வித்யா கெளரி வெங்கடேஷ்
எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி (1899-1954) எழுதிய பொன்னியின் செல்வன், வரலாற்றுப் புனைகதைகளில் மிகவும் பிரபலமான படைப்பு. இந்த நாவலால் ஈர்க்கப்பட்டு, இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்- 1 படத்தின் வெளியீட்டிற்காக இப்போது திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த நாவலின் நீடித்த புகழ், சோழர் ஆட்சியைச் சுற்றி பின்னப்பட்ட ஒரு கதை மூலம் தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
புதினம்
பொன்னியின் செல்வன் என்றால் பொன்னியின் (காவிரி நதி) மகன் என்று பொருள். இந்த நாவல், எழுத்தாளரும் சுதந்திர போராட்ட வீரருமான கல்கி கிருஷ்ணமூர்த்தியால் எழுதப்பட்டது, மேலும் 1950-54 வரை தமிழ் இதழான ‘கல்கி’யில் வாரந்தோறும் தொடராக வெளிவந்தது. இது பின்னர் 1955 இல் ஒரு புத்தக வடிவில் வெளியிடப்பட்டது. இது அருண்மொழி வர்மனாகப் பிறந்து சோழ அரசர்களில் மிகப் பெரியவனாகக் கருதப்படும் முதலாம் இராஜராஜனின் ஆரம்ப நாட்களின் கதையைச் சொல்கிறது.
உலக வரலாற்றில், மிக நீண்ட பதிவு செய்யப்பட்ட வம்சங்களில், சோழர்களும் ஒருவராக உள்ளனர். அவர்களின் ஆட்சி ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டுகளில் உச்சத்தில் இருந்தது. இக்காலத்தில் துங்கபத்ரா ஆற்றின் தெற்கே உள்ள முழுப் பகுதியும் சோழர்களின் கீழ் ஒரே பிரிவாக கொண்டு வரப்பட்டது.
தொல்பொருளியல் நிபுணர் சாரதா சீனிவாசன் முன்னதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில் "கலை மற்றும் கட்டிடக்கலையில் சாதனைகள், எழுத்து மற்றும் கல்வெட்டு பதிவுகளின் செல்வத்தின் அடிப்படையில், சோழர்கள் தென்னிந்திய வரலாற்றில் பணக்கார வம்சங்களில் ஒருவராக இருந்ததாக" கூறினார்.
இந்த நாவல் புனைகதையாக இருந்தாலும், இது சோழ வம்சத்தின் கதாபாத்திரங்களை உள்ளடக்கியது.
பத்தாண்டுகளுக்கு முன்பு காவிரி மைந்தன் என்ற தலைப்பில் பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியை எழுதிய எழுத்தாளர் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் கூறுகையில்: தமிழக வரலாற்றை மக்களுக்கு உணர்த்தும் சிறந்த நூல் இது என்பதை யாரும் மறுக்க முடியாது, புத்தகத்தைப் படிக்கும் மக்கள், நம் மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றைப் பற்றி படிக்க முயற்சி செய்வார்கள்.
இருப்பினும், 10 ஆம் நூற்றாண்டின் சோழர் ஆட்சியின் போது நடந்த முறைகேடுகளைப் புறக்கணித்ததற்காக, நாவல் நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதன் கதைக்களத்துடன் ‘வாசகனைப் பற்றிக் கொள்ளும்’ நாவல், பல வருடங்களுக்குப் பிறகும் இன்றும் தமிழில் அதிகம் விற்பனையாகும் நாவலாக இது திகழ்வதற்கு இதுவே காரணம் என்றார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் சிற்பக்கலைத் துறையில் பணிபுரியும் பேராசிரியர் கந்தன், “புத்தகத்தின் பக்கங்களைப் படிக்கும்போது, கே.ஏ. நீலகண்டன் சாஸ்திரி எழுதிய சோழஸ் (Cholas) என்ற ஆங்கில நாவலை என்னால் நன்றாக இணைக்க முடிந்தது. தென்னிந்தியாவில் சோழர்களின் ஆட்சியின் போது என்ன நடந்தது என்பதுதான் புத்தகம். பொன்னியின் செல்வனுக்கான ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக கல்கி கிருஷ்ணமூர்த்தியும் இந்த புத்தகத்தைப் படித்திருப்பார் என்று நான் நம்புகிறேன். இன்றும் சோழர்களின் புத்தகம் ஆசிரியர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பைபிள் போன்றது.
நூலாசிரியர்
1899 இல் பிறந்த ஆர் கிருஷ்ணமூர்த்தி ஒரு எழுத்தாளர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர், அவர் கல்கி என்ற புனைப்பெயரில் பல சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், பயணக் குறிப்புகள் மற்றும் சுயசரிதைகளை எழுதியுள்ளார். மேலும் அதே தலைப்பில் ஒரு வார தமிழ் இதழையும் நடத்தினார்.
கல்கியின் பெரும்பாலான நாவல்கள், அவரது கதை சொல்லல் மற்றும் அவரது எழுத்துக்களில் நகைச்சுவை ஆகியவற்றால் வெற்றி பெற்றன. அவரது பெரும்பாலான படைப்புகள் இந்தியாவின், குறிப்பாக தமிழ்நாட்டின் கலாச்சார மற்றும் சமூக அம்சங்களைச் சுற்றியே இருந்தன.
அவரது பல படைப்புகள் ஏற்கனவே சின்னதிரைக்காக தழுவி எடுக்கப்பட்டுள்ளன, தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.
பொன்னியின் செல்வன் தவிர, தியாக பூமி (1937), சோலைமலை இளவரசி (1947), மகுடபதி (1942), அபலையின் கண்ணீர் (1947) அலை ஓசை (1948), தேவகியின் கனவு (1950), பொய்மான் கரடு (1950), புன்னைவனத்துப்புலி (1952), பார்த்திபன் கனவு (1941-42) ஆகியவை கல்கியின் புகழ்பெற்ற நாவல்களில் சில. இப்படி புகழ்பெற்ற விளங்கிய கிருஷ்ணமூர்த்தி, 1954 இல் காசநோயால் இறந்தார்.
நீடித்த புகழ்
தமிழில் அதிகம் விற்பனையாகும் நாவல்களில் பொன்னியின் செல்வனும் ஒன்று, அது வெளிவந்து 72 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்ந்து விற்பனையாகிறது. சில மதிப்பீடுகளின்படி, அதன் ஆண்டு விற்பனை இப்போதும் சுமார் 1,00,000 பிரதிகள் வரை தொடர்கிறது. இது தொடர்ந்து புதிய வாசகர்களைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் மீதான மக்களின் ஆர்வத்தைத் தூண்டுவதற்கும் இது பெருமை பெற்றது.
சென்னையைச் சேர்ந்த ஐடி ஊழியர் புஷ்பலதா, சமீபத்தில் புத்தகத்தைப் படித்து, “ஆசிரியர் கல்கி கிருஷ்ணமூர்த்தி வரலாற்றிலிருந்து சில பகுதிகளை எடுத்து, சோழர்கள் ஆண்ட இடங்களுக்குச் சென்று, தனது சொந்த கற்பனையால் கதையை எழுதியுள்ளார்.
ஒரு அத்தியாயத்தில் அவர் கூறுகிறார்; ராஜராஜ சோழனின் (அருண்மொழி வர்மன்) மூத்த சகோதரியான குந்தவை, தர்மம் செய்வதில் நம்பிக்கை கொண்டிருந்தாள், சிறந்த நிர்வாகத் திறன்களைக் கொண்டிருந்தாள், மேலும் அவள் பல வைத்தியசாலைகளையும் கட்டினாள். இன்றும் தஞ்சாவூரில் அவற்றைப் பார்க்கலாம் என்றார்.
தஞ்சாவூரைச் சேர்ந்த மற்றொரு வாசகர் சித்தார்த்தா, ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்கு முன்பு புத்தகத்தைப் படித்தார்: "நான் என் வாழ்நாள் முழுவதும் தஞ்சாவூரில் வாழ்ந்தேன், ஆனால் நான் புத்தகத்தைப் படித்த பிறகு சோழர்களால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோயிலுக்குச் சென்றபோது, ஆசிரியர் விளக்கியதைப் போல நான் பெருமையுடன் மற்றும் முற்றிலும் மாறுபட்ட வெளிச்சத்தில் கோயிலைப் பார்க்க முடிந்தது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.