/indian-express-tamil/media/media_files/2025/09/30/donald-trump-gaza-peace-plan-2025-09-30-12-56-45.jpg)
Donald Trump Gaza peace plan
மூன்று வருடங்களாக நீடித்து வரும் காஸா போருக்குத் தீர்வு காண டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள புதிய 20 அம்சத் திட்டம், அவருடைய முந்தைய நிலைப்பாடுகளிலிருந்து பெரிதும் மாறுபட்டு, மத்தியக் கிழக்கில் ஒரு புதிய அமைதிப் பாதையைத் திறக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
போரைக் கையாள்வதில் டிரம்ப்பின் ஆரம்பகாலத் தலையீடுகளிலிருந்து இந்த புதிய திட்டம் இரண்டு முக்கிய அம்சங்களில் மாறுபடுகிறது.
1. காஸாவை விட்டு பாலஸ்தீனியர்கள் வெளியேறத் தேவையில்லை!
முன்பு பாலஸ்தீனியர்கள் காஸாவை விட்டு வெளியேற நேரிடும் என்ற அச்சம் இருந்தது. ஆனால், வெள்ளை மாளிகை வெளியிட்ட இந்த ஆவணம், "மக்களை அங்கேயே இருக்குமாறு ஊக்குவித்து, அவர்களுக்கு ஒரு சிறந்த காஸாவைக் கட்டியெழுப்ப வாய்ப்பளிப்போம்" என்று உறுதி அளித்துள்ளது. இது கட்டாய வெளியேற்றம் குறித்த பதட்டங்களைக் குறைக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம்.
2. பாலஸ்தீனிய இறையாண்மைக்கான சாத்தியமான பாதை!
இரண்டாவது முக்கியமான விஷயம், பாலஸ்தீனியர்களுக்கான சுயநிர்ணயம் மற்றும் ஒரு தேசத்திற்கான நம்பகமான பாதையின் சாத்தியக்கூறுகளை இப்புதிய திட்டம் உயிர்ப்புடன் வைத்திருப்பதுதான். இதை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து எதிர்த்து வந்த நிலையில், டிரம்ப்பின் இந்தத் திட்டத்தில் இதற்கான வழியை வைத்திருப்பது சமநிலையை நோக்கி நகர்வதாகப் பார்க்கப்படுகிறது.
திட்டத்தின் மையக்கரு மற்றும் டிரம்ப்பின் மேற்பார்வை:
21 அம்சங்களாகத் திட்டமிடப்பட்டு, பின்னர் 20 அம்சங்களாகச் சுருக்கப்பட்ட இத்திட்டம், உடனடியாகப் போர் நிறுத்தம் மற்றும் 72 மணி நேரத்திற்குள் பிணைக் கைதிகள் இரு தரப்பினராலும் விடுவிக்கப்பட வேண்டும் எனக் கோருகிறது. மேலும், இதுவே போருக்குப் பிந்தைய காஸாவின் எதிர்காலத்தை ஓரளவு விரிவாக விவரிக்கும் முதல் திட்டம் ஆகும்.
அமலாக்கத்தைக் கண்காணிக்க, 'அமைதி வாரியம்' (Board of Peace) ஒன்றை அமைக்கவும், அதற்கு டிரம்ப்பே தலைமை தாங்கவும் இந்தத் திட்டம் அழைக்கிறது.
ஐ.நா. பொதுச் சபையில் பாலஸ்தீனிய நாட்டை அங்கீகரித்த ஐரோப்பிய நாடுகளின் முடிவுகளை நெதன்யாகு கடுமையாகத் தாக்கிப் பேசிய சில நாட்களிலேயே இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஓவல் அலுவலகத்தில் நெதன்யாகு உடனிருக்க, டிரம்ப் இதை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. ஹமாஸ் இந்தத் திட்டத்தை ஏற்க மறுத்தால், நெதன்யாகு "அவர் செய்ய வேண்டியதைச் செய்ய" அமெரிக்காவின் முழு ஆதரவு இருக்கும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
நீறுபூத்திருக்கும் கேள்விகள்:
இந்தத் திட்டம் பலருக்கு நம்பிக்கையளித்தாலும், மூன்று பெரிய கேள்விகள் உள்ளன:
ஹமாஸ் அதன் அதிகாரத்தையும் ஆயுதங்களையும் இழக்கக் கோரும் இந்த முன்மொழிவுக்குச் சம்மதிக்குமா?
இஸ்ரேலிய அரசாங்கத்தில் உள்ள நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி கூட்டாளிகளை அவரால் இதற்கு இணங்கச் செய்ய முடியுமா?
காஸாவின் மறுசீரமைப்பு வாரியத்தின் தலைவராக இருக்கும் டிரம்ப், இது ஒரு நீண்ட போராட்டமாக இருக்கும் நிலையிலும், இந்த அமைதி ஒப்பந்தத்தில் உறுதியாக நிற்பாரா?
அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் சிலரின் ஆதரவு இத்திட்டத்திற்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. மறுபுறம், கத்தார் பிரதமர் மற்றும் எகிப்திய உளவுத்துறைத் தலைவர் ஆகியோர் ஹமாஸ் பேச்சுவார்த்தையாளர்களைச் சந்தித்து டிரம்ப்பின் 20 அம்சத் திட்டத்தை முன்வைத்துள்ளதாக சிபிஎஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுவாரஸ்யமாக, ஹமாஸ் தலைமை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட முந்தைய வான்வழித் தாக்குதலுக்காகக் கத்தார் பிரதமரிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஓவல் அலுவலகச் சந்திப்பின் போது நெதன்யாகுவிடம் டிரம்ப் கேட்டுக்கொண்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
விமர்சனங்களும் எதிர்பார்ப்புகளும்:
அலெக்சான்டிரியாவில் உள்ள ஜெருசலேம் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு மையத்தின் மூத்த ஆய்வாளர் டாலியா ஸியாடா, டிரம்ப்பின் இந்தத் திட்டம் வெறும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை விட, "இஸ்ரேல்-பாலஸ்தீனிய மற்றும் இஸ்ரேல்-அரபு உறவுகளின் எதிர்காலத்திற்கான ஒரு விரிவான பார்வை. ஹமாஸின் ஒப்புதல் இல்லாமல், இஸ்ரேலுக்கும் அரபு-இஸ்லாமிய கூட்டமைப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்குவது இதுவே முதல் முறை. ஆனால், இத்திட்டத்தின் எதிர்மறையான அம்சங்களாக செயல்படுத்துதல் மற்றும் வரம்புகள் குறித்து ஆழமான விவாதங்களைக் கோரும் தெளிவற்ற பிரிவுகளால் நிறைந்துள்ளது. அரபு நாடுகளின் ஈடுபாடும் பொறுப்பும் இன்னும் மிகக் குறைவாகவே உள்ளன" என்றும் குறைபாடுகளை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த 'யுனைட் தி யூனியன்' அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் ஹோவர்ட் பெக்கெட் (Howard Beckett), இந்த 'அமைதி ஒப்பந்தம்' என்பது "காசாவைத் துண்டாடுவது தவிர வேறில்லை" என்று வெளிப்படையாகவே கடுமையாக விமர்சித்துள்ளார்.
விரிவான காலக்கெடு, வரைபடங்கள் போன்ற விவரங்கள் இன்னும் இந்தத் திட்டத்தில் இல்லாததே, திங்களன்று ஓவல் அலுவலக நிகழ்வு பத்திரிகையாளர் சந்திப்பாகப் பட்டியலிடப்பட்டிருந்தும் டிரம்ப் கேள்விகளை ஏற்க மறுத்ததற்குக் காரணம் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். இந்தத் திட்டம் எப்படி நடைமுறைப்படுத்தப்படும் என்ற கேள்விகளுக்கு விடைகள் காணப்பட வேண்டும்.
மொத்தத்தில், டிரம்ப்பின் இந்த 20 அம்சத் திட்டம் மத்தியக் கிழக்கு அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.