வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தொகுதியில் வெற்றியைப் பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் தி.மு.க தீவிரமாக செயல்ப்பட்டு வருகிறது. அதே போல், 37 தொகுதிகளில் கோட்டைவிட்டதுபோல் இந்தத் தொகுதியைக் கோட்டைவிட்டுவிடக் கூடாது என்பதில் அதிதீவிரமாக இருக்கிறார் முதல்வர் எடப்பாடி. இரு கட்சியின் தேர்தல் வியூகமும் நாளுக்கு நாள் வேகமெடுத்துள்ளதை நம்மால் காண முடிகிறது.
வேலூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் டி.எம்.கதிர்ஆனந்த் களம் காண்கிறார்.புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் இம்முறை அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். வேலூர் தேர்தலில் மக்கள் நீதி மய்யமும், டிடிவி தினகரன் அணியின் அமமுகவும் பின் வாங்கியுள்ளன. இந்த ஒரு தொகுதியில் வெற்றி பெற இரு கட்சிகளும் கரன்சியைத் தண்ணீர் போல செலவழிக்க தயாராகவுள்ளனர்.வேலூர் தொகுதியின் வெற்றி இருகட்சிகளுக்கும் கவுர பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
மாற்றத்தை பார்த்த நாடாளுமன்ற தேர்தல்:
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் ஜெயலலிதா - கருணாநிதி மறைவுக்கு பின்பு நடந்த முதல் நாடாளுமன்ற தேர்தல். அரசியலில் மிகப் பெரிய ஆளுமைகளாக பார்க்கப்பட்ட கலைஞர் மற்றும் ஜெ-வின் இறப்புக்கு பின்பு தமிழகம் சந்தித்த மிகப் பெரிய தேர்தலில் வரலாற்றை மாற்றும் வகையில் புதிய கட்சிகள் உட்பட பல கட்சிகள் நேரடியாக களத்தில் இறங்கினர்.
அதுவரை தமிழக மக்களுக்கு இரண்டு கரை வேட்டி கட்சிகள் மட்டுமே பரீட்சை. அதிமுக- திமுக இந்த கட்சிகளை தவிர பல கிராம மக்களுக்கு தமிழகத்தில் வேறு கட்சிகள் இருப்பது கூட தெரியாது. ஆனால் மாற்றம் ஒன்றே மாறாது என்பதற்கு ஏற்றார் போல் கமலின் மக்கள் நீதி மய்யம் உட்பட புதிய கட்சிகள் பலவும் அறிமுகமாகின. திருமாவளவன், சீமான் கட்சிகளுக்கு புதிய சின்னமும் ஒதுக்கப்பட்டது. இதை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து சில வேட்பாளர்கள் வெற்றியும் அடைந்தன. ஆனால் ஒட்டுமொத்தமாக வெளியான தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் இருமுனை அரசியல் என்பது தான் சாத்தியம் என்பதை ஆணி அடித்தது போல் காட்டியது.
திமுக- வின் கை சற்று கூடுதலாக ஓங்கியது.தோல்விக்கு என்ன காரணம்? என்பதை அதிமுகவினர் இதுவரை கண்டுப்பிடித்தாக தெரியவில்லை. புதியதாக கட்சி தொடங்கிய கமல்ஹாசனுக்கும் மக்களிடையே வரவேற்பு இருப்பது தெரிய வந்தது. இப்படி ஏகப்பட்ட வரலாற்று மாற்றங்களை நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நமக்கு உணர்த்தியது.
வேலூரில் வெற்றி கனி யாருக்கு?
தமிழக அரசியல் நிலவரத்தை ஓரளவு கணிக்கும் தொகுதியாகவே அந்த காலம் முதலே வேலூர் அரசியல் நோக்கர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. வேலூர் மக்களின் அரசியல் நேர்த்தி என்பது எவராலும் கணிக்க முடியாத ஒன்று. காட்பாடி சட்டப்பேரவை தொகுதியில் 10 முறை வென்றவர் எனும் சிறப்பை பெற்ற துரைமுருகனின் காய் நகர்த்தல் படி கதிர் ஆனந்த் துள்ளியமாக ஒவ்வொரு படிகளை நகர்த்தி வருகிறார். கிராம கிராமாக சென்று மக்களை நேரில் சந்தித்து நூதன முறையில் தேர்தல் பிரச்சாரம் செய்தி வருகிறார் கதிர்.
கூடவே அவருக்கு துணையாக திமுகவால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்களும் களத்தில் இறங்கி பணியை செய்து வருகின்றனர்.
அதிமுக வை எடுத்துக் கொண்டால் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தால் மத்தியில் ஆளும் பாஜக அரசின் நன்மதிப்பை அதிமுகவால் பெற முடியாத சூழல் உருவாகும் என்பது இங்கு கவனிக்க வேண்டிய ஒன்று. இதனால் அதிமுக எடுத்திருக்கும் புதிய முயற்சி தான் ரஜினி ரசிகர் மன்றங்களை சந்தித்தும் ஆதரவு திரட்டும் பாணி. வேலூர் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் தேர்தல் பொறுப்பாளர்களாக 209 பேரை அதிமுக நியமித்துள்ளது.
அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 1984ம் ஆண்டு வேலூர் தொகுதி எம்பியாக 5 ஆண்டுகள் இருந்துள்ளார். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அரசியலை விட்டு ஒதுங்கியிருந்த நிலையில் 2001ம் ஆண்டு புதிய நீதிக்கட்சி என தனிக்கட்சியை தொடங்கினார். அக்கட்சியின் சார்பில் கடந்த 2014ம் ஆண்டு வேலூரில் பாஜ கூட்டணியில் போட்டியிட்டு 2வது இடத்தை பிடித்தார். இம்முறை தனது தாய் கழகமான அதிமுக கூட்டணியில் இடம்பெற்று, இரட்டை இலை சின்னத்தில் களம் கண்டுள்ளார்.
பணத்தை செலவு செய்வதில் இவரை அடித்துக் கொள்ள முடியாது. அமைச்சர் வீரமணியின் துணையுடன் வார்டு வார்டாக சென்று ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளார். வேலூர் மக்களவை தொகுதி போட்டி என்பது திமுக வேட்பாளர் டி.எம்.கதிர்ஆனந்த், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் ஆகிய இருவருக்கும் இடையில்தான் என்பது ஏற்கனவே உறுதியாகி விட்டது. நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் தீபலட்சுமிக்கு ஆதரவு என்பது கணிக்க முடியாத ஒன்றாக தற்போதைய சூழ்நிலை உள்ளது.
இங்கு வன்னிய சமுதாய வாக்குகள், இஸ்லாமியர்கள் வாக்குகள், கிறிஸ்துவ சமுதாய வாக்குகளை அதிகம் பெறும் கட்சியே வெற்றி பெறும் என்பது காலம் காலமாக நடந்து வரும் ஒன்று. இம்முறை வன்னிய சமுதாய வாக்குகள் திமுகவுக்கு நகர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவுடன் கூட்டணியின் இடம்பெற்றுள்ள பாமக வேலூர் தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் தொகுதியில் கணிசமாக உள்ள முதலியார் சமுதாய வாக்குகள் அப்படியே ஏ.சி.சண்முகத்துக்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.
மோடி அலை மைனஸா? பிளஸா?
ஏ.சி சண்முகத்திற்கு இப்போது இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை மோடிக்கு தமிழகத்தில் எதிர்ப்பு அலை இருப்பதாக கூறப்படுவது வேலூர் தேர்தலிலும் பிரதிபலிக்குமா? என்பது தான். 38 தொகுதிகளில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவின் தாமரை ஒரு இடத்தில் மலராமல் போனது. ஆனால் வடக்கில் அப்படியே தலைகீழாக மாறிமோடி அலை சூறாவளியாக வீசியது.
இம்முறையும் பாஜகவுக்கு தமிழக மக்கள் எதிர்ப்பு குரலை பதிவு செய்தால் ஏ.சி சண்முகத்திற்கு அது சிக்கலாக மாறும். அதே போல், பாஜக நிர்வாகிகள் இவருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டால் அது மக்கள் மனதில் எத்தகைய நிலைப்பாட்டை கொண்டு வரும் என யோகிக்க முடியவில்லை. ஆகவே, இந்த விஷயத்தில் ஏ.சி சண்முகம் கண்டிப்பாக நின்று யோசித்து அடிப்பது மிக மிக அவசியம்.
களத்தில் கடைசி நேரத்தில் செய்யும் பணியும், தொகுதி மக்களின் மனநிலையுமே வேலூர் தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.