/indian-express-tamil/media/media_files/2025/02/23/IZ9ZqZ7i0GUmm1flt9dz.jpg)
டாக்டர் ரவிக்குமார் எம்.பி.
எழுத்தாளர், தலித் கோட்பாட்டாளர், சிந்தனையாளர், மணற்கேணி இதழ் ஆசிரியர், விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் என பன்முக ஆளுமை கொண்ட டாக்டர் ரவிக்குமார் எம்.பி. தமிழ்நாட்டின் இன்றைய பரபரப்பான அரசியல் சூழல் குறித்து போனில் ஒரு விரிவான நேர்காணலை நமது தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்திற்கு அளித்தார். அதை அப்படியே தருகிறோம்.
கேள்வி: இரண்டாவது முறையாக மக்களவை உறுப்பினராக சென்றிருக்கிறீர்கள்; கடந்த 2019 மக்களவைக்கும் 2024 மக்களவைக்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?
பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. இந்த முறை பா.ஜ.க அரசு மைனாரிட்டி அரசாக இருந்தாலும்கூட, அவர்களுடைய நடவடிக்கைகள் போன மக்களவை மாதிரியே இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், அதைவிட இன்னும் மோசமானதாக மாறியிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் குரலுக்கு எந்த மதிப்பும் இல்லை. அவர்கள் பாராளுமன்ற நடைமுறைகளை மதிப்பதில்லை. அவர்களுடைய செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில்தான் முனைப்பாக இருக்கிறார்கள். அதில் ஒன்றுதான் வஃப் வாரிய மசோதா, ஒரே நாடு, ஒரே தேர்தல், இப்படியானவைகளுக்குதான் நாடாளுமன்றத்தைப் பயன்படுத்துகிறார்கள். எந்த ஆக்கப்பூர்வமான விவாதங்களையும் அவர்கள் நடத்துவதில்லை. ஆட்சிமுறையிலும் போன முறையைவிட இந்த முறை மோசமாக போயிருகிறது. பொருளாதார நிலைமை ரொம்ப மோசமாகப் போயிருக்கிறது. உலக அளவில் இந்தியாவின் மதிப்பு குறைகிறது, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு எப்படி வீழ்ச்சி அடைந்துகொண்டிருக்கிறதோ, அதே மாதிரி, உலக அரசியல் அரங்கில் இந்தியாவுடைய மதிப்பு வீழ்ச்சி அடைந்துகொண்டிருக்கிறது. அதற்கு உதாரணம், அமெரிக்காவில் இருந்து கை, கால்களில் விலங்கு பூட்டி இந்தியர்களை அனுப்புவது. அதுமட்டுமில்லாமல், பல நாடுகளுடைய சிறைகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். குவாண்டனாமோ போன்ற கொடும் சிறைகளுக்கு அனுப்புகிறார்கள். இந்தியாவில் உண்மையிலேயே இந்த மக்களைக் காப்பாற்றுகிற ஒரு அரசாங்கம் இருக்கிறதா என்பது இப்போது கேள்விக்குறியாகி இருக்கிறது.
கேள்வி: தமிழக அரசியல் கடந்த 10 ஆண்டுகளாகவே ஒரு சர்ச்சையான அல்லது பரபரப்பான அல்லது ஒரு அதிர்ச்சியான சூழல் நிலவுவதாக உணர்கிறார்கள், இதற்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?
இதை பா.ஜ.க-தான் செய்கிறார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, இங்கே அவர்கள் ஒரு பினாமி ஆட்சியை நடத்தினார்கள். அதில் அவர்கள் நல்ல ருசி கண்டுவிட்டார்கள். தொடர்ச்சியாக அதே வேலையை அவர்கள் செய்துகொன்டிருக்கிறார்கள். அதை அவர்கள் ஆளுநர் மூலமாக அல்லது அவர்கள் கட்சி நிர்வாகிகள் மூலமாக மக்களுக்கு பயன்படாத குழப்பங்களை ஏற்படுத்துவது. குறிப்பாக, அவர்களுடைய நோக்கம் தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியைத் தடுப்பது, தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக ஒரு அமைதியற்ற நிலையை உருவாக்குவது. இதை அவர்கள் ஆளுநரைப் பயன்படுத்தி செய்கிறார்கள். அவர்களுடைய கட்சித் தலைவர்கள், பொறுப்பாளர்களைப் பயன்படுத்தி செய்கிறார்கள். தமிழ்நாட்டைக் குறிவைத்து தமிழ்நாட்டை சீரழிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க வேகமாக இருப்பதாகத் தெரிகிறது.
கேள்வி: தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தவருக்கு எதிரான வன்கொடுமை தொடர்ந்து நடந்துவருகிறது. தமிழக அரசின் காவல்துறை நடவடிக்கைகள் திருப்தியாக இல்லை என்று தலித் அமைப்புகளும், தலித் செயற்பாட்டாளர்களும் சொல்கிறார்கள். இதில் வி.சி.க-வின் நிலைப்பாடு என்ன? குறிப்பாக வேங்கை வயல் விவகாரத்தில்... இதில் உங்களுடைய கருத்து என்ன?
பட்டியல் இனத்தவர் மீதான வன்கொடுமை என்பது மாநில அளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்துகொண்டே போகிறது. இதை தேசிய குற்ற ஆவண மையத்துடைய அறிக்கைகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும்போது, அந்த அறிக்கைகளில் எவ்வளவு வழக்குகள் பதிவாகிறது, பட்டியல் இனத்தவருக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளில் கொலை வழக்குகள் எவ்வளவு, பாலியல் வல்லுறவு வழக்குகள் எவ்வளவு, கொடுங்காயங்கள் விளைவித்த வழக்குகள் எவ்வளவு, இந்த வழக்குகளில் எந்த அளவுக்கு தண்டனை கொடுக்கப்படுகிறது, எவ்வளவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது, இந்த விவரங்கள் எல்லாம் தேசிய குற்ற ஆவண மையம் (என்.சி.ஆர்.பி) ஆண்டு அறிக்கைகளில் வெளியாகிறது. 2022-ம் ஆண்டு வரைக்கும்தான் அவர்கள் புள்ளிவிவர அறிக்கைகளை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த அறிக்கைகளைப் பார்க்கும்போது, ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவிலும் உயர்ந்துகொண்டே போகிறது, மாநில அளவிலும், தமிழ்நாடு அளவிலும் அது உயர்ந்துகொண்டே போகிறது. அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் இருந்தது போலவேதான் தி.மு.க ஆட்சிக் காலத்திலும் இந்த எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது.
இது இந்த மக்களுக்கு எதிரான தொடர்ச்சியாக ஒரு கருத்தியல், அரசியல் வலுப்பெற்று வருவதைக் காட்டுகிறது. அந்த அரசியல் கருத்து என்ன என்றால், அது வலதுசாரி கருத்தியல், சாதியை உயர்த்திப் பிடிக்கிற கருத்தியல், சாதியின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கிற ஒரு கருத்தியல். அதைத்தான், சனாதனக் கருத்தியல் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சொல்கிறோம். பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கிற கருத்தியலை நாங்கள் சனாதன கருத்தியல் என்று சொல்கிறோம். அந்த சனதான கருத்தியல் இந்திய அளவில் பத்தாண்டுகளாக ஆட்சி பீடத்தில் இருக்கிறது. மாநில அளவிலும் அந்த ஆட்சியைப் பயன்படுத்தி இங்கே அவர்கள் அரசியல் தளங்களில் செல்வாக்கு செலுத்தப் பார்க்கிறார்கள். அதனால், இங்கே இருக்கிற அந்த மாதிரியான சக்திகள், பிற்போக்கு சக்திகள் அவர்களால் உற்சாகம் பெறுகிறார்கள், இன்றைக்கு ஊக்கம் அடைந்திருக்கிறார்கள். அதனால், தமிழ்நாட்டிலும் இந்த வன்கொடுமைகளுடைய எண்ணிக்கையிலும் சரி தன்மையிலும் சரி, அதிகரிப்பு நடந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறோம். ஆனால், இதைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமை, மாநில அரசுக்கு இருக்கிறது. அவர்கள் அந்த கடமையை சரியாகச் செய்கிறார்களா என்று பார்த்தால் மாநில அரசு அந்த விதத்தில் சரியாக செய்யவில்லை என்பதுதான் நிதர்சனம். அதை நாங்கள் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறோம். முதலமைச்சரின் நேரடி கவனத்துக்கு கொண்டுபோவது, கடிதங்கள் மூலமாக கொடுப்பது, மனுக்கள் மூலமாக மட்டுமல்ல தேவை ஏற்படுகிற இடங்களில் போராட்டங்களையும் நடத்துகிறோம், ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறோம். இந்த கூட்டணியில் நாங்கள் இடம் பெற்றிருந்தாலும்கூட, இந்த வன்கொடுமைகளைப் பற்றிய பிரச்னைகளில், நாங்கள் எப்போதுமே குரல் எழுப்புவதற்காகத் தயங்கியதில்லை. வன்கொடுமைகள் எங்கே நடந்தாலும் அதைக் கண்டித்து எழும்புகிற முதல் குரலாக விடுதலை சிறுத்தைகளின் குரல் இருக்கிறது.
இன்றைக்கு தமிழ்நாடு அரசு பல தளங்களில் முன்னோடியாக, முற்போக்கான நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், பட்டியல் சமூக மக்களைப் பற்றி பார்க்கும்போது மட்டும், அவர்கள் அந்த அணுகுறையில் ஒரு தயக்கம் இருப்பது தெரிகிறது, அது சரியானது அல்ல என்பதை நாங்கள் சுட்டிக் காட்டுகிறோம்.
கேள்வி: கூட்டணியில் வி.சி.க இருந்தாலும் அவர்கள் அழுத்தம் கொடுக்கிற சக்தியாக இல்லாமல் இருக்கிறார்கள் என்ற விமர்சனம் வைக்கப்படுகிறதே?
இதை இரண்டு விதமாகப் பார்க்க வேண்டும். வன்கொடுமைகள் அதிகரிக்கிறது என்பது ஒரு அரசாங்கத்தால் நடக்கிறதா அல்லது சமூகத்தில் இருக்கிற சாதிய உணர்வுகளால் நடக்கிறதா என்பதைப் பார்ப்போம். சாதிய பாகுபாடுகள், பாலினப் பாகுபாடுகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் அதிகரிக்கிறது. அது இந்திய அளவிலும் அதிகரிக்கிறது, தமிழ்நாட்டு அளவிலும் அதிகரிக்கிறது. அப்போது இதற்கு காரணம் என்ன என்று பார்க்கும்போது, இதற்கு பின்னால் இருக்கிற சிந்தனை. மக்கள் மத்தியில் ஒவ்வொரு மனிதருக்கும் பின்னால் இருக்கிற அந்த சிந்தனையில், எப்படி ஒரு ஆணாதிக்க கருத்தியல் இருக்கிறதோ, பெண்களை ஒரு போகப் பொருளாகப் பார்க்கிற ஒரு அணுகுமுறை இருக்கிறது. அவர்களை ஒரு சதைப் பிண்டமாகப் பார்க்கிற ஒரு அணுகுமுறை இருக்கிறது. அதுபோலவே, பட்டியல் சமூக மக்களை எப்போதும் ஒரு இழிவான நிலையில் பார்க்கிற ஒரு மனநிலை இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். இது இந்த சமூகத்தில் இருக்கிறது. அதைத்தான் நான் சொன்னேன், இந்த சமூகத்தில் வலது சாரி சிந்தனை மனப்பாங்கு உயர்ந்துகொண்டே வருகிறது. சாதிய மதவாத சக்திகள் இந்திய அளவில் வலுப்பெற்று இருக்கிற காரணத்தினால், அதனுடைய தாக்கம் தமிழ்நாட்டின் மீதும் இருக்கிறது.
அப்போது இதைத் தடுத்து நிறுத்துவது ஏதோ விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடமை மட்டுமல்ல, எல்லாக் கட்சிகளின் கடமை. இங்கே பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருந்தாலும், பதிவு செய்யப்படாத இயக்கங்களாக இருந்தாலும் அவர்கள், இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டுதான் அவர்கள் அரசியல் களத்தில் இருக்கிறார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைவரும் சமம் என்று சொல்கிறது. அப்போது அதை ஏற்றுக்கொண்டிருக்கிற ஒவ்வொருத்தருக்கும் அந்த கடமை இருக்கிறது. இதை ஏன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்யவில்லை என்றால், அப்போது மற்றவர்கள் எல்லாம் எதற்காக இருக்கிறார்கள், அப்போது மற்றவர்கள் எல்லாம் கட்சியைக் கலைத்துவிட்டால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்ற ஒரே ஒரு கட்சி மட்டும்தான் இருக்கிறது. வேறு யாரும் கட்சி இல்லை, என்றால் எங்களைக் கேட்கலாம். அப்போது அ.தி.மு.க என்கிற கட்சிக்கு என்ன வேலை, தினமும் ஹேஷ்டேக் ட்ரெண்ட் பண்ணுகிற பாஜக-வுக்கு என்ன வேலை, இதை ஊக்கப்படுத்துகிற வேலையில்தான் இவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அதாவது, வன்கொடுமைகளை தடுத்து நிறுத்துகிற பணியில் அவர்கள் எங்கே இருக்கிறார்கள், இதை எதிர்த்து அவர்கள் என்ன களத்தில் இருக்கிறார்கள்?
அப்போது இது எல்லோருடைய கடமை, இது ஏதோ விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடமை மட்டும் என்று சொல்லிவிட்டு, இவர்கள் சும்மா இருக்கலாம் என்று பார்த்தால், இவர்கள் சாதியவாதத்தை ஆதரிக்கிறார்கள் என்று அர்த்தம்.
கேள்வி: தி.மு.க கூட்டணியில் இருந்து வி.சி.க-வை வெளியே கொண்டுவர வேண்டும் என்று விஜய் முதல் ஆதவ் அர்ஜுனாவின் நகர்வு என எதிர்க்கட்சிகளின் நகர்வு இருந்தது. ஒருவேளை தி.மு.க கூட்டணியில் இருந்து வி.சி.க-வை வெளியே கொண்டுவர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கிறார்களா? அதற்கு என்ன காரணம்?
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இன்றைக்கு ஒரு வலுவான கட்சியாக அரசியல் களத்தில் இருக்கிறது. அது தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றது மட்டுமல்ல, வி.சி.க இடம்பெறுகிற கூட்டணி வெற்றி பெறும் என்று 2019-ல் இருந்து தொடர்ச்சியாக நாங்கள் அரசியல் களத்தில் நிரூபித்திருக்கிறோம். இது எங்களுடைய வாக்கு வங்கியின் வலிமையைக் காட்டுகிறது. எனவே, தி.மு.க கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்று சொன்னால், அதில் மிக முக்கியமான வாக்கு வங்கியை வகித்துக்கொண்டிருக்கிற, வி.சி.க-வை அந்த கூட்டணியில் இருந்து வெளியே வர வைக்க வேண்டும் என்று அவர்கள் பார்க்கிறார்கள், கணக்குப் போடுகிறார்கள். அதன் அடிப்படையில், அவர்கள் வி.சி.க-வை எப்படியாவது வெளியேற்ற முடியுமா என்று பலவிதமான முயற்சிகளை அவர்கள் மேற்கொள்கிறார்கள். எதிர்க்கட்சிகளாக இருப்பவர்கள் அப்படித்தான் செய்வார்கள். அவர்களுடைய எண்ணம் அதுவாகத்தான் இருக்கும். ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் பொறுத்த அளவில், எங்கள் தலைவர் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். இது ஏதோ தேர்தல் ஆதாயத்திற்காக அமைக்கப்பட்ட கூட்டணியாக நாங்கள் கருதவில்லை. இதை ஒரு கொள்கைக் கூட்டணியாகக் கருதுகிறோம்.
தமிழ்நாட்டுக்கு உள்ளார வலதுசாரி சக்திகள், குறிப்பாக சனாதன சக்திகள், கால்பதிக்க விடாமல் தடுக்க வேண்டும் என்றால் தி.மு.க தலைமையிலான ஆட்சி என்பது அவசியம் என்பதை நாங்கள் பார்க்கிறோம். உதாரணத்திற்கு, நீங்கள் எண்ணிப் பாருங்கள், ஒருவேளை, இங்கே தி.மு.க ஆட்சிக்கு பதில், அ.தி.மு.க ஆட்சி இருந்திருக்குமேயானால், கண்டிப்பாக மும்மொழித் திட்டம் இங்கே வந்திருக்கும். இப்போது, சமக்ர சிக்ஷா திட்டத்திற்கு நிதி கொடுக்க மாட்டோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள், பி.எம் ஸ்ரி திட்டத்தில் அவர்கள் கையெழுத்து போட்டிருப்பார்கள். இதுதான் நடந்திருக்கும். அவர்கள் ஏற்கெனவே எல்லாவற்றிலும் சரணடைந்தார்கள். இப்போதும்கூட அ.தி.மு.க, விஜய் ஆகியோர், அவர்கள் உதட்டளவில், பெயரளவுக்குதான் எதிர்ப்பை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் பா.ஜ.க-வுடைய இந்த மாதிரியான பிற்போக்கு திட்டங்களை எதிர்க்கக்கூடிய அளவுக்கு வலுவான கருத்தியல் சிந்தனைகளைக் கொண்டவர்கள் கிடையாது.
எனவே இன்றைக்கு தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னால், தமிழ் மொழியைக் காப்பாற்ற வேண்டும், தமிழ் பண்பாட்டை, தமிழின் தனித்துவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னால், இங்கே தி.மு.க தலைமையிலான அரசு இருக்க வேண்டும் என்று என்று நாங்கள் உணர்கிறோம். அந்த விதத்திலே இது ஒரு கொள்கைக் கூட்டணியாக நாங்கள் தி.மு,க-வோடு இருக்கிறோம். இந்த கூட்டணி தொடரும் என்பதை எங்கள் தலைவர் உறுதியாக தெரிவித்திருக்கிறார்.
கேள்வி: தமிழக அரசியலில் தலைவர்களின் பேச்சுகளே மூன்றாம் கட்ட, நான்காம் கட்ட பேச்சாளர்கள் போல இருக்கிறது. அண்ணாமலை, சீமான் ஒருமையில் பேசுகிறார்கள். இந்த அணுகுமுறையை, அரசியல் போக்கை எப்படி பார்க்கிறீர்கள்?
யார் அதைப் பார்க்கிறார்கள், தலைவர்கள் என்று ஒட்டுமொத்தமாக சொல்லிவிட முடியாது. எங்கள் தலைவர் திருமாவளவன் எங்காவது இது மாதிரி பேசி இருக்கிறாரா, அல்லது முதலமைச்சர் எங்காவது இப்படி பேசியிருக்கிறாரா, துணை முதலமைச்சர், இடது சாரி கட்சிகளின் தலைவர்கள் இது மாதிரி பேசியிருக்கிறார்களா, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் அவர் ஏதாவது இப்படி பேசியிருக்கிறாரா, யார் இப்படி பேசுகிறார்கள் என்றால், நீங்கள் சொன்ன இந்த 2 பேர் மட்டும்தான் இப்படி பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டின் நலனுக்கு, தமிழ் மக்களின் நலனுக்கு எதிரிகள் என்று மக்கள் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால், அவர்களுக்கு எந்தவித நாகரீகமும், எதன் மேலேயும் மதிப்பு இல்லை. நிச்சயமாக, அவர்களை மக்கள் புறக்கணிக்கிறார்கள், தொடர்ந்து புறக்கணிக்கப்படுவார்கள். அப்படியான சக்திகளுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கின்றன. அதில் தமிழ்நாட்டு மக்கள் இனிமேலும் உறுதியாக இருப்பார்கள்.
கேள்வி: சீமான் தொடர்ந்து திராவிட இயக்கங்களையும் பெரியாரையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். சீமான் பேசுகிற தமிழ்த்தேசியத்தில் அறிஞர் பெங்களூரு குணாவின் செல்வாக்கு அதிகம் இருப்பதாக ஒரு கருத்து இருக்கிறது. உண்மையில் சீமான் பேசுகிற தமிழ்த்தேசியம் எந்த மாதிரியானது, உங்களுடைய பார்வை என்ன?
அவர் பேசுவது தமிழ்த்தேசியம் என்று நாமாக எப்படி ஒரு முடிவுக்கு வருவது? தமிழ்த்தேசியத்திற்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? அவர் பேசுவது தமிழ்த்தேசிய அரசியலே கிடையாது. அவர் பேசுவது ஒரு வலதுசாரி அரசியல். பா.ஜ.க-வின் இன்னொரு லோக்கல் பிராண்டுதான், வேறு ஒன்றும் கிடையாது. அதனால், அவரை நாம் தமிழ்த்தேசியவாதி என்று எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அவர் பேசுகிற அரசியல் ஒரு தரங்கெட்ட அரசியல். அது தமிழ்த்தேசிய அரசியல் என்கிற வகைப்பாட்டுக்குள் வராது.
பெங்களூரு குணா எப்போதும் இப்படி தரம்தாழ்ந்து பண்ணியது கிடையாது. அவர் ஒரு ஆய்வறிஞர், அவருடைய நிலைப்பாட்டில் எனக்குமே உடன்பாடு கிடையாது. ஆனால், அப்படி உடன்பாடு இல்லாதவர்கள்கூட அவர் ஒரு தரங்கெட்டவர் என்று சொல்லமாட்டார்கள். அவரைத் தமிழ்த்தேசியர் என்றுதான் சொல்வார்கள். அவருடைய தமிழ்த்தேசிய கருத்தாடல்களில் முரண்பாடு இருக்கும். அதுபோல, மா.பொ.சி-யின் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டில், மற்றவர்களுக்கு முரண்பாடு இருக்கலாம். இன்றைக்கு பெ. மணியரசன் பேசுகிற தமிழ்த்தேசியம் அல்லது பழ.நெடுமாறன் பேசுகிற தமிழ்த்தேசியம் இவற்றில் முரண்பாடுகள் இருக்கலாம், கருத்து மாறுபாடுகள் இருக்கலாம், ஆனால், அவற்றை எல்லாம் தமிழ்த்தேசியம் என்கிற வகைப்பாட்டுக்குள் நாம் வைக்க முடியும். ஆனால், சீமான் பேசுவது ஒரு சந்தர்ப்பவாத அரசியல். அவர் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசுவார். அவர் எதையும் பேசமாட்டார் என்று நீங்கள் சொல்லவே முடியாது. நாளைக்கு அவர், எல்லாரும் இந்தி படிங்க, அதுதான் தமிழ்த்தேசியம் என்று சொன்னாலும் நாம் வியப்படைவதற்கு இல்லை. ஏனென்றால், அவர் எதை வேண்டுமானாலும் சொல்வார். அதற்கு நீங்கள் எந்த தர்க்கமும் பார்க்கத் தேவையில்லை. எனவே, அவரை நாம் தமிழ்த்தேசியம் என்று சொல்லி, அவரை குணாவோடு இணைத்து நாம் குணாவை சிறுமைப்படுத்த வேண்டியதில்லை. இவர் பேசுவது தமிழ்த்தேசியமே அல்ல. அது சந்தர்ப்பவாத, வலதுசாரி அரசியல். அவ்வளவுதான்.
கேள்வி: திராவிடக் கொள்கைகளுக்கு தி.மு.க-வினர் ஒட்டுமொத்தமாக உரிமை கோருகிறார்கள். நாங்கள்தான் திராவிட இயக்கத்தின் தொடர்ச்சி, வாரிசு என்று சொல்கிறார்கள். ஆனால், அதே நேரத்தில், சாதிய வன்கொடுமை மதவாத சக்திகளுடைய எழுச்சி, பிற்போக்கு சக்திகளுடைய எழுச்சி, பெரிய அளவில் எழுந்திருக்கிறது. அப்போது, திராவிட இயக்கங்களும், தி.மு.க-வும் என்ன சீர்திருத்தங்களை செய்திருக்கிறார்கள்? இவர்களுடைய பணிகள் எந்த அளவுக்கு நடந்திருக்கிறது?
குறிப்பாக, திராவிட இயக்கத்துடைய ஆட்சி என்பது, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நலம் பயப்பதாகவும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதிகாரத்தைக் கொண்டுபோய்க் கொடுப்பதாகவும், அவர்களுடைய முன்னேற்றத்துக்கு வழிவகுப்பதாகவும் இருந்திருக்கிறது. அது பட்டியல் சமூக மக்கள், விளிம்புநிலை மக்கள், சிறுபான்மை மக்களை உள்ளடக்கியதாக வலுப்பெற வேண்டும் என்பதுதான் எங்களைப் போன்றவர்கள் வலியுறுத்துவது. தி.மு.க-வின் துவக்கக்கட்டத்தில், அப்படித்தான் அந்தக் கருத்தியல் உருவானது. திராவிடம் என்கிற கருத்தியலைப் பேசிய அறிஞர் அண்ணாவினுடைய பேச்சாக இருந்தாலும் சரி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய உரைகளாக இருந்தாலும் சரி, அவர்களுடைய அணுகுமுறைகளாக இருந்தாலும் சரி அப்படித்தான் இருந்தது. காலப் போக்கில், பட்டியல் சமூகத்தினர் உள்ளடக்கப்படுவது என்பது குறைந்துபோய்விட்டது. அது தி.மு.க-வில் மட்டுமல்ல, தி.மு.க-வில் இருந்து திரு. எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் வெளியேறி தனிக்கட்சி கண்டபோது, அவருடைய ஆதரவு சக்திகளாக பட்டியல் சமூக மக்கள் மாறிப்போனார்கள். அதில் தி.மு.க-வுக்கு, பட்டியல் சமூக மக்கள் நம்முடைய வாக்கு வங்கியாக இல்லை என்கிற பாராமுகம் அந்த நேரத்தில் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், யாரை ஆதரித்தார்களோ, எம்.ஜி.ஆர் அவர்களே இந்த மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. அ.தி.மு.க-வின் தொடர்ச்சியான ஆட்சிக் காலத்தில் அந்த மக்கள் வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டார்களே தவிர, அவர்களுக்கான திட்டங்கள் எதையும் அவர்கள் செய்யவில்லை. இது ரொம்ப மோசமானது.
அப்படி ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கலைஞர் ஆட்சிக் காலத்தில்தான் இந்த மக்களுக்கான பல நலத்திட்டங்கள், கொண்டுவந்தார். இந்தியாவின் வேறு பல மாநிலங்களில் இல்லாத நலத்திட்டங்களை அவர் கொண்டு வந்தார். குறிப்பாக, சொல்ல வேண்டும் என்றால், சமத்துவபுரம் என்கிற ஒரு புரட்சிகரமான திட்டத்தை செயல்படுத்திக் காட்டியவர் அவர்தான். அந்தத் துணிச்சல் இந்தியாவில் வேறு எந்த முதலமைச்சருக்கும் வரவில்லை. அப்படியான துணிச்சல் அவருக்கு இருந்தது. அந்த அணுகுமுறை தொடர வேண்டும் என்பதை நாங்கள் இன்றைய முதலமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
எனக்கு அம்பேத்கர் விருது அளித்தபோது, அந்த நேரத்தில்கூட நானும் எங்கள் தலைவரும் முதலமைச்சரிடம் கேட்டோம். இந்த சமத்துவபுர திட்டத்தை நீங்கள் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று கேட்டோம். ஏற்கெனவே கட்டப்பட்ட சமத்துவபுரங்கள் பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது. அதற்கே ஒரு பெரிய நிதி தேவைப்படுகிறது என்றார்கள். அதை முதலில் நாங்கள் செய்துவிட்டு, அதற்கு பிறகு நாங்கள் நாங்கள் இதை செய்யலாம் என்று இருக்கிறோம் என்று சொன்னார். ஆனால், நாங்கள் அதை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று கேட்டோம்.
அதே போல, பட்டியல் சமூக மக்கள் மீதான கலைஞரின் அணுகுமுறை தொடர வேண்டும். குறிப்பாக, பஞ்சாயத்துகளில், தனித் தொகுதி பஞ்சாயத்துகள் கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி ஆகிய இடங்களில் பல ஆண்டு காலம் தேர்தல் நடத்த முடியாமல் இருந்தது. பட்டியல் சமூக மக்கள் பஞ்சாயத்து தலைவராக வர அனுமதிக்க மாட்டோம் என்று சொனார்கள். ஆனால், அந்த 4 ஊராட்சிகளில் தேர்தலை நடத்தி சமத்துவத்தை நிலைநாட்டியவர் கலைஞர். அதனால், அந்த மாதிரியான சமூக பிரச்னைகளில் துணிச்சலான நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் சனாதனத்தை எதிர்ப்பது பெரிய துணிச்சல் தேவைப்படுகிற ஒன்று கிடையாது, தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில், பா.ஜ.க-வை எதிர்ப்பதற்கும், சனாதனக் கொள்கைகளை எதிர்ப்பதற்கும் பெரிய துணிச்சல் எதுவும் தேவை இல்லை. சனாதன எதிர்ப்பு ஏற்கெனவே இங்கு தமிழ் மரபாக வேரூன்றி இருக்கிறது. சாதிய ஏற்றத்தாழ்வுகளை, சாதிய பாகுபாடுகளை எதிர்ப்பதற்குத்தான் பெரிய துணிச்சல் தேவை. அந்தத் துணிச்சல் கலைஞருக்கு இருந்தது, அண்ணாவுக்கு இருந்தது, அது நம்முடைய முதலமைச்சருக்கும் இருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், வலியுறுத்துகிறோம்.
/indian-express-tamil/media/media_files/2025/02/23/ZHd7F1MEUyBG9ORzZ3rD.jpg)
கேள்வி: விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்னிந்தியாவில் ஒரு வலுவான தலித் கட்சியாக இருக்கிறது. மற்ற தென்னிந்திய மாநிலங்களில் ஒரு வலுவான தலித் கட்சி என்று நாம் வி.சி.க-வைத் தவிர வேறு எதையும் சொல்ல முடியவில்லை. அப்படி இருந்தும் வி.சி.க தொடங்கி கடந்த 30 ஆண்டுகளில், என்ன சாதித்திருக்கிறது, உங்களுடைய மதிப்பீடு என்ன?
இதை இரண்டு - மூன்று விதங்களில் பார்க்க வேண்டும். ஒன்று, தேர்தல் களத்தில் என்ன சாதித்திருக்கிறோம். இன்றைக்கு தமிழ்நாட்டு சமூக அரசியல் வரலாற்றில், ஒரு நூறாண்டுகளை எடுத்துக்கொண்டீர்கள் என்றால், இங்கே பெரிய புகழ்பெற்ற தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். எம்.சி. ராஜா, ரெட்டைமலை சீனிவாசன், என். சிவராஜ் இருந்தார்கள். இவர்களைப் போல பல தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், சுதந்திரத்திற்குப் பிறகான தேர்தல் முறை வந்ததற்குப் பிறகும் பல தலைவர்கள் இங்கே இருந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாருமே தனிக்கட்சி துவக்கி அதற்கு தேர்தல் அங்கீகாரம் பெற வைத்தது என்பதை செய்ய முடியவில்லை. இதை இன்றைக்கு சாதித்திருக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. இதுதான் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரால் துவக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற முதல் கட்சி என்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தென்னிந்திய மாநிலங்களில் என்று சேர்த்தே சொல்லலாம். மகாராஷ்டிரா மட்டும்தான் இதற்கு விதிவிலக்கு. மற்ற மாநிலங்களான கர்நாடகாவிலோ, கேரளாவிலோ, ஆந்திராவிலோ, தெலுங்கானாவிலோ கிடையாது. அது ஒரு சாதனை என்று நான் சொல்வேன்.
இரண்டாவது, இந்த பாராளுமன்ற சட்டமன்ற வாய்ப்புகளை பயன்படுத்தி, இந்த மக்களுக்கான பல நலத் திட்டங்களை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். உதாரணத்திற்கு, நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது எனது கோரிக்கையை ஏற்று ஆறு நல வாரியங்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதனால், லட்சக்கணக்கானவர்கள் பலன் பெறுகிறார்கள். இன்றைக்கு குடிசைகளை அகற்றிவிட்டு கான்கிரீட் வீடுகளை கட்டும் திட்டம் என்னுடைய கோரிக்கையின் அடிப்படையில்தான் கலைஞரால் உருவாக்கப்பட்டது. அது இன்றைக்கு வெவ்வேறு பெயர்களில் இருக்கிறது, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பசுமை வீடு திட்டம் என்றும் இப்போது கலைஞரின் கனவு இல்லம் திட்டம் என்றும் தொடர்ந்து அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான பேர் அதில் வீடுகளைப் பெறுகிறார்கள், இதுபோல பல சொல்ல முடியும். இன்றைக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் எங்கள் கட்சிக்கு இருக்கிறார்கள். இந்த சட்டமன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்றால், மாநில எஸ்.சி, எஸ்.டி ஆணையத்தைக் கொண்டு வர வைத்திருக்கிறார்கள். அதுபோல, எஸ்சி, எஸ்டி துணைத் திட்டங்கள், அதற்கான சட்டத்தை உருவாக்கச் செய்திருக்கிறார்கள். அவர்களுடைய அழுத்தத்தின் காரணமாகத்தான், தமிழ்நாடு அரசு இன்றைக்கு அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம், அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் என்று பல திட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.
நாடாளுமன்றத்தில் எடுத்துக் கொண்டீர்கள் என்றால், இந்திய முழுவதும் இருக்கிற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கொடுக்கப்படுகிற போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தை 2018-ல் நிறுத்துவதற்கு முற்பட்டார்கள். நாங்கள் அதை 2019-ல் விடுதலை சிறுத்தைகளின் தலையீட்டின் காரணமாக அது 2025 வரைக்கும் நீட்டிக்கப்படும் என்று அறிவித்தார்கள், தற்போது இந்த ஆண்டு வரைக்கும் இருக்கிறது. அதைத் தொடர்ந்து நீட்டிக்க வைப்பதற்கு, நாங்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எங்கள் தலைவரும் நானும் வலியுறுத்தி இருக்கிறோம். பல தலைவர்களையும் சந்தித்து இந்த திட்டத்தை தொடர்ச்சியாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். பிறகு வெளிநாடுகளுக்கு சென்று படிப்பதற்கான ஸ்காலர்ஷிப் பெறுவதற்கான வருமான வரம்பை எங்களுடைய தலையீட்டின் காரணமாகத்தான் 8 லட்சமாக உயர்த்தி இருக்கிறார்கள். எண்ணிக்கையும் 125 ஆக ஒன்றிய அரசில் உயர்த்தப்பட்டது எங்களுடைய கோரிக்கையின் அடிப்படையில்தான். இதுபோல பல திட்டங்களை நாடாளுமன்றத்தில் நாங்கள் எதிர்க்கட்சியாக, மிகச் சிறிய கட்சியாக இருந்தாலும், எங்களுடைய தலையீட்டின் மூலமாக செய்ய வைத்திருக்கிறோம். இதனால் வரைக்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற வகுப்புகளைப் பயன்படுத்தி செய்திருக்கிறோம்.
மூன்றாவது, சமூக தளத்தில் இன்றைக்கு பட்டியல் சமூக மக்கள் நாம் யாருக்கும் தாழ்ந்தவர்கள் அல்ல என்ற ஒரு தன்மதிப்பை, ஒரு தன்னம்பிக்கையைப் பெற்றிருக்கிறார்கள் என்றால் அது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வருகைக்குப் பிறகுதான். இதற்கு முன்னால் அவர்களை ரொம்ப இழிவாக பார்த்தவர்கள் கூட இன்றைக்கு சிறுத்தைகள் என்று சொல்லக்கூடிய நிலை உருவாகி இருக்கிறது. வன்கொடுமையினுடைய எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது என்றால், அதை எம்பவர்மெண்ட் உடன் சேர்த்து பார்க்க வேண்டும். இன்றைக்கு அவர்கள் அதிகாரப்படுத்தி வருகிறார்கள், சாதாரண, கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒரு கிராமத்தில் இருக்கிற ஒரு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் கூட இன்றைக்கு ஒரு தன்மதிப்போடு அவர்கள் உணர்கிறார்கள் என்று சொன்னால் அது விடுதலை சிறுத்தைகள் ஏற்படுத்திய ஒரு மிகப்பெரிய பங்களிப்பு என்று நான் சொல்வேன்.
கேள்வி: ராம்தாஸ் அத்வாலே, சிராக் பாஸ்வான் போன்ற தலித் கட்சித் தலைவர்கள் பாஜக அரசில் பங்கு வகிக்கிறார்கள், வி.சி.க-வுக்கும் அவர்களைப் போல ஆட்சி அதிகாரத்த்ல் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி இருந்தும் புறக்கணிப்பது ஏன், இது தலித்துகளை அதிகாரத்தில் இருந்து விலக்கி வைப்பதாக ஆகிவிடாதா?
அப்படி இல்லை. பாஜக சேரச்சொல்லி எங்கள் தலைவருக்கு நேரடியாக பல விதங்களில் தூது அனுப்பினார்கள். நிறைய தூதுவர்கள் வந்து கேட்டார்கள். உடனடியாக கேபினட் அமைச்சராக ஆக்குகிறோம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அதை நாங்கள் நிராகரித்து விட்டோம். ஏனென்றால், பா.ஜ.க என்பது மற்ற கட்சிகள் போல் ஒரு கட்சி கிடையாது. அது ஆர்.எஸ்.எஸ் என்கிற அமைப்புடைய ஒரு அரசியல் முகம். ஆர்.எஸ்.எஸ் என்பது இந்த இந்திய நாட்டை இந்து ராஷ்டிரம் என்று வர்ணாசிரம தர்மத்தின் அடிப்படையில் இந்தியாவை மாற்ற வேண்டும் என்று 100 ஆண்டுகளாக பாடுபட்டுக் கொண்டிருக்கிற ஒரு இயக்கம். அது முழுக்க முழுக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி எந்த அம்பேத்கருடைய கொள்கைகளை உள்வாங்கி செயல்படுகிறதோ அதற்கு நேர் எதிரான ஒரு கொள்கை கொண்ட ஒரு கட்சி தான் பா.ஜ.க. எனவே, பா.ஜ.க அரசில் அங்கம் வகிப்பது என்பது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம். அந்த அரசியல் தற்கொலையை நாங்கள் ஒருபோதும் செய்து கொள்ளமாட்டோம்.
கேள்வி: நீங்கள் பல வரலாற்று உரிமைகோரல்களை முன்வைத்து வருகிறீர்கள், முதல் மொழிப்போர் தியாகிகள் நடராசன் தாளமுத்து என்ற வரிசையில்தான் அமைய வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு பிறகு, பூந்தமல்லி கலகம் பற்றி யூஜின் இர்ஷிக் நூலை முன்வைத்து பூந்தமல்லி பறையர் கலகம் ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் சுதந்திரப் போராட்டம் என்று அறிவிக்க வேண்டும் என்று ஒன்றை முன்வைத்தீர்கள். அதே போல, சமீபத்தில், இடஒதுக்கீடு போராளிகளுக்கு மணிமண்டபம் திறந்து வைத்தார். அப்போது, 1978-ல் விழுப்புரத்தில் கொல்லப்பட்ட தலித்துகள் 12 பேரையும் சமூகநீதிப் போராளிகளாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தீர்கள். இந்தக் கோரிக்கைகளுக்கு திமுக எந்த அளவுக்கு செவிசாய்க்கிறது. இந்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவதற்கு வி.சி.க ஏதாவது திட்டம் வைத்திருக்கிறதா? அல்லது நீங்கள் மற்ற தலித் அமைப்புகளுடன் ஆலோசித்து இந்த கோரிக்கையை பெரிய அளவில் முன்னெடுக்க ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா?
முதலில் சின்ன கோரிக்கையாகத்தான் வைத்தோம், அயோத்திதாசர் என்கிற பெயரை ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னால் யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். நான் 1999-ல் அயோத்திதாசருடைய படைப்புகளை தொகுத்து நான்கு தொகுதிகளாக கொண்டு வந்து வெளியிட்டேன். நான் முதலில் வெளியிட்டதற்கு பிறகுதான், சில மாதங்களில் அலாய்சியஸ் தொகுப்பு முயற்சியில் பாளையங்கோட்டையில் இருந்து அந்த படைப்புகள் நூலாக்கம் பெற்று வந்தது. நான் அதை கொண்டு வந்த பிறகு, அதோடு நின்றுவிடவில்லை. குறிப்பாக அதற்கு முன்னால், விடுதலை சிறுத்தைகள் கட்சியுடைய துண்டறிக்கையில் கூட அயோத்திதாசர் இடம்பெற்றது கிடையாது.
இதை நான் அப்போது சென்னை லயோலா கல்லூரியில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்பாக நடந்த ஒரு கூட்டத்தில் நான் சுட்டிக்காட்டி பேசினேன். காசி ஆனந்தன் அந்த கூட்டத்தில் இருந்தார், எங்கள் தலைவர் இருந்தார். அப்போது நான் கட்சியில் நேரடியாக செயல்படவில்லை. நான் அப்போது ஒரு வங்கி ஊழியராக இருந்துகொண்டு, ஒரு மனித உரிமை செயல்பாட்டாளராக செயல்பட்டுக் கொண்டிருந்த நேரம். அந்த நிகழ்ச்சிக்கு பிறகுதான், அயோத்திதாசர் பண்டிதர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துண்டறிக்கைகளில் இடம்பெற ஆரம்பித்தார். இதன் தொடர்ச்சியாக இன்றைக்கு அரசாங்கமே அவருக்காக மணி மண்டபத்தை உருவாக்குகிறது.நான் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்தேன். தேசிய சித்த மருத்துவமனை உருவாக்கும் போது அயோத்திதாசர் பண்டிதர் பெயரை வைக்க வேண்டும் என்று அப்போது எனக்கு தலித் ஏழுமலை உடன் இருந்த தொடர்பின் காரணமாக அவர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த நேரத்தில் அந்த பெயரை வைக்கச் சொல்லி கேட்டு அதை அவர் முன்மொழிந்தார். ஆனால், அவருடைய பதவி போய்விட்டது. அதற்கு பிறகு, அன்புமணி அதே சுகாதாரத் துறைக்கு வந்தார். அப்போது நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தினோம். அப்போது தலைவரிடம் சொல்லி அயோத்திதாசர் பெயரை வைக்க வேண்டும் என்று சொல்லி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். அதன் பிறகுதான், அயோத்திதாசர் பண்டிதர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் என்று தாம்பரத்தில் இருக்கிற மருத்துவமனைக்கு பெயர் வைத்தார்கள். அயோத்தி தாசர் பண்டிதர் சிலையும் அங்கே வைக்கப்பட்டது. அதன் பிறகு தமிழ்நாடு அரசில் தொடர்ச்சியாக நான் வலியுறுத்தினேன். 2006-ல் நான் சட்டமன்ற உறுப்பினராக ஆனபோது, அயோத்திதசார் பண்டிதருடைய தமிழன் பத்திரிகையின் நூற்றாண்டு 2007-ல் வந்தது. அதனால், தமிழன் பத்திரிகையின் நூற்றாண்டை அரசே கொண்டாட வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தேன். கலைஞர் அதை ஏற்றுக் கொண்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் அந்த விழாவை நடத்தினார். அன்றைய நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன் கலந்து கொண்டு உரையாற்றினார். அது மட்டுமல்ல தமிழன் பத்திரிகையை, அயோத்திதாசரின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கி அவருடைய உறவினர்களைத் தேடி கண்டுபிடித்து, நீலகிரியில் இருந்து சில பேர்களை எல்லாம் கொண்டு வந்து அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டது. இவையெல்லாம் என்னுடைய முயற்சியில் தான். இன்றைக்கு முதலமைச்சர்கள் சட்டமன்றத்தில் பேசுகிற நேரத்தில் திராவிட இயக்கத்தினுடைய தோற்றுவாய் அயோத்திதாசர் பண்டிதர், அவர்தான் முதலில் திராவிட இயக்கத்திற்கான மூலம் என்று குறிப்பிட்டு பேசுகிற நிலை இன்றைக்கு உருவாகி இருக்கிறது. அவர் பெயரில் ஒரு குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் உருவாகி இருக்கிறது. இதெல்லாம் 25 ஆண்டு காலத்தில் நடந்திருக்கிறது. இதற்கு எல்லாம் நான் ஒரு சின்ன அளவில் எடுத்த முயற்சிதான், அது விடுதலை சிறுத்தைகள் உடைய கோரிக்கையாக மாறும் போது நடந்து இருக்கிறது.
அதுபோலத்தான், மொழிப்போர் தியாகிகள் உடைய அந்த வரலாற்று வரிசையை மாறி இருந்தது. அப்போது கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, அப்போதே இதை நான் எழுப்பினேன். 96 - 2001 வரையிலான ஆட்சி காலத்தில் இதை நாங்கள் எழுப்பினோம். அது சரி செய்யப்பட வேண்டும். வரலாற்றை நேர் செய்தல் என்று என்று நான் எழுதினேன். அது தமிழன் எக்ஸ்பிரஸில் ஒரு பெரிய கட்டுரையாக அப்போது வெளியிட்டார்கள். அதற்குப் பிறகு தீண்டப்படாதவர்கள் தியாகம் என்று சொல்லி சிறு நூலை வெளியிட்டேன். இன்றைக்கு முதலமைச்சர் அவர்களுக்காக ஒரு மணிமண்டபத்தை கட்டி இருக்கிறார். பேரறிஞர் அண்ணா சொன்னது போல, தந்தை பெரியாருடைய சிலையும் நடராஜன் தாளமுத்து சிலையையும் அமைக்கப்பட வேண்டும் என்று ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறோம். அந்த சிலைகளை அமைக்கிறோம் என்று முதலமைச்சர் அறிவிப்பு செய்திருக்கிறார். இந்த வரலாறும் நேர் செய்யப்படுகிறது. எல்லாரும் நடராஜன் தாளமுத்து என்றுதான் சொல்ல வேண்டும் என்று ஏற்றுக்கொள்கிற ஒரு நிலை இன்றைக்கு உருவாகி இருக்கிறது.
அது போல, இந்த பூந்தமல்லி கலகம் 1772-லிருந்து 1778 வரை 6 ஆண்டுகளாக நடத்தி இருக்கிறார்கள். இதற்கு வரலாற்று ஆதாரங்கள் இருக்கிறது. இன்றைக்கு பல பேர் சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று சொல்கிறார்கள், அவர்கள் எல்லாம் வரலாற்று ஆளுமைகளாக உண்மையிலேயே அப்படி நபர்கள் இருந்தார்களா என்று நமக்கு தெரியாது. அவர்களுக்கு கூட சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று சொல்லி இன்றைக்கு அரசு அங்கீகாரம் பண்ணி இருக்கிறது. ஆனால், 1772-லிருந்து 1778 வரை இந்த பகுதியில் ஒரு பெரிய கலகம் நடந்திருக்கிறது. அதை பறையர் கலகம் என்று பிரிட்டிஷ் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதை நீங்கள் ஒரு அறிவிப்பு தான் செய்ய வேண்டும். அதில் என்னென்ன நபர்கள் கலந்து கொண்டார்கள், அவர்களுடைய பெயர்கள் முதற்கொண்டு அந்த ஆவணத்தில் இருக்கிறது. எந்த ஊரில், எந்த இடத்தில் நடந்தது, அந்தப் போராட்டங்கள் எப்படி செய்தார்கள், அன்றைக்கு ஆங்கிலேய கலெக்டராக இருந்தவரையே இந்த மக்கள் கட்டி வைத்து அடித்தார்கள். அதில் அவரை மீட்பதற்கு ராணுவம் வரவேண்டிய தேவை எப்படி ஏற்பட்டது என்பதை எல்லாம் நான் ஆதாரப்பூர்வமாக எடுத்து தமிழ்நாடு அரசுக்கு ஒரு வேண்டுகோளாக வைத்திருக்கிறேன். இதை நீங்கள் ஒரு வரலாற்று நிகழ்வாக முதலில் அறிவியுங்கள். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து, அவர்களுடைய வரிவிதிப்பு முறைக்கு எதிராக நடந்த கலகம் அது. அதை நீங்கள் பதிவு செய்ய வேண்டும் எனக் கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்கள் ஆர்கைவ்வில் ஆவணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஏதோ சொல்கிறார்கள், சாக்குப் போக்கு சொல்கிறார்கள். ஆனால், மற்றதுக்கு எல்லாம் ஆதாரங்களை கண்டுபிடித்து, ஆவணக் காப்பகங்களில் ஆதாரங்களை கண்டுபிடித்து தான் செய்தார்களா, இன்றைக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிற சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எல்லாம் ஆவண காப்பகங்களில் இருந்து ஆதாரங்களை வைத்து தான் செய்தார்களா என்று தெரியவில்லை. ஆனால், நாங்கள் ஆதாரங்களை கொடுத்திருக்கிறோம். யூஜின் இர்ஷிக் நம்முடைய தமிழ்நாட்டு ஆர்கைவில் இருந்து தான் எல்லா ஆதாரங்களையும் கொடுத்திருக்கிறார். எந்த ரெக்கார்டு பிளே, எந்த கலெக்டருடைய ரிப்போர்ட் என்பதை அவர் சொல்கிறார். அதில் யார் யார் கலெக்டராக இருந்தார்கள், எந்த ஆவணத்தில், எந்த தேதியில் பதிவாகி இருக்கிறது என அவருடைய நூலில் எல்லாத்தையும் கொடுத்திருக்கிறார். அது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட ஒரு நூல். தமிழ்நாட்டைப் பற்றி மிக முக்கியமான ஒரு ஆராய்ச்சியாளர் யூஜின் இர்ஷிக், எனவே அவரிடம் கூட கேட்கலாம். நான் போய் யூஜி இர்ஷிக் இடம் தொடர்பு கொண்டு கேட்க முடியாது. அவரிடம் தமிழ்நாடு அரசு பேசலாம், அதை அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு நினைத்து இருந்தால் செய்திருக்கலாம். ஆனால், அதை செய்யாமல் விட்டு தயக்கம் காட்டுகிறார்கள்.
அப்புறம் நான், இன்னொரு விஷயத்தையும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறேன். செயின்ட் ஜார்ஜ் கோட்டையை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து பிரெஞ்சு துருப்புகளால் தாக்கப்பட்டபோது, செயின்ட் ஜார்ஜ் கோட்டையை காப்பாற்றுவதற்கு அன்றைக்கு அங்கே இருந்த பெரிய பறைச்சேரி என்று சொல்லப்பட்ட, இன்றைக்கு பிளாக் டவுன், ஜார்ஜ் டவுன், ஜி.டி என்று அழைக்கப்படுகிற அந்த பகுதியில் இருந்த பறையர்களை கூப்பிட்டு வந்து அவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து சண்டையிட்டு பிரெஞ்சு துருப்புகள் கைப்பற்றாமல் தடுத்து இருக்கிறார்கள். அதில் பல பேர் உயிரிழந்திருக்கிறார்கள், அப்படி அவர்களால்தான் அந்த புனித ஜார்ஜ் கோட்டை பாதுகாக்கப்பட்டது.
எப்படி பீமா கொரேகானில் சொல்கிறார்களோ, அதுபோல மிக முக்கியமான ஒரு வரலாறு. அதையும் பதிவு செய்ய வேண்டும் என்று நான் கேட்டிருக்கிறேன். இதையெல்லாம் நாங்கள் ஆவணங்களில் இருந்து தான் இந்த வரலாற்றை சொல்கிறோம். இந்த மக்கள் எப்போதுமே அடிமைகளாகவே இருந்தார்கள் என்று என்பது போல ஒரு நம்பிக்கை பொதுபுத்தியில் பதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த நம்பிக்கையை கலைவதற்கு இப்படியான வரலாற்று ஆதாரங்கள் தேவையாக இருக்கிறது. அதுதான் நாங்கள் சொல்கிறோம். இந்த மக்களுக்கு பல்வேறு பொருளாதார திட்டங்களை வழங்குகிற இந்த அரசு, இந்த மக்களின் படிப்புக்காக பல திட்டங்களை கொண்டு வருகிற அரசு, இந்த மக்களுடைய தன்மானத்தை மீட்டெடுப்பதற்கு செய்ய வேண்டிய கடமையும் செய்ய வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.
கேள்வி: இந்தி திணிப்பு எதிர்ப்பு தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு என்பது தமிழக அரசின் நிலைப்பாடாக இருக்கிறது; இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஒரு பெரிய சண்டையாக கூட மாறிவிட்டது என்று சொல்லலாம், இதை எப்படி பார்க்கிறீர்கள்?
நான் அதை பாசிட்டிவாக பேசியதில்லை, கேந்திர வித்யாலயா பள்ளிகள் விழுப்புரம் மாவட்டத்தில் கிடையாது. விழுப்புரத்தில் ரயில்வே ஸ்கூல் என்று ஒன்று இருந்தது. அந்த இடத்தை எல்லாம் இப்போது தனியாருக்கு குத்தகை விடுகிறார்கள். அதனால், அதை தடுப்பதற்கு நீங்கள் அதைக் கேந்திரிய வித்யாலயாவுக்கு மாற்றுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தேன். ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை. இங்கே இருக்கிற பள்ளிகளை போய் நான் பார்த்திருக்கிறேன். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு உள்ளே கேந்திரிய வித்யாலயா பள்ளி இருக்கிறது. அங்கே படிக்கிற மாணவர்களுடைய கல்வித்தரம் புதுச்சேரியில் இருக்கிற அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தைவிட அதிகம் ஒன்றும் இல்லை, இது கண்கூடாக பார்க்கிற ஒரு விஷயம்.
அப்புறம், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தியா முழுவதும் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது. போதுமான ஆசிரியர்கள் கிடையாது, கட்டமைப்பு வசதிகள் கிடையாது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் பெரிய தரமாக இருக்கிறது என்றும் சொல்ல முடியாது. நவோதயா பள்ளிகளை வேண்டுமானால் ஒரு ரெசிடென்சி பள்ளிகள் என்கிற முறையில் ஒரு பெரிய இடம், அங்கேயே மாணவர்களுக்கு விடுதி வசதி, இது எல்லாம் செய்து தரப்படுகிறது. அப்படி தமிழ்நாடு அரசு இங்கே மாதிரி பள்ளிகளை உருவாக்கி இருக்கிறார்கள்.திமுக அரசு வந்த பிறகு மாவட்டத்திற்கு ஒரு மாதிரி பள்ளி என்று மாதிரி பள்ளிகளை உருவாக்கி இருக்கிறார்கள். இன்றைக்கு பின்தங்கிய மாவட்டங்களில் இரண்டு, மூன்று மாதிரி பள்ளிகள் எல்லாம் இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று, நான்கு மாதிரி பள்ளிகள் இருக்கிறது. அது எல்லாம் சிறப்பான முறையில் இயங்கி வருகிறது. பல மாணவர்கள் இன்றைக்கு ஐஐடி, ஜே.இ.இ தேர்வுகளில் அரசு மாதிரி பள்ளிகளில் இருந்து தேர்வாகி போயிருக்கிறார்கள். நிறைய பேர் மருத்துவக் கல்லூரிகளுக்கு போய் இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் மாதிரி பள்ளிகள் இவர்கள் சொல்கிற பி.எம் ஸ்ரீ பள்ளிகளை விட சிறப்பாக இருக்கிறது. இந்த மாதிரி பள்ளிகளுடைய எண்ணிக்கையை தமிழ்நாடு அரசு இன்னும் கூட்டி, இன்னும் சிறப்பாக கொண்டு போக வேண்டும் என்று வேண்டுமானால் நாம் வலியுறுத்தலாமே தவிர, இங்கே பி.எம் ஸ்ரீ பள்ளிகளை திறக்க வேண்டிய அவசியமே கிடையாது.
கேள்வி: அண்மையில் சி.பி.எம் மாநில செயலாளர் பெ. சண்முகம் எங்களுக்கு விசிக்காவுக்கும் கூட தி.மு.க ஆட்சி மீது சில விஷயங்களில் அதிருப்தி இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதே மாதிரி, வேல்முருகனும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். இப்படி அதிருப்தி இருக்கும்போது இந்த கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க-வை தவிர வேறு நம்பகமான ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணிக்கான வேறு வாய்ப்புகள் இல்லையா?
வாய்ப்புகள் குறித்து மற்ற கட்சிகளுக்கு நான் சொல்ல முடியாது. ஆரம்பத்தில், நீங்களே சொன்னீர்கள் வி.சி.க-வை திமுக கூட்டணியில் இருந்து இழுப்பதற்கு எல்லாரும் முயற்சிக்கிறார்கள் என்று சொன்னீர்கள். அதனால், வாய்ப்பு இல்லாமல் இல்லை. அதாவது ஒரு கூட்டணியில் இருக்கும் போது, கூட்டணிக்கு தலைமை தாங்குகிற கட்சியின் மீது திமுக அதாவது தி.மு.க-வின் மீது அதிருப்தி என்பது வேறு, தி.மு.க நடத்துகிற அரசாங்கத்தின் மீது அதிருப்தி என்பது வேறு. உதாரணத்துக்கு இந்த இந்தி திணிப்பை தி.மு.க எதிர்க்கவில்லை என்று வைத்துக் கொண்டால், மும்மொழி திட்டத்தை எதிர்த்து சரியான முறையில் கேட்கவில்லை என்றால் இந்த கூட்டணி கட்சிக்கு தலைமையாக இருக்கும் தி.மு.க இதில் சமரசம் செய்து கொள்கிறது என்று சொல்லலாம் இது கூட்டணியைப் பற்றிய விமர்சனம். ஆனால், தி.மு.க நடத்துகிற அரசாங்கத்தின் மேல் விமர்சனம், அதிருப்தி என்பது அரசு நிர்வாகம் பண்ணும்போது ஒரு கட்சி மட்டுமே அதை தீர்மானிக்கவில்லை, அரசாங்கம் என்பது பல சக்திகள் சேர்ந்து நடத்தப்படுகிறது. நாட்டிற்கு தலைமை வகிக்கிற ஒரு கட்சி இருக்கிறது என்றாலும், அரசாங்கம் என்பது இங்கே லெஜிஸ்லேடிவ் தான். அதற்கு எக்ஸிக்யூட்டிவ் என்கிற நிர்வாகத்தை நடத்துகிற பியூரோக்கிரஸி (அதிகாரத்துவம்)இன்னொரு பக்கம் நீதித்துறை இருக்கிறது. இது எல்லாம் சேர்ந்து இந்த அரசாங்கம் என்கிற ஒரு சாதனத்தை செயல்படுத்துகிறார்கள். அப்போது இந்த பியூரோக்கிரஸியால் (அதிகாரத்துவம்) நடத்தப்படுகிற நிர்வாக அமைப்பு மேல் அதிருப்தி என்பது எழத்தான் செய்யும், வரும். அந்த அதிருப்தியை, இல்லை இல்லை ரொம்ப சிறப்பாக நடக்கிறது என்று சொல்லி மூடி மறைக்கிறோமா, அல்லது இதில் குறைபாடுகள்இருக்கிறது, எங்களுக்கு அதிருப்தி இருக்கிறது என்று சுட்டிக் காட்டுவது சரியா? நாங்கள் வெளிப்படையாக சொல்கிறோம் நிர்வாகத்தில் இப்படியான பிரச்னைகள் இருக்கிறது, அதனால், இது எங்களுக்கு அதிருப்தி அளிக்கிறது என்று சொல்வது தவறு கிடையாது அதுதான் ஜனநாயகத்தில் சரியான முறை. அந்த அணுகுமுறையை விசிக வைத்திருக்கிறது. சி.பி.எம்-மும் அதை அவர்கள் செய்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். வேல்முருகனும் அதனால் அதிருப்தி அடைந்திருக்கலாம், அது தெரியவில்லை. மற்றவர்களைப் பற்றி நான் சொல்ல முடியாது.
வி.சி.க-வுக்கு இந்த செயல்படுத்துகிற முறையில் பியூரோக்கிரஸி (அதிகாரத்துவம்) செயல்பாடுகளில் பல அதிருப்தள் ஏற்படுகிறது. இந்த ஆட்சியினுடைய தலைவர் என்கிற முறையில் முதலமைச்சரின் கவனத்திற்கு நாங்கள் அதை கொண்டு போகிறோம்.
கேள்வி: இந்திய அளவில், தமிழ்நாட்டு அளவில் இந்தியா கூட்டணியினுடைய எதிர்காலம் என்னவாக இருக்கும்? கூட்டணி மாற வாய்ப்பு உள்ளதா?
கூட்டணி மாற வாய்ப்பு இல்லை இந்தியா கூட்டணி என்பது நாடாளுமன்ற தேர்தலுக்காக இந்திய அளவில் உருவாக்கப்பட்டது. இதில் இருக்கிற பல்வேறு கட்சிகள் மாநிலத்தில் நடக்கிற தேர்தல்களில் எதிரும் புதிருமாகக்கூட தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை இருக்கிறது. உதாரணத்திற்கு கேரளாவை எடுத்துக் கொண்டால் சி.பி.எம், காங்கிரஸ் எதிரெதிர் நிலையில் தேர்தலை சந்திக்க வேண்டி இருக்கிறது.
உத்திர பிரதேசத்தில் எடுத்துக் கொண்டால்கூட கூட்டணியில் நிற்கிறார்களா அல்லது எதிர்த்து நிற்கிறார்களா என்று சொல்ல முடியாது. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் டெல்லியில் ஆம் ஆத்மியை எதிர்த்து நிற்க வேண்டிய நிலை இருந்தது. அதேபோல, பஞ்சாபில் ஆம் ஆத்மியை எதிர்த்து நிற்க வேண்டியது உள்ளது எனவே, இந்த இந்தியா கூட்டணி என்பது நாடாளுமன்றத் தேர்தலை மையமாக வைத்து உருவானதுதான். அதனால், தேசிய அளவிலான பிரச்னைகளில் இணைந்து செயல்படுகிறோம் அங்கங்கே இருக்கிற சூழலுக்கு ஏற்ப செயல்படுகிறார்கள், கையாளுகிறார்கள். இந்தியா கூட்டணி என்பது அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக மிகப்பெரிய வெற்றியை பெறும். இந்த முறையே வெற்றியை பெற்றிருக்க வேண்டியது, ஒரு சிறிய அளவில் அந்த எண்ணிக்கை குறைந்துவிட்டது. அடுத்த முறை அது ஒரு பெரிய வெற்றியைப் பெறும்.
கேள்வி: 2026 சட்டமன்ற தேர்தல் எப்படி இருக்கும், உங்களுடைய கணிப்பு என்ன?
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி ஒரு மிகப்பெரிய மகத்தான வெற்றியைப் பெறும். எப்படி 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற அதே அளவு மகத்தான வெற்றியை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மறுபடியும் பெற்றது. அதேபோல, 2021 சட்டமன்ற தேர்தலில் பெற்ற அதே மகத்தான வெற்றியை இன்னும் அதைவிட சிறந்த வெற்றியை 2026 தேர்தலில் இந்த அணி வெற்றி பெறும்.
கேள்வி: வேங்கை வயல் விவகாரத்தில் தலித் செயல்பாட்டாளர்கள், பா.ஜ.க என அனைவரும் இந்த பிரச்னையை வைத்துதான் தங்களுடைய விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். வி.சி.க என்ன மாதிரி யான அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்ளப் போகிறது?
வேங்கை வயல் என்கிற ஒரு ஊரில் நடந்த வன்கொடுமை பிரச்னை, அந்த பிரச்னைக்கு அரசியல் களத்திலும் சரி. சட்ட ரீதியான போராட்டங்களிலும் சரி, தொடர்ச்சியாக வி.சி.க முன்னெடுத்து வருகிறது. இப்போதும் அங்கே சட்ட ரீதியாக இந்த பகுதி மக்களுக்கு எல்லா விதமான உதவிகளையும் வி.சி.க செய்து கொண்டிருக்கிறது. எனவே, இன்றைக்கு சி.பி.சி.ஐ.டி செய்த விசாரணை முடிந்து. விசாரணை நீதிமன்றத்திற்கு போயிருக்கிறது. அந்த வழக்கை எப்படி சந்திக்க வேண்டுமோ அப்படி சந்தித்து, உரிய முறையில் சட்ட ரீதியாக அதை அணுகுவோம்.
கேள்வி: ஆனால் காவல்துறை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக நிறுத்துகிறதே?
போலீஸ்பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக ஆக்கி இருக்கிறார்கள் என்பதை நாங்கள் சொல்கிறோம். போலீஸ் தரப்பில், இல்லை இவர்கள்தான் குற்றவாளிகள் என்று ஆதாரங்களின் அடிப்படையில் சொல்கிறோம் என்று சொல்கிறார்கள். இது நாம் நீதிமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டிய ஒரு விஷயம். அதை நாங்கள் நீதிமன்றத்தில்தான் எதிர்கொள்ள முடியும். விசாரணை நீதி மன்றத்தில் எப்படி வழக்கை நடத்துவது என்பதை நாங்கள் செய்வோம். அதற்கான எல்லா வழிகளையும், முறைகளையும் நாங்கள் செய்வோம். இது குறித்து நாங்கள் முதலமைச்சரிடம் நீதி விசாரணை வேண்டும் என்று ஒரு கோரிக்கையை வைத்தோம். ஆனால், மாநில அரசு விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஆரம்பித்துவிட்ட பிறகு, நீதி விசாரணை போடுவது என்பது வழக்கு சீக்கிரம் முடிவது என்பதை தடுப்பது போல ஆகிவிடும் என்கிற முறையில் அவர்கள் நீதி விசாரணை தேவையில்லை என்று நினைக்கிறார்கள். ஆனால், இந்த வழக்கை நாங்கள் விசாரணை நீதிமன்றத்தில் எதிர்கொள்வோம்.
நேர்காணல்: எ.பாலாஜி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.