scorecardresearch

ஜி20 அமைப்புக்கு தலைமை ஏற்கும் இந்தியா.. லோகோவில் ‘தாமரை ‘.. மோடி விளக்கம்!

இந்தியா ஜி20 கூட்டமைப்புக்கு தலைமை ஏற்க உள்ள நிலையில், அதற்கான இலச்சினை , கருப்பொருள் மற்றும் இணையதளத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

ஜி20 அமைப்புக்கு தலைமை ஏற்கும் இந்தியா.. லோகோவில் ‘தாமரை ‘.. மோடி விளக்கம்!

ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா வரும் டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து தலைமை ஏற்கிறது. இதையொட்டி இதற்கான இலச்சினை (Logo), கருப்பொருள் (Theme) மற்றும் இணையதளத்தை (Website) பிரதமர் நரேந்திர மோடி நேற்று (நவம்பர் 8) வெளியிட்டார். இலச்சினையில் தாமரை இருப்பது போலும், ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் ‘ என்ற கருப்பொருளும் கூறப்பட்டுள்ளது.

பா.ஜ.கவின் தேர்தல் சின்னமான தாமரை இலச்சினையில் இடம் பெற்றுள்ளது விவாதப் பொருளாகி உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதை விமர்சனம் செய்துள்ளனர். இந்தியாவின் தேசிய கொடியில் உள்ள 4 வண்ணங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள அந்த இலச்சினையில், தாமரை மீது பூமிப்பந்து இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இலச்சினைக்கான விளக்கத்தையும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஜி20 உருவாக்கம்

1990 களின் பிற்பகுதியில் கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடியின் பின்னணியில் 1999-ம் ஆண்டு ஜி20 (G20) உருவாக்கப்பட்டது. Middle-income countries (நடுத்தர வருமான நாடுகளை) உள்ளடக்கி உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிபடுத்துவதே இதன் நோக்கமாகும். ஜி20 உறுப்பு நாடுகள்: ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, ஜப்பான், கொரியா, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம். ஸ்பெயின் நிரந்தர விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளது.

ஜி20 என்பது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85%, உலகளாவிய வர்த்தகத்தில் 75% மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்ட சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை அமைப்பாகும்.

ஜி20 தலைமையின் போது, இந்தியாவின் பல இடங்களில் 32 வெவ்வேறு துறைகளில் சுமார் 200 கூட்டங்களை இந்தியா நடத்தும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாடு, இந்தியாவால் நடத்தப்படும் மிக உயரிய சர்வதேசக் கூட்டங்களில் ஒன்றாக இருக்கும். ஜி20 தலைவர் பதவி ஒவ்வொரு ஆண்டும் சுழற்றி முறையில் ஒவ்வொரு நாட்டிற்கு வழங்கப்படும்.

இந்தியா டிசம்பர் 1-ம் தேதி தற்போதைய தலைவரான இந்தோனேசியாவிடமிருந்து பொறுப்பை பெற்று 1 வருடம் பதவியில் இருக்கும். இந்தியாவில் ஜி20 உச்சி மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10, 2023-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற உள்ளது.

ஜி20 எவ்வாறு செயல்படுகிறது?

ஜி20-க்கு என்று நிரந்தர செயலகம் இல்லை. நிகழ்ச்சி நிரல் பணியும் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகளால் ஒருங்கிணைக்கப்படுகிறது. அவர்கள் ‘ஷெர்பாஸ்’ (Sherpas)என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். தற்போது பியூஷ் கோயல் இந்தியாவிற்கான ஷெர்பாஸ்-ஆக உள்ளார். இவருக்குப் பிறகு நிதி ஆயோக் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் ஷெர்பாஸ்-ஆக செயல்படுவார் என இந்தியா அறிவித்துள்ளது.

மோடியின் லோகோ விளக்கம்

“நூற்றாண்டுகளில் இல்லாத பெருந்தொற்றை உலகம் சந்தித்து அதை கடந்து வருகிறது. பொருளாதாரம் மற்றும் பிரச்சனைகளிலிருந்து மீண்டு வருகிறது. ஜி20 இலச்சினையில் உள்ள தாமரையின் சின்னம் இந்த காலத்திற்கான நம்பிக்கையின் அடையாளம். எவ்வளவு மோசமான சூழல்கள் வந்தாலும் தாமரை மலரும்” என்று பிரதமர் மோடி கூறினார்.

மேலும், ‘இந்தியாவை ஜனநாயகத்தின் தாய்’ என்று கூறினார். முதல் உலகமோ மூன்றாம் உலகமோ இல்லை, ஒரே உலகம்தான் என்பதை உறுதி செய்வதே இந்தியாவின் முயற்சியாக இருக்கும் என்றார்.

காங்கிரஸ் விமர்சனம்

ஜி20 அமைப்பிற்கான இலச்சினையில் பா.ஜ.கவின் தாமரை சின்னம் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோடியும் பா.ஜ.கவும் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ளும் எந்த ஒரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள வெட்கப்படுவதே இல்லை என்பது நாம் அறிந்ததுதான் என்று காங்கிரஸ் கட்சி ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Pm modi unveils g20 logo significance of the lotus on it