Kallaru Kadar tribes of Western Ghats : நம் நிலம், நம் மக்கள், நம் காடுகள், நமக்கான மலைவழிப் பாதைகள். இவை நமக்கானவை அன்று. நம்முடைய பொருளும் அன்று. நம் வருங்காலத்திற்காக நம் முன்னோர்களிடமிருந்து பெறப்பட்ட கடன் அது - சியாட்டில், செவ்விந்திய துவாமிஷ் இன மக்களின் தலைவர்.
மேற்கூறிய வரிகளுக்கு ஆயுள் 165 வருடங்கள். தம் மண்ணில் இருந்து வெளியேற்றப்படும் ஒவ்வொரு மனிதனுக்குமான வரிகளாக காலம் காலமாக தொடர்ந்து வலியினை தாங்கிக் கொண்டு அடுத்த தலைமுறையை தேடிச் செல்லும் வல்லமை இந்த வரிகளுக்கு உண்டு என்பதை உணர்த்தும் வரிகள்.
இந்த நுகர்வு கலாச்சாரத்தில் ஒரு அங்கமாய் வாழ நாம் அனைவரும் ஏதோ ஒருவகையில் நிர்பந்திக்கப்படுகின்றோம். நம்முடைய மொழிகளுக்கான வரலாறு புறக்கணிக்கப்படுகிறது. நம் கலைகளுக்கான அங்கீகாரங்கள் புறக்கணிக்கப்படுகிறது. சொந்த நாட்டிலேயே பலர் அகதிகளாக்கப்படுகின்றார்கள். சொந்த மண்ணிலே சிலர் அகதிகளாக, அலையோடிகளாக இங்கும் அங்கும் அலையவைக்கப்படுகின்றார்கள். போரால் அகதிகளாகும் மக்கள் குறித்து மட்டும் தான் இலக்கியமும் வரலாறும் பாடும். ஆனால் கட்டுமான பணிகளுக்காக, சாலை பணிகளுக்காக, மின்சார வசதிகள் உருவாக்கத்திற்காக, ராணுவ பயிற்சிப் பள்ளிகளுக்காக, தொழிற்சாலைகளுக்காக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் நகர்த்தப்படும் மக்கள் குறித்து நாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அது எங்கோ, இந்த நகர வாழ்க்கைக்கு அப்பால், பல மைல்கள் தொலைவில், விவசாய நிலங்களிலோ அல்லது மலை முகடுகளிலோ நடைபெறுவதால் அதற்கு அத்தனை முக்கியத்துவமும் தரப்படுவதில்லை.
Kallaru Kadar tribes of Western Ghats
நஷ்டத்திற்கு ஈடாக பணம் தரப்படலாம் அல்லது வேறொரு பக்கம் நிலமும் வழங்கப்படலாம். ஆனால் அதில் இருக்கும் சாதக பாதகங்கள் குறித்து மக்களிடம் கருத்து கேட்பார் யாரும் இல்லை என்பது தான் உண்மை. பொதுவாக நோட்டீஸ் கொடுத்து, காலக்கெடு கொடுத்து இடம் நகர்த்துவதற்கு பதிலாக, விடியும் முன்பு காலி செய்துவிடுங்கள் என்று அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடுவது தான் வழக்கமாக இருக்கிறது.
சமீபமாக தமிழக - கேரள எல்லையாக இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையில் கொட்டித்தீர்த்த கனமழையால் பல பழங்குடியினர் தங்களின் தங்கல்களில் இருந்து வேறு இடங்களுக்கு நகரும் சூழல் உருவாகியது. ஆனைமலைத் தொடரில் அமைந்திருக்கும் வால்பாறையில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவுக்கு அப்பால் அமைந்துள்ளது கல்லாறு. அங்கு காடர் பழங்குடியினர் வெகு ஆண்டுகளாக காடுகளுக்குள் வாழ்ந்து வருகின்றனர்.
கல்லாறு காடர்மார்கள் வசித்து வந்த 'தங்கல்’ நிலச்சரிவின் காரணமாக முற்றிலுமாக சேதமடைய, அருகில் இருக்கும் அவர்களுடைய சோலைகளில் புதிதாக அமைவிடங்களை கட்ட ஆரம்பித்தனர். ஆனால், வனத்துறையினர், அவர்களை உடனே அவ்விடத்தில் இருக்கும் அமைவிடங்களை நீக்கிவிட உத்தரவிட்டதோடு, அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் துரிதமாக செயல்பட்டனர். கல்லாறு காடர் இனமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய வனத்துறையினர், அவர்களை தாய்முடியில் அமைந்திருக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புப் பகுதியில் தங்குமாறும், இன்னும் 10 நாட்களில் அவர்களின் காட்டு சோலையிலேயே புதிய வசதிகளுடன் தங்கல் ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் அவர்கள் தற்போது ஒரு மாதத்திற்கும் மேலாக தாய்முடி எஸ்டேட்டில் வசித்து வருகின்றார்கள். இருக்க நல்ல இடம், மேலே திடமான கூரை, நல்ல சுவர்கள், மின்சார வசதி - இவை இருந்தால் போதுமே ஏன் காட்டுக்குள்ளே தான் வாழ வேண்டுமா என்று கேள்விகள் கேட்பவர்கள் ஏராளம். ஆனால் அவர்களின் கருத்து என்றும் போல் இன்றும் கேட்கப்படாமல் நின்றுவிடக்கூடாது என்பதால் மேற்குத் தொடர்ச்சி மலை நோக்கி பயணம் செய்தோம்.
கல்லாறு காடர் தங்கலில் மொத்தம் 23 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்களின் மொத்த எண்ணிக்கை என்பது வெறும் எண்பது தான். ஆனால் கல்லாறு காடர் பகுதிகளில் மட்டும் இல்லாமல், டாப்சிலிப் பகுதிகளில் இருக்கும் இரண்டு காடர் குடியிருப்பு பகுதிகளில் இருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. கல்லாறு காடர்கள் 80 பேர் 6 வீடுகளில் வசித்து வந்தது தான் மிகவும் கொடுமையானதாக இருந்தது. ஒவ்வொரு வீடுகளிலும் சுமார் மூன்று குடும்பங்கள் தங்கயிருந்தன. ஒரு சில வீடுகளில் சீரான கழிவறையும் இல்லை.
தமிழகத்தில் வாழும் பழங்குடிகளில் பெரும்பாலானோர் மலைகளை நம்பியே வாழ்கின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தமிழக எல்லையை ஒட்டி காடர், முதுவர், மலசர், மற்றும் புலையர் போன்ற பழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். காடர்கள் மட்டுமே கவர்க்கல், கல்லாறு, உடும்பன்பாறை, நெடுங்குன்றம், ஈத்தக்குளி, எருமைப்பாறை உள்ளிட்ட இடங்களில் இருக்கும் காடுகளில் வசித்து வருகின்றனர்.
பொதுவாக இந்த இனத்தின் தலைவர் 'மூப்பர்’ உத்தரவு இட்டால் மட்டுமே மற்றவர்கள் இந்த பிரச்சனை குறித்து வெளியாட்களிடம் பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். மூப்பரிடம் உத்தரவு கேட்பதற்கும், தாய்முடியில் காடர் இன மக்களை சந்திப்பதிற்கும் பெரிய அளவில் உறுதுணையாக இருந்தார்கள் உள்ளூர் பத்திரிக்கையாளர் சிவஞானம் மற்றும் பழங்குடி நல அமைப்பு செயலாளர் ரவி.
சிரித்த முகத்துடன் எங்களை வரவேற்ற அவ்வின மக்கள், அவர்களின் சூழல் குறித்து எங்களிடம் விளக்கினார்கள். அவ்வினத்தை சேர்ந்த சுந்தரி என்ற வயதான பெண்மணி “நாங்கள் இருந்த மண்ணில் வெடிப்பு ஏற்பட்ட பின்னு, உசுருக்கு பயந்து எங்க வனத்தில, எங்க சோலைல தான் குடிசை போட்டோம். ஆனா ஃபாரஸ்ட்காரங்க அங்கன இருக்க வேணாம்... நாங்க டீ எஸ்டேட்ல எடம் பாத்து தர்றோம். 10 நாள் வாய்தா கொடுத்தாங்க... 11வது நாள் நாங்க எங்க வனத்துக்கு போய்க்கலாமுனு சொன்னாங்கோ. ஆனா ஒரு மாசத்துக்கும் மேல ஆச்சு... அங்க நாங்க சுதந்திரமா இருந்தோம். நல்ல காத்து, நல்ல தண்ணி, நல்ல இடம் கெடக்கும்... இங்கன வரும் போது இங்கன எல்லாத்துக்கும் உடம்புக்கு சரியில்லாம போச்சு. எல்லாருக்கும் வயித்தால, காச்சலாகிப் போட்டு” என்று உடம்புக்கு முடியாத நிலையிலும் வருத்தத்துடன் பேசினார் சுந்தரி.
ஒரு மாதம் உங்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது?
காட்டில் இருக்கும் போது இஞ்சி, மஞ்சள், தேனை நாங்க கடைல கொடுத்து தேவையானத நாங்க வாங்கிக்குவோம். எங்களுக்கு காட்ல எல்லாமே கெடைக்குது. இங்க இருக்குறதே எங்களுக்கு கஷ்டம் தான். காட்ல வாழ்றவங்களுக்கு காடு தான் நல்லது. காட்ல இருந்த தான் நாங்க நல்லா இருப்போம். இங்க வந்து நாங்க ரொம்ப கஷ்டப்படுறோம். நமக்கு காடு தான் இஷ்டம். இருக்குறத வைச்சு சாப்ட்டுட்டு வீட்ல இருக்கோம். எங்களுக்கு பணம் இல்லாம இருந்தாலும் பரவாயில்லை. எங்களுக்கு ஒன்னும் வேணாம். கையில் இருக்குறது கொறையற வரைக்கும் இங்கன இருப்போம். அதுக்குள்ள எங்க நெலம் எங்களுக்கு வேணும்னு தான் நாங்க போராடுரோம்” என்று கூறினார் அப்பெண்மணி. ஒரு மாத காலத்திற்கும் மேலாக காட்டு வேலை ஏதும் இல்லாமல், உடல் நிலையை சரி செய்து கொள்வதற்காக மருத்துவமனை செல்வதும் பின்னர் வீட்டில் வந்து இரண்டு வேளை உணவுகளோடு ஓய்வெடுத்துக் கொள்வதுமாக இருக்கின்றார்கள்.
குழந்தைகள், இளம்பெண்கள், வயதானவர்கள், ஆண்கள், பெண்கள் என பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரே வீட்டில் வசித்து வருவது கொஞ்சம் கொடுமையானதாகவே இருந்தது. இது குறித்து அப்பகுதியில் வாழும் தேயிலை தோட்டத் தொழிலாளி பன்னீர் செல்வம் குறிப்பிடுகையில் “ஆம்பளைங்க, பொம்பளைங்கன்னு எல்லாரும் ஒரே எடத்த பொழங்குறாங்க... வீட்டுக்கு தூரமானா, பொண்ணுங்க நெலமை ரொம்ப மோசமாகிடுதுமா... அங்கனயே தூங்கி எழுந்து... ரொம்ப செரமப்படுறாங்கம்மா” என்று வருத்தம் தெரிவித்தார்.
இவ்வினத்தை சேர்ந்த மக்களின் குழந்தைகள் சிலர் வால்பாறை மற்றும் கோவை போன்ற பகுதிகளில் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். கல்லூரிக்கும் செல்லும் மாணவிகள் குறித்தும் நாங்கள் கேட்டறிந்தோம். மாதம் ஒன்றுக்கு அப்பள்ளி, கல்லூரி மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பணம் அனுப்ப வேண்டும் என்ற சூழலில் ஒரு மாதம், தங்களுக்கு அந்நியப்பட்ட ஊரில் அவர்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் வேலையும், வருமானமும் கேள்விக்குறியான போது அவர்கள் கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். வருடத்திற்கு ஒரு முறை நெல், சாமை என்று வெள்ளாமை செய்யும் மக்களுக்கு இது ஒரு வித கூடுதல் சுமையைத் தான் உருவாக்குகிறது.
காட்டைத் தாண்டி வெளியே வாழும் மக்களின் உசுருக்கு என்றும் பாதுகாப்பில்லை. நாங்கள் மனித நடமாட்டத்திற்கு அப்பால் 3-4 கிலோ மீட்டர் தள்ளி, காடுகளில் வாழ்கின்றோம். எங்கள் குடியிருப்பில் மொத்தம் 23 குடும்பங்கள் உள்ளன. ஆனால் கவர்மெண்ட்டால் எங்களை பாதுகாக்க இயலவில்லை. பிரச்சனை என்றாலும் கூட எங்களை யாரும் கண்டு கொள்வதில்லை. எங்களின் கூரைகளுக்கு பதிலாக அவர்கள் தகரச்சீட்டு 2003ம் ஆண்டு கொடுத்தார்கள். 14 வருடங்களை அது கடந்து விட்டது. சோலார் கொடுக்கப்பட்டது. 10 வருட கேரண்ட்டியுடன் தான் தந்தார்கள். ஆனால் 3 வருடம் வரை தான் வருகிறது. வெளிச்சம் இருந்தால் மட்டும் லைட் எரியும். ஆனால் மழை காலத்தில் அதனால் ஒரு பயனும் இல்லை என்று கூறிய மங்கலசாமி மேலும் தொடர்ந்தார்.
கடந்த மூனு வருசம் பேஞ்ச மழையால எங்க பூமி வலுவிழந்து போச்சுன்னு சொல்லி நாங்க வேறப்பக்கம் எங்க 'தங்கலை’ அமைச்சுக்க ஃபாரஸ்ட் ஆளுங்ககிட்ட அனுமதி கேட்டோம். ஆனா அவங்க தரல. பெருசா மழை பெய்றதுக்குள்ள வேறப்பக்கம் போய்க்கல்லாம்னு வேறபக்கம், காட்டுக்குள்ளயே குடுசை போட்டோம்ங்க. ஆனா அது கம்ப்ளைண்ட் ஆயிட்டது. ஃபாரஸ்ட் காரங்க, காட்டுக்குள்ள இருந்தாக்க ஆபத்து. உசுருக்கு உத்தரவாதம் இல்லன்னு இந்த எஸ்டேட்ல தங்க வைச்சுட்டாங்க. இந்த ஃபாரஸ்ட்காரங்க, கவர்மெண்ட்டு ஆபிசருங்கன்னு யாரு வந்தாலும் நாங்க தான் 4 கி.மீ, வெலங்குங்க, ஆபத்துங்ககிட்ட இருந்து காப்பாத்தி எங்க தங்கலுக்கு கூப்புட்டு போவோம். எங்களால யாருக்கும் எந்த ஆபத்தும் இல்ல. காட்டு வெலங்குகளுக்கும் எந்த தொந்தரவும் இல்ல. ஆனா நாங்க காட்டுல இருக்கக் கூடாதுன்னு வெளில அனுப்பிட்டாங்க என்று வருந்தினார் அவர்.
வருடத்திற்கு ஒரு காடு வெள்ளாமை எடுப்பது இவர்களின் வழக்கம். நெல், ராகி, சோளம், திணை வெள்ளாமை செய்வோம். பின்பு காடுகளை அழிக்கக் கூடாது என்று சட்டம் வரவும், வீட்டிற்கு அருகே இருக்கும் சிறு நிலப்பரப்பில் மரவள்ளிக் கிழங்கு விவசாயம் செய்து வருகின்றனர். அதில் கிடைக்கும் மகசூலை டீ எஸ்டேட்டில் விற்பனை கூறுகட்டி விற்று வரும் பணத்தில் தான் இவர்களின் ஆண்டு செலவு. அந்த பணத்தை வைத்து வால்பாறை சந்தையில் இவர்கள் வெல்லம், மிளகு, மல்லி, தேயிலை, உப்பு, எண்ணெய் ஆகியவற்றை மட்டுமே வாங்கி பயன்படுத்துகிறார்கள். நுகர்வோர் கலாச்சாரத்தில் இவர்கள் தான் முதன்மையான உற்பத்தியாளர்கள். ஆனால் இந்த கலாச்சாரத்தில் அவர்களின் ஈடுபாடும் அவர்கள் அடையும் பயனும் மிகவும் குறைவு. குழந்தைகள் அனைவரும் இப்போது தான் படிக்க ஆரம்பிக்கின்றார்கள். யாரும் பெரிய இடங்களில் வேலை பார்க்கவில்லை. அலுவலகம் செல்பவர்களும் இல்லை. பெண்கள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பி.ஏ. ஆங்கிலம் பட்டம் பெற்றிருக்கிறார் ஒரு பெண். ஆனாலும் அவரால் ஆசிரியராக இயலவில்லை. அவர் கோத்தகிரியில் இருக்கும் கல்லூரி ஒன்றின் விடுதி வார்டனாக வேலை பார்த்து வருகின்றார்.
அரசு தரப்பு இதற்கு என்ன பதில் அளிக்கிறது?
புலிகள் காப்பகத்தினுள் வேறு இடங்களில் மக்கள் தங்க அனுமதி இல்லை. இதனை எதிர்த்து போடப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும் இதற்கான முறையான கமிட்டி அமைத்து இம்மக்களின் பிரச்சனைகள் குறித்து அறியவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் முடிவு வரும் வரையில் அவர்கள் அங்கு தான் தங்க வேண்டும். வேறு இடங்களில் தங்க அனுமதி இல்லை.
டாப்-ஸ்லிப் பகுதியில் அமைந்திருக்கும் சர்க்கார்பதி செட்டில்மெண்ட் முழுவதுமாக மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. அதற்கு மாற்று ஏற்பாடுகளை பொள்ளாச்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அவர்களின் வனங்களுக்கு அருகிலேயே புதிய அமைவிடங்கள் ஏற்பாடாகி வருகின்றது. இந்த பகுதி புலிகள் காப்பக எல்லைக்குள் வரவில்லை என்பதால் காட்டுக்குள் அமைவிடங்களை அமைக்க எந்த வித பிரச்சனையும் இல்லை என்று பொள்ளாச்சி டிவிசனல் கலெக்டர் ஆர். ரவிக்குமார் அறிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.