மீண்டும் வந்துவிட்டது 'லா நினா': இந்த முறை இந்தியாவின் குளிர்காலம் எப்படி இருக்கும்?

அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, லா நினா நிலைமைகள் டிசம்பர் 2025 முதல் பிப்ரவரி 2026 வரை நீடிக்கவே வாய்ப்புள்ளது.

அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, லா நினா நிலைமைகள் டிசம்பர் 2025 முதல் பிப்ரவரி 2026 வரை நீடிக்கவே வாய்ப்புள்ளது.

author-image
abhisudha
New Update
la niña

India may witness a colder winter: What is La Niña?

மத்தியப் பசிபிக் கடலின் பூமத்திய ரேகை பகுதியில் 'லா நினா' (La Niña) காலநிலை நிகழ்வு மீண்டும் தலைதூக்கியுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் இது ஐந்தாவது முறையாக உருவாகியுள்ளது என வானிலை ஆய்வாளர்கள் கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 9) அறிவித்துள்ளனர்.

Advertisment

பருவநிலை மாற்றங்களை ஏற்படுத்தும் இந்தக் குளிர்ச்சியான நிகழ்வு, வெப்பத்தைக் குறைக்கும் திறன் கொண்டது. ஆனால், இந்த முறை 'லா நினா' வலிமை குறைவாகவும், குறுகிய காலத்திற்கே நீடிக்கவும் வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

"செப்டம்பர் 2025-இல் 'லா நினா' நிலைமைகள் வெளிப்பட்டன... சுருக்கமாகச் சொன்னால், 'லா நினா' நிலைமைகள் உள்ளன, அவை டிசம்பர் 2025 முதல் பிப்ரவரி 2026 வரை நீடிக்கும்," என்று அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில், 'லா நினா' என்றால் என்ன, இது இந்தியாவுக்கு என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம் வாங்க!

Advertisment
Advertisements

'லா நினா' என்றால் என்ன?

'லா நினா' என்பது எல் நீனோ தெற்கத்திய அலைவு (El Niño Southern Oscillation - ENSO) எனப்படும் ஒரு பெரிய காலநிலை நிகழ்வின் ஒரு கட்டமாகும். இந்த எல் நீனோ தெற்கத்திய அலைவு (ENSO), பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள மத்திய மற்றும் கிழக்குப் பசிபிக் பெருங்கடலின் கடல் மேற்பரப்பு வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களால் உருவாகிறது. உலகளாவிய வளிமண்டல சுழற்சியைத் தாக்கி, உலகின் பல பகுதிகளின் வானிலையை இது தீர்மானிக்கிறது.

எல் நீனோ தெற்கத்திய அலைவுக்கு (ENSO) மூன்று கட்டங்கள் உண்டு:

எல் நீனோ (El Niño): கடல் வெப்பநிலை வழக்கத்தைவிட சூடாக இருக்கும்.

லா நினா (La Niña): கடல் வெப்பநிலை வழக்கத்தைவிடக் குளிர்ந்து காணப்படும்.

நடுநிலை (Neutral): இயல்பான வெப்பநிலை இருக்கும்.

கடலில் நடக்கும் விந்தை!

பொதுவாக, பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதி (தென் அமெரிக்காவின் மேற்குப் பகுதி) மேற்குப் பகுதியைவிடக் குளிர்ச்சியாக இருக்கும். இதற்குக் காரணம், கிழக்கிலிருந்து மேற்காக வீசும் பலத்த காற்று (வர்த்தகக் காற்று). இந்தக் காற்று, கடல் மேற்பரப்பில் உள்ள வெப்பமான நீரை இந்தோனேசியா போன்ற மேற்குப் பகுதிக்குத் தள்ளிவிடுகிறது. இதனால், கிழக்கில் உள்ள குளிர்ந்த நீர் மேலே வந்து, விடுபட்ட இடத்தை நிரப்புகிறது.

எல் நீனோவின்போது: இந்த வர்த்தகக் காற்று பலவீனமடையும். இதனால், வெப்பமான நீர் கிழக்குப் பகுதியிலேயே தங்கி, வழக்கத்தைவிடக் கடல் சூடாகும்.

லா நினாவின்போது: வர்த்தகக் காற்று வழக்கத்தைவிட பலமடையும். இதனால் அதிக அளவு வெப்பமான நீர் மேற்குப் பகுதிக்குத் தள்ளப்படும், கிழக்குப் பகுதி மிகவும் குளிர்ந்து காணப்படும். 'லா நினா' என்ற ஸ்பானிஷ் சொல்லுக்கு 'சின்னப் பெண்' என்று பொருள்!

இந்தியாவுக்கு என்னென்ன பாதிப்புகள்?

இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த இரண்டு நிகழ்வுகளும் முக்கியமானவை.

எல் நீனோ பொதுவாக மழைப்பொழிவைக் குறைத்து, வெப்பநிலையை அதிகரிக்கும். அதாவது, கோடைக்காலம் மிகவும் வெப்பமாக இருக்கலாம்.

லா நினா பொதுவாக அதிக மழைப்பொழிவுக்கும், அதனால் வெப்பநிலை குறைவதற்கும் வழிவகுக்கும்.

இந்த 'லா நினா' இந்தியாவுக்கு என்ன தரும்?

இந்த முறை உருவாகியுள்ள 'லா நினா' காரணமாக, இந்தியாவின் பல பகுதிகளில், குறிப்பாக வட இந்தியப் பகுதிகளில், வழக்கத்தைவிடக் குளிர் அதிகமாக இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கடுமையான குளிர் காலம்: வட இந்தியாவில் நீண்ட குளிரலைகளும் (Cold Waves), மலைப்பகுதிகளில் அதிக பனிப்பொழிவும் ஏற்படலாம். இது விவசாயம் மற்றும் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கலாம்.

அதிக மழைப்பொழிவு: 'லா நினா' நிலவும் ஆண்டுகளில், இந்தியாவின் தென்மேற்குப் பருவமழை சிறப்பாக இருக்கும். வடகிழக்குப் பருவமழையும் சில நேரங்களில் வலுப்பெற்று, தமிழகம் மற்றும் ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் அதிக மழைக்கும் புயல் உருவாக்கத்திற்கும் வழிவகுக்கலாம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

ஆனால், எச்சரிக்கை மணி!

'லா நினா' இருந்தால் குளிர் அதிகமாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது. இதற்கு முக்கியக் காரணம், புவி வெப்பமடைதல் (Global Warming). மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றம், 'லா நினா'வின் குளிர்விக்கும் விளைவைக் குறைத்துவிடலாம்.

உலக வானிலை அமைப்பும் (WMO) இதைத்தான் சொல்கிறது. "பொதுவாக, 'லா நினா' நிகழ்வு, வெப்பத்தைக் குறைக்கும். ஆனால், மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்தின் பரந்த சூழலில் இது நடக்கிறது. இதனால், உலகளாவிய வெப்பநிலை அதிகரிக்கிறது. எனவே, 'லா நினா' இருந்தாலும் உலக சராசரி வெப்பநிலை இயல்பைவிட அதிகமாகவே இருக்கும்" என்று எச்சரித்துள்ளது.

இந்த செய்தியை ஆங்கில மொழியில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்!

Climate Change

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: