்டே, மறுபக்கம் காடுகளை அழிக்கும் கால்நடை வளர்ப்பு, ஒற்றைப் பயிர்கள் (சோயா, பனை எண்ணெய்), மரம் வெட்டுதல் போன்றவற்றுக்கு பில்லியன் கணக்கில் மானியங்கள் வழங்கப்படுகின்றன.

அறிக்கையின் முதன்மை எழுத்தாளர் எரின் மேட்சன் கூறுவது போல, "சோயா, மாட்டிறைச்சி, மரப் பொருட்கள் போன்றவற்றுக்கான தேவை உயர்ந்தாலும், அந்தத் தேவையை நிறைவேற்ற நாம் உண்மையில் காடுகளை அழிக்கத் தேவையில்லை. ஆனால், இங்கு ஊக்கத்தொகைகள் முற்றிலும் தலைகீழாக உள்ளன!"

2030 இலக்கை எட்ட, காடுகளுக்கு $117 பில்லியன் முதல் $299 பில்லியன் வரை நிதி தேவைப்படுகிறது. ஆனால், நிதி நிறுவனங்களோ இந்த அபாயத்தைப் புரிந்துகொள்வதிலும், காடழிப்பு தொடர்பான அபாயங்களைக் கட்டுப்படுத்துவதிலும் தோல்வி அடைந்துவிட்டன.

சமூகம் மற்றும் சட்டங்கள் மீதான ஆதிக்கம்

காடுகளைப் பாதுகாக்க, உள்ளூர் மக்கள், பூர்வீகக் குடிகள் மற்றும் பெண்களின் பங்கு மிக அவசியம் என்று ஆய்வுகள் திரும்பத் திரும்ப நிரூபித்துள்ளன. ஆனால், அவர்களது பங்கேற்பு உலகளவில் மிகவும் குறைவாகவே உள்ளது.

அறிக்கை மேலும் ஒரு முக்கியமான விஷயத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது: பெரும்பாலான நாடுகளில், காடுகளை அழிக்கும் தொழில் நிறுவனங்களின் அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரமே மேலோங்கி நிற்கிறது. இதனால், காடுகளைப் பாதுகாக்கும் கொள்கைகள் பலவீனமடைகின்றன.

உதாரணமாக, இந்தியாவில் திருத்தப்பட்ட வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இது பல வனப் பகுதிகளுக்கான பாதுகாப்பைக் குறைத்து, காடுகளை நம்பி வாழும் சமூகங்களின் உரிமைகளை பலவீனப்படுத்துவதாக இந்த அறிக்கை கவலை தெரிவித்துள்ளது.

காடுகள் அழிவது வெறும் சுற்றுசூழல் பிரச்சனை மட்டுமல்ல, அது அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக நீதி சார்ந்த ஒரு சங்கிலித் தொடர் பிரச்சனை என்பதை இந்த அறிக்கை அழுத்தம் திருத்தமாக நமக்கு உணர்த்துகிறது. நமது எதிர்காலச் சந்ததியினருக்கு ஆரோக்கியமான உலகை விட்டுச் செல்ல வேண்டுமானால், நாடுகள் தங்கள் உறுதிமொழிகளை வெறும் வார்த்தைகளாக அல்லாமல், உடனடியாகச் செயல்படுத்தும் நடவடிக்கைகளாக மாற்ற வேண்டியது அவசியம்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.

Environment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: