Advertisment

ஜம்மு காஷ்மீர் புதிய சமூக குழுக்களுக்கு எஸ்.டி, ஓ.பி.சி பரிந்துரை: பா.ஜ.க-வுக்கு தேர்தலில் என்ன லாபம்?

நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மசோதா, பழங்குடியினரின் உரிமைகள் மற்றும் அதிகாரமளிப்பை நீர்த்துப் போகச் செய்யும் என்று அஞ்சும் எஸ்டி பிரிவில் உள்ள குஜ்ஜார்-பேக்கர்வால்-களின் எதிர்ப்பைத் தூண்டியுள்ளது.

author-image
Balaji E
New Update
paharis, Jammu and Kashmir, paddari, Gujjar bakerwal, ஜம்மு காஷ்மீர் புதிய சமூக குழுக்களுக்கு எஸ்டி, ஓ.பி.சி இடஒதுக்கீடு பரிந்துரை, பா.ஜ.க எப்படி தேர்தலில் பயனடையும், ஜம்மு காஷ்மீர், express explained, Tamil indian express

ஜம்மு காஷ்மீர் புதிய சமூக குழுக்களுக்கு எஸ்டி, ஓ.பி.சி இடஒதுக்கீடு பரிந்துரை: பா.ஜ.க எப்படி தேர்தலில் பயனடையும்?

நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மசோதா, பழங்குடியினரின் உரிமைகள் மற்றும் அதிகாரமளிப்பை நீர்த்துப் போகச் செய்யும் என்று அஞ்சும் எஸ்டி பிரிவில் உள்ள குஜ்ஜார்-பேக்கர்வால்-களின் எதிர்ப்பைத் தூண்டியுள்ளது. இந்த முன்மொழியப்பட்ட சட்டத்தில் யூனியன் பிரதேசத்தின் சமூக-அரசியல் தோற்றத்தை மாற்றக்கூடிய மற்றும் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு உதவக்கூடிய விதிகள் உள்ளன.

Advertisment

ஜம்மு காஷ்மீர் தொடர்பான 4 மசோதாக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாக்கள் சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவதற்கான முன்னோட்டமாகக் கருதப்படுகின்றன. மேலும், இந்த மசோதாக்கள் யூனியன் பிரதேசத்தின் சமூக-அரசியல் நிலவரத்தை மாற்றக்கூடிய விதிகளைக் கொண்டுள்ளன.

அரசியலமைப்பு (ஜம்மு மற்றும் காஷ்மீர்) பட்டியல் பழங்குடியினர் ஆணை (திருத்தம்) மசோதா 2023, ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்தம்) மசோதா 2023 ஆகியவற்றில் இது உண்மையாக உள்ளது. நான்கு மசோதாக்களும் கடந்த ஜூலை 26-ம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்தியாவில் பழங்குடியினர்

அரசியலமைப்பின் பிரிவு 366(25) பட்டியல் பழங்குடியினரை இத்தகைய பழங்குடியினர் அல்லது பழங்குடி சமூகங்கள் அல்லது பிரிவு 342-ன் கீழ் கருதப்படும் பழங்குடியினர் அல்லது பழங்குடி சமூகங்களுக்குள் உள்ள பகுதிகள் அல்லது குழுக்கள் என வரையறுக்கிறது.

சட்டப்பிரிவு 342(1) ஆளுநருடன் கலந்தாலோசித்த பிறகு, ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் ஒரு சமூகத்தினரை எஸ்டி பிரிவினர் என்று குறிப்பிட ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது. சட்டப்பிரிவு 342(2) கூறுகிறது, “நாடாளுமன்றம் சட்டத்தின்படி (1) எந்த ஒரு பழங்குடியும் அல்லது பழங்குடி சமூகம் அல்லது எந்தவொரு பழங்குடி அல்லது பழங்குடி சமூகத்திற்குள் உள்ள பகுதி அல்லது குழுவின் கீழ் வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கலாம் அல்லது விலக்கப்படலாம்…” என்று கூறுகிறது.

எஸ்டி பட்டியல் நாடு தழுவிய பட்டியல் அல்ல - இது மாநிலம்/ யூனியன் பிரதேசத்தைக் குறிப்பிடுகிறது.

எஸ்டி பிரிவினர் என்பதை தீர்மானிப்பதற்கான அளவுகோல்களை அரசியலமைப்பு குறிப்பிடவில்லை. இருப்பினும், பழமையான பண்புகள், புவியியல் ரீதியான தனிமை, தனித்துவமான கலாச்சாரம், பின்தங்கிய தன்மை மற்றும் தொடர்புகொள்வதில் கூச்சம்” போன்ற பண்புகள் நன்கு நிறுவப்பட்டுள்ளன.

முழு நியாயத்துடன் சம்பந்தப்பட்ட மாநில/யூனியன் பிரதேச அரசாங்கத்தின் பரிந்துரையும், இந்தியப் பதிவாளர் ஜெனரல் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் ஆகியவற்றின் ஒப்புதலும் ஒரு சமூகத்தை எஸ்டி பிரிவினர் என்று குறிப்பிடுவதற்கு அவசியம்.

எஸ்டி பிரிவினர் தொடர்பான நாட்டின் முதல் உத்தரவு அரசியலமைப்பு (பட்டியல் பழங்குடியினர்) ஆணை 1950 ஆகும். இது செப்டம்பர் 6, 1950-ல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்களால் வெளியிடப்பட்டது. இது மாநில வாரியான பழங்குடியினரின் பட்டியல்களைக் கொண்டிருந்தது, மேலும், 2016 வரை 16 ஒத்த உத்தரவுகள் பின்பற்றப்பட்டன.

ஹரியானா, பஞ்சாப், சண்டிகர், டெல்லி மற்றும் புதுச்சேரியில் அறிவிக்கப்பட்ட பட்டியல் பழங்குடியினர்கள் இல்லை.

ஜம்மு காஷ்மீரில் பட்டியல் பழங்குடியினர்

ஜம்மு காஷ்மீருக்கான எஸ்டி பிரிவு தொடர்பான முதல் உத்தரவு அக்டோபர் 7, 1989 அன்று வெளியிடப்பட்டது, அது செப்டம்பர் 17, 1991-ல் திருத்தப்பட்டது.

பழங்குடியினர் விவகார அமைச்சகத்தால் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மசோதா, அரசியலமைப்பு (ஜம்மு மற்றும் காஷ்மீர்) பட்டியல் பழங்குடியினர் ஆணை 1989-ஐ திருத்துவதற்கும் நான்கு புதிய சமூகங்களை சேர்க்க முன்மொழிகிறது. அதில் "கத்தா பிராமணர்", "கோலி", "பத்தாரி பழங்குடியினர்" மற்றும் " ஜம்மு காஷ்மீரில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் பஹாரி இனக்குழுக்கல் அடங்கும்.

இந்த நான்கு சமூகங்களையும் எஸ்டி பட்டியலில் சேர்ப்பது குறித்து ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் பரிந்துரையைத் தொடர்ந்து, மத்திய அரசு இந்தியப் பதிவாளர் ஜெனரல் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்திடம் ஆலோசனை கேட்டது. நான்கு புதிய சமூகங்களின் சேர்க்கையுடன், ஜம்மு காஷ்மீர் மொத்தம் 16 எஸ்டி சமூகங்களைக் கொண்டிருக்கும்.

ஜம்மு காஷ்மீரின் பஹாரிகள்

பஹாரிகள் முதன்மையாக ஒரு மொழியியல் குழு ஆவார்கள். அவர்கள் ஜம்முவில் உள்ள பிர் பஞ்சால் பகுதியில் உள்ள பூஞ்ச் ​​மற்றும் ரஜோரி மாவட்டங்களில் 8.16% மக்கள் உள்ளனர். பிப்ரவரி 1, 2018 அன்று வெளியிடப்பட்ட ஜம்மு காஷ்மீர் அரசாங்கத்தின் 'பஹாரி பேசும் மக்களின் மக்கள்தொகை கணக்கெடுப்பு' படி, பூஞ்ச் ​​மாவட்டத்தின் மக்கள்தொகையில் பஹாரிகள் 56.03%, ரஜோரியில் 56.10%, குப்வாராவில் 11.84%, பாரமுல்லாவில் 14%, அன்னநாக் 7.86% , கந்தர்பால் 5.88% மற்றும் ஷோபியான் மாவட்டத்தில் 5.04% மக்கள் வசிக்கின்றனர்.

“பஹாரிகள் புவியியல், சமூக, அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலையின் அடிப்படையில் குஜ்ஜார்களுடன் ஒற்றுமையை வலியுறுத்துவதன் மூலம் அவர்களின் பின்னணி மற்றும் பழங்குடி அடையாளத்தை பகுத்தறிய செய்கிறார்கள்” என்று இந்த அறிக்கை கூறுகிறது. முன்மொழியப்பட்ட விரிவாக்கப்பட்ட எஸ்டி பட்டியலில் பஹாரி சமூகத்தைச் சேர்ப்பது, ஜம்மு காஷ்மீரின் மக்கள்தொகையில் சுமார் 10% இருக்கும் குஜ்ஜார்-பேக்கர்வால் சமூகங்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. இவர்கள் இந்த யூனியன் பிரதேசத்தில் உள்ள மிகப்பெரிய எஸ்டி சமூகத்தினர் ஆவர். குஜ்ஜார்-பேக்கர்வால் சமூகத்தினர் பஹாரிகளைச் சேர்ப்பது அவர்களின் பழங்குடியின உரிமைகளை நீர்த்துப்போகச் செய்யும் நோக்கமாகக் கருதுகின்றனர்.

90 உறுப்பினர்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் ஒன்பது இடங்கள் எஸ்டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துவிட்டு அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகத் பிரித்த பிறகு, அரசாங்கம் ஜனவரி 2020-ல் பஹாரி மொழி பேசும் மக்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கியது.

1980-களில் இருந்து பல மாநில அரசுகள் பஹாரிகளுக்கு எஸ்டி அந்தஸ்தை பரிந்துரைத்தாலும், மத்திய அரசு பரிந்துரையை நிராகரிக்க ஒரு காரணம் உள்ளது. பஹாரிகள் எப்போதுமே ஒரு மொழியியல் குழுவாகக் கருதப்பட்டனர் - ‘பஹாரி பேசும் மக்கள்’ - இதனால் எஸ்டி எனக் கருதப்படுவதற்குத் தேவையான அளவுகோல்களை நிறைவேற்ற முடியவில்லை. அதனால்தான், இந்த மசோதா ‘பஹாரி இனக்குழுவை’ குறிக்கிறது, பஹாரி பேசும் மக்களை அல்ல.

பா.ஜ.க-வுக்கு சாத்தியமான தேர்தல் ஆதாயம்

பா.ஜ.க-வின் அரசியல் குறிக்கோள், இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ஜம்மு மாவட்டங்களுக்கு அப்பால் தனது தேர்தல் வெற்றிகளை விரிவுபடுத்துவதும், ஆகஸ்ட் 5, 2019-ன் அரசியலமைப்பு மாற்றங்களுக்குப் பிறகு அமைக்கப்படும் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அமைப்பதற்கு பெரும்பான்மையை உருவாக்குவதும் ஆகும்.

இந்த நடைமுறையில் அது வெற்றி பெற்றால், முந்தைய மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவிற்கு ஜம்மு காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதலைப் பெற முடியும் என்று அக்கட்சி நம்புகிறது.

பஹாரிகளில் முஸ்லிம்கள், இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் உள்ளனர். மேலும், 10 சட்டமன்றத் தொகுதிகளில் பெரும்பான்மையாக உள்ளனர். அவற்றில் 8 சட்டமன்றத் தொகுதிகள் பிர் பஞ்சால் மாவட்டத்தில் வருகின்றன. காஷ்மீரின் கர்னா மற்றும் உரி தொகுதிகளிலும் பஹாரிகள் கணிசமான அளவில் உள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் பா.ஜ.க.வால் தேர்தலில் காலூன்ற முடியவில்லை. பஹாரிகளுக்கு எஸ்டி அந்தஸ்து வழங்குவது இந்தப் பகுதிகளில் ஆதரவைப் பெற உதவும். மேலும், இந்த மசோதா சட்டமானவுடன், பஹாரி வேட்பாளர்கள் எஸ்டி-க்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிடலாம். இந்த இடங்கள் மீதான குஜ்ஜார்-பேக்கர்வால் ஏகபோகத்திற்கு சவால் விடலாம்.

குஜ்ஜார்-பேக்கர்வால் சமூகங்களை நேரடியாக பகைத்துக்கொள்ள பா.ஜ.க விரும்பவில்லை என்றாலும், பஹாரி-குஜ்ஜார் பிரிவினையில் தேர்தல் பலன்களைப் பார்க்கிறது. பஹாரிகளின் ஆதரவைப் பெறுவதன் மூலம், காஷ்மீரில் இரண்டு இடங்களில் தேர்தல் லாபத்தைப் பெற முடியும் என்று பா.ஜ.க நம்புகிறது.

தொகுதி மறுவரையைத் தொடர்ந்து, பிர் பஞ்சாலில் உள்ள நவ்செரா மற்றும் சுந்தர்பானி-கலாகோட் ஆகியவை இப்போது இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களாக உள்ளன. அதே நேரத்தில் ரஜோரி இரண்டு முக்கிய சமூகங்களுக்கு இடையில் சமமாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில், பா.ஜ.க.வின் பாரம்பரிய வாக்கு வங்கி, பஹாரி முஸ்லீம்களுடன் இணைந்து வெற்றிபெறக்கூடிய கூட்டணியை உருவாக்க முடியும்.

பத்தாரிகளை எஸ்டி பட்டியலில் சேர்ப்பது பா.ஜ.க.வுக்கு உதவக்கூடும். ஏனெனில், சமீபத்திய தொகுதி மறுவரையறை நடவடிக்கையின் போது பத்தேர்-நாக்சேனி என்ற புதிய தொகுதி உருவாக்கப்பட்டது. கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள இந்த தொகுதியில் பத்தாரிகள் வசிக்கின்றனர், இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.

குஜ்ஜர் மற்றும் பஹாரி சமூகங்களின் பார்வை

குஜ்ஜார்-பேக்கர்வால் கூட்டு நடவடிக்கைக் குழுவின் தலைவர் அன்வர் சௌத்ரி கூறியதாவது: “பஹாரிகளுக்கு எஸ்டி அந்தஸ்து கிடைத்தவுடன், அவர்கள் பா.ஜ.க.வின் பாரம்பரிய வாக்குத் தளத்துடன் இணைந்து, ரஜோரி-பூஞ்ச் பகுதிகள் ​​முழுவதும் கட்சி வெற்றிபெற உதவுவார்கள் என்று பா.ஜ.க கணக்கிட்டு, நம்பிக்கை கொண்டுள்ளது.

பஹாரிகளைப் போல இல்லாமல், குஜ்ஜார்-பேக்கர்வால் சமூகங்கள் முற்றிலும் முஸ்லீம்கள் என்று சௌத்ரி கூறினார். “இதனால்தான் பா.ஜ.க எங்கள் எஸ்டி பாதுகாப்பு மற்றும் சலுகைகளை நீர்த்துப்போகச் செய்கிறது” என்று அவர் கூறினார்.

சௌத்ரி கூறியதாவது: “பஹாரிகளைப் போல இல்லாமல், நாங்கள் இன்னும் பின்தங்கியவர்களாகவும், வளர்ச்சியடையாதவர்களாகவும் இருக்கிறோம். நாங்கள் உண்மையிலேயே பழங்குடியினர். அதே சமயம் பஹாரிகள் முதன்மையாக ஒரு மொழியியல் குழுவினர் ஆவர். குஜ்ஜார்கள் கிளர்ந்தெழுந்து பஹாரிகளுடன் சண்டையிடுவதை பா.ஜ.க விரும்புவதாகவும், இதனால் பஹாரிகள் கட்சியை நோக்கி பெருமளவில் நகர வேண்டும் என்றும் சவுத்ரி கூறினார். ஆனால், நாங்கள் அதை செய்ய மாட்டோம் என்று அவர் கூறினார். “நாங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோம். கடந்த ஆண்டு எங்கள் குப்வாரா முதல் குத்துவா வரையிலான அணிவகுப்பைப் போல அமைதியான அணிவகுப்பை நடத்துவோம். எங்கள் பழங்குடியினரின் உரிமைகளைப் பாதுகாக்க நீதிமன்றத்தை அணுகுவோம்” என்று கூறினார்.

ஜம்மு காஷ்மீரின் பஹாரி மக்கள் இயக்கத்தின் தலைவரான ஷாபாஸ் கான், இருப்பினும், “பஹாரிகளும் குஜ்ஜார்களைப் போலவே ஒரு இனக்குழு” என்று வலியுறுத்தினார்.

“நாங்களும் ஒரு பழங்குடியினர்தா’ என்று ஷாபாஸ் கான் கூறினார். “குஜ்ஜார்கள் தங்களை தேசியவாதிகளாக சித்தரித்து, நாங்கள் எஸ்.டி.க்களில் சேர்க்கத் தகுதியற்றவர்கள் என்று முந்தைய மத்திய அரசாங்கங்களை நம்ப வைத்துள்ளனர். இந்த பிராந்தியத்தின் 70% பஹாரிகள் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் வசிப்பதாலும் அங்கே பெரும்பான்மையாக இருப்பதால் மட்டுமே நாங்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டோம்.

களத்தில் குஜ்ஜார்களுக்கும் எங்களுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. எங்கள் வாழ்க்கை முறையும், எங்கள் வாழ்க்கை நிலையும் ஒரே மாதிரியானவை. ஒரே வித்தியாசம் மொழி மட்டும்தான். 1991-ல் குஜ்ஜார்களை எஸ்டியில் சேர்த்தபோது, ​​நாங்கள் நியாயமற்ற முறையில் கைவிடப்பட்டோம்.” என்று ஷாபாஸ் கான் கூறினார்.

பஹாரிகள் பா.ஜ.க-வுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்பதாக ஷாபாஸ் கான் கூறினார். “எங்கள் மக்கள் இதை பா.ஜ.க-வின் மிகப் பெரிய உதவியாகக் கருதுகிறார்கள். ரஜோரியில் ஒவ்வொரு கட்சியைச் சேர்ந்த பஹாரி தலைவர்களின் ஒரு பெரிய கூட்டத்தை நாங்கள் நடத்தினோம். இதில் பா.ஜ.க-வின் ஜம்மு காஷ்மீர் தலைவர் ரவீந்தர் ரெய்னா மற்றும் பொதுச் செயலாளர் விபோத் குப்தா ஆகியோர் கலந்து கொண்டனர். ஏனெனில், அவர்களும் பஹாரிகள்தான். எஸ்டி அந்தஸ்து கிடைத்தவுடன், நாங்கள் அனைவரும் சேர்ந்து உங்களுக்கு ஒரு முறையாவது வாக்களிப்போம் என்று பஹாரிகள் பா.ஜ.கவிடம் வாக்குறுதி அளித்தனர்” என்றார். " “குஜ்ஜார்களின் கடும் எதிர்ப்பையும் மீறி பா.ஜ.க இதைச் செய்துள்ளது (வருங்கால விரிவாக்கப்பட்ட எஸ்டி பட்டியலில் பஹாரிகளும் அடங்குவர்).

பா.ஜ.க-வின் தற்காப்பு

ரவீந்தர் ரெய்னா கூறுகையில், பஹாரிகள் குஜ்ஜர்-பேக்கர்வால் சமூகங்களை மிகவும் ஒத்தவர்கள். அவர்கள் ஒரே மக்கள். அவர்கள் ஒரே மாதிரியான கலாச்சாரம், ஒரே மாதிரியான உணவுப் பழக்கம், ஒரே மாதிரியான புவியியல் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். பருவகால இடம்பெயர்வு, கால்நடைகளை வளர்ப்பது மற்றும் அதிக இடங்களில் குடியிருப்புகளைக் கொண்டுள்ளனர். சில சதி காரணமாக 1991-ல் (எஸ்டி பட்டியலில் இருந்து) பஹாரிகள் நீக்கப்பட்டனர்” என்று ரவீந்தர் ரெய்னா கூறினார்.

ரவீந்தர் ரெய்னாவின் கருத்துப்படி, “புதிய எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி ஜம்முவுக்கு வந்தபோது, ​​​​பஹாரி சமூகத்தின் தலைவர்கள் இந்த அநீதியைப் பற்றி அவரிடம் சொன்னார்கள், பின்னர் அவர்களின் கோப்பு மீண்டும் திறக்கப்பட்டது.” என்று கூறினார்.

கல்வி, சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகங்களை அடையாளம் காண நீதிபதி ஜி.டி, சர்மா கமிஷனை அரசாங்கம் அமைத்தது. “இந்த கமிஷன் பஹாரி இன சமூகத்திற்கு எஸ்டி அந்தஸ்தை பரிந்துரைத்தது” என்று ரவீந்தர் ரெய்னா கூறினார்.

தொடர்ந்து பேசிய ரவீந்தர் ரெய்னா, “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 85% பேர் பஹாரிகள். விங் கமாண்டர் அபிநந்தனின் விமானம் நவ்ஷேராவுக்கு எதிரே உள்ள போக் கோய் ரட்டா பகுதியில் விழுந்தபோது, ​​பாகிஸ்தான் ராணுவம் அங்கு வரும் வரை அவருக்கு தண்ணீர் கொடுத்து காயங்களுக்கு சிகிச்சை அளித்து முதலில் அவரைக் காப்பாற்ற வந்தவர்கள் பாகிஸ்தன் காஷ்மீரில் உள்ள பஹாரிகள்தான்” என்று கூறினார்.

ரவீந்தர் ரெய்னாவின் கருத்துப்படி, “பஹாரிகளுக்கு இடஒதுக்கீடு குறித்து யாரும் மகிழ்ச்சி அடையவில்லையா என்ற கேல்விக்கு இடமில்லை.” என்று கூறினார். மேலும், குஜ்ஜார்-பேக்கர்வால் மற்றும் பிற எஸ்டி சமூகங்களுக்கு கிடைக்கும் 10% இடஒதுக்கீட்டிற்கு மேல் பஹாரிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பகிரங்கமாக அறிவித்தார்.

ஓ.பி.சி-களின் அறிமுகம்

மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது முக்கியமான மசோதா, ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்தம்) மசோதா 2023, “பலவீனமான மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (சமூக சாதிகள்) என்ற பெயரை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று மாற்றும் மசோதா இது. அதாவது சாங், ஜாட், சைனி, பெர்னா/ கவுரோ(கௌரவ்), ஆச்சார்யாக்கள், கூர்க்காக்கள் மற்றும் மேற்கு பாகிஸ்தான் அகதிகள் உட்பட மேலும் 15 சமூகங்கள்/சாதிகள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய பயனாளிகளும் ஜம்முவில் பா.ஜ.க-வின் ஆதரவுத் தளத்தில் உள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் புதிய இடஒதுக்கீடு அமைப்பை அரசாங்கம் உருவாக்கியுள்ளது, இது பா.ஜ.க-வுக்கு தேர்தலில் பயனளிக்கும்.

பின்தங்கிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கான 20% ஒதுக்கீட்டை பாதியாகக் குறைத்து, “பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு, பலவீனமான மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 2% இட ஒதுக்கீடு அளித்து, ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லையை ஒட்டிய பகுதிகளில் வசிப்பவர்களைச் சேர்த்தது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் வாழும் மக்களுக்கு வரையறுக்கப்பட்ட வகை மற்றும் அவர்களின் இட ஒதுக்கீட்டை 3% ஆக உயர்த்தியது.

ஜம்மு காஷ்மீரில் எஸ்சி பிரிவினருக்கு 8%, எஸ்டி பிரிவினருக்கு 10%, மாற்றுத் திறனாளிகளுக்கு 3% மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 6% இட ஒதுக்கீடு உள்ளது.

குஜ்ஜார் தலைவர் சவுத்ரி கூறுகையில், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பா.ஜ.க தனது முழு ஆதரவையும் கொண்டு வந்துள்ளது. ஆடம்பரமான ஜம்மு குடியிருப்புகளில் வசிக்கும் கிட்டத்தட்ட அனைவருக்கும் இப்போது இட ஒதுக்கீடு உள்ளது என்று அவர் கூறினார்.

பா.ஜ.க-வின் ரவீந்தர் ரெய்னா கூறுகையில், “ஜம்மு காஷ்மீரில் ஓ.பி.சி வகை அறிமுகம் முக்கியமானது, ஏனெனில் 36 சமூகங்கள், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உட்சாதிகள் உள்ளன அவர்களுக்கு முன்பு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டது. காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு நான்காவது முஸ்லிமும் இப்போது ஓ.பி.சி இட ஒதுக்கீட்டின் பலனைப் பெறுவார்கள்” என்று அவர் கூறினார்.

இந்த முடிவுகளுக்குப் பின்னால் எந்த அரசியல் சிந்தனையும் இல்லை என்பதை பிரதமரும் உள்துறை அமைச்சரும் தெளிவுபடுத்தியதாக ரெய்னா கூறுகிறார். இது 'சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்'," என்று அவர் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Jammu And Kashmir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment