scorecardresearch

Explained : இலங்கை தேசிய கீதத்தை ஏன் தமிழில் ஒலிக்க அனுமதிக்கவில்லை?

2009 இலங்கை உள்நாட்டுப் போருக்கு பின் இலங்கை தேசிய கீதம் தமிழில் பகிரங்கமாக பாடப்படவில்லை.கோத்தபய ராஜபக்ஷவின் தற்போதைய முடிவு இலங்கை தமிழர்களை மேலும் அந்நியப்படுத்தும்.

இலங்கையின் 72 வது சுதந்திர தினம் கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) கொண்டாடப்பட்டது. இது போன்ற தேசத்தின் முக்கிய நாளன்று, நாட்டின் இன நல்லிணக்கத்தை உயர்த்துவதற்காக சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் முந்தைய அரசாங்கங்கள் தேசிய கீதத்தை ஒலிக்க வைத்தன.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவின் கீழ் செயல்படும் தற்போதைய அரசாங்கம் தமிழில் (இரண்டாவது தேசிய மொழி) இலங்கை தேசிய கீதத்தை பாட அனுமதிக்கவில்லை .

இலங்கை தேசிய கீதம்: இலங்கையின் தேசிய கீதத்தை ஆனந்த சமரகோன் (1911-1962) இசையமைத்தார். பாடலாசிரியர், பாடகர், பள்ளி ஆசிரியர் என பன்முகத்தன்மைக் கொண்டவர் இந்த  சமரகோன் .

ஆனந்த சமரகோன்
ஆனந்த சமரகோன்

சமரகோன் ஒரு கிறிஸ்தவராகப் பிறந்தார்; அவரது பிறப்புச் சான்றிதழில் “எகோடஹேஜ் ஜார்ஜ் வில்பிரட் அல்விஸ் அமராகூன்”என்று பெயர் பதிவிடப்பட்டுள்ளது.

மிகச் சிறந்த சிங்கள ஆசிரியர்களில் ஒருவராகக் கருதப்படும் டி.சி.பி கம்லத்தின் வழிகாட்டுதலின் கீழ் சமரகோன் சிங்களத்தில் கல்வி கற்றார்.

இரவீந்தரநாத் தாகூர்  இசையில் ஆர்வம் காட்டிய  சமரகோன், அதன் நுட்பங்களை தெரிந்து கொள்வதற்காக இந்தியா பயணித்தார். சாந்தி நிகேதனில் கிழக்கத்திய  பாரம்பரிய இசை, இந்திய செம்மொழி இசை ஆகியவற்றில் உயர் படிப்பைத் தொடர்ந்தார். பிறகு, பௌத்த மதத்த்தை தழுவி, ‘ஆனந்த சமரகோன்‘ என்ற தனது பெயரை மாற்றினார்.

1946 ஆம் ஆண்டில் “நமோ நமோ மாதா” என்கிற இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் சமரகோன் பதிவு செய்தார்.

இலங்கை கல்வி அமைச்சகத்தின் கூற்றுப்படி,தேசிய கீதத்தை அரசாங்கம் ஏற்றுக் கொண்டாலும், அதற்கு எதிராக சில வாதங்களும் எழுப்பப்பட்டன. குறிப்பாக, தேசிய கீதத்தின் முதல் வரியை “ஸ்ரீ லங்(க்)கா மா(த்)தாஅ(ப்)ப ஸ்ரீ… லங்(க்)கா,” என்று மாற்றுவதற்கான முடிவை சமரகோன் வரவேற்கவில்லை என்று தெரிவிக்கின்றது.

மாற்றத்தின் முக்கியத்துவம் :  இலங்கை தேசிய கீதம்,  செய்தியாக்கப்படுவது இது முதல் முறையன்று  . 2015 ஆம் ஆண்டில், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழில் கீதம் பாடுவதை அனுமதிக்க முடிவு செய்த போதே சர்ச்சை கிளம்பியது. அவரது சொந்த கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சி இந்த நடவடிக்கையை கண்டித்தது.

1949 க்குப் பிறகு 2016 இல் முதன்முறையாக தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டது. இதற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ (கோதபயாவின் சகோதரர்) தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

தீவு தேசமான ஸ்ரீலங்காவில், இலங்கை தமிழர்கள்  சிறுபான்மையினராக உள்ளனர். வடகிழக்கில்  தமிழர்களுக்காக ஒரு தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற முக்கிய நோக்கத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போர் புரிந்தது. 1983 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த போர் 2009 இல் முடிவடைந்தது.

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில், தமிழ் புலிகளை நசுக்கிய மனிதர் என அழைக்கப்படும் கோத்தபய  ராஜபக்சே வெற்றி பெற்றார்.

சிங்களர்களின் பெருவாரியான ஆதரவு கோத்தபயாவிற்கு இருந்தாலும்,​​ தமிழர்களும் இஸ்லாமியர்களும் சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களித்தனர். இவர், புதிய ஜனநாயக முன்னணி (என்.டி.எஃப்) வேட்பாளர் என்பது குரிபிடத்தக்கது.

‘தி டிப்ளமோட்’ என்கிற நாளிதழ்  வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திரத்திற்கு பிந்தைய இலங்கையில், தமிழ் கீதம் பெரும்பாலும் தமிழ் பேசும் மாகாணங்களில் மட்டும் பாடப்பட்டதாகவும், விடுதலைப் புலிகளின் எழுச்சிக்கு பின்பு தான், தமிழீழ பாடல்கள் பிராந்தியங்களில் வேகமாக பரவியதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், “இலங்கை அரசியலமைப்பு சிங்கள மொழி தேசிய கீதம் பற்றிய பிரத்தியோகமாக குறிப்பிட்டிருந்தாலும், தமிழ் மொழிபெயர்ப்பிற்கும் அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது…” என்றும் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், 2009 ல் உள்நாட்டுப் போர் முடிந்தபின்னர், தமிழ் தேசிய கீதம் பகிரங்கமாக பாடப்படவில்லை. 2010 ஆம் ஆண்டில், யாழ்ப்பாணத்தில் பள்ளி மாணவர்களை சிங்கள கீதத்தை பாட வைக்கும் முடிவை சில தமிழ் அரசியல் தலைவர்கள் விமர்சித்தனர்.

இதற்கு, விமல் வீரவன்ச  (வீட்டுவசதி அமைச்சர்)  தமிழில் கீதம் பாடும் நடைமுறையை “ஒரு நகைச்சுவை” என்று அழைத்தார்.  இது தமிழ் சமூகத்தை மேலும் அந்நியப்படுத்தியது.

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Sri lankan national anthem in tamil