வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி-காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் என்ன சர்ச்சை - What is the dispute around the Gyanvapi mosque-Kashi Vishwanath temple complex in Varanasi | Indian Express Tamil

வாரணாசியில் ஞானவாபி மசூதி-காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் என்ன சர்ச்சை?

முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில் சிவபெருமானுக்கான உண்மையான கோயில் அழிக்கப்பட்டு, அந்த இடத்தில் ஒரு மசூதி கட்டப்பட்டது. ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, தற்போதைய கோயில் மசூதியை ஒட்டி கட்டப்பட்டது.

வாரணாசியில் ஞானவாபி மசூதி-காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் என்ன சர்ச்சை?

வாரணாசி மாவட்ட அமர்வு நீதிமன்றம் திங்கள்கிழமை (செப்டம்பர் 12) ஞானவாபி மசூதி வளாகத்தை நிர்வகிக்கும் அஞ்சுமன் இந்தேஜாமியா மஸ்ஜித் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், இந்து பெண்கள் தாக்கல் செய்த மனுவைத் தொடரலாம் என மாவட்ட நீதிபதி ஏ.கே.விஷ்வேஷா தீர்ப்பளித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டி அமைந்துள்ள மசூதியின் நிர்வாகக் குழு, அந்த நிலம் வக்ஃப் சொத்து என்று வாதிட்டது.

நீதிமன்றத்தில் ஞானவாபி மசூதி வழக்கு

மசூதி பழைய கோவில் இருந்த இடத்தில் கட்டப்பட்டது என்று இந்து தரப்பு வாதிட்டது. அதே சமயம் முஸ்லிம் தரப்பு வக்ஃப் வளாகத்தில் கட்டப்பட்டது என்றும், 1991 ஆம் ஆண்டின் வழிபாட்டு தலங்கள் சட்டம் மசூதியின் தன்மையை மாற்ற தடை விதித்தது என்றும் வாதிட்டது. . (கீழே கடைசி பகுதியைப் பார்க்கவும்)

இந்த வழக்கை ஆரம்பத்தில் வாரணாசி உரிமையியல் நீதிபதி (மூத்த நீதிபதிகள் அமர்வு) விசாரித்தார். இந்த ஆண்டு மே 20ம் தேதி உச்ச நீதிமன்றத்தால் சிவில் வழக்கில் உள்ள பிரச்னைகள் சிக்கலானது என்ற அடிப்படையில் மாவட்ட நீதிபதியின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

மாவட்ட நீதிபதி ஜூன் மாதம் இந்த விஷயத்தை கேமரா வழியாக விசாரிக்கத் தொடங்கினார். ஜூலை மாதம், உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் தலையிடுவதற்கு முன் மசூதி குழுவின் மனு மீதான மாவட்ட நீதிமன்றத்தின் முடிவுக்காக காத்திருப்பதாகக் கூறியது.

வாரணாசியில் மசூதி

ஞானவாபி மசூதி 1669-இல் முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் ஆட்சியின் போது கட்டப்பட்டது. அவர் அந்த இடத்தில் இருக்கும் விஸ்வேஷ்வர் கோவிலை இடித்து, அதற்கு பதிலாக ஒரு மசூதியை அமைக்க உத்தரவிட்டார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத் துறையின் தலைவராக இருந்த ஏ.எஸ். அல்டேகர் என்பவர் 1937 ஆம் ஆண்டு எழுதிய ‘பனாரஸின் வரலாறு: பண்டைய காலத்திலிருந்து 1937 வரை’ என்ற புத்தகத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவிலின் பீடம் இடிக்காமல் விடப்பட்டது. மேலும் அது மசூதியின் முற்றமாக செயல்பட்டது. அதன் சுவர்களில் ஒன்றும் அப்படியே விடப்பட்டுள்ளது. அது கிப்லா சுவராக மாறியது. மக்காவை எதிர்கொள்ளும் ஒரு மசூதியின் மிக முக்கியமான சுவராகும். அழிக்கப்பட்ட கோவிலில் இருந்து பொருட்கள் மசூதி கட்ட பயன்படுத்தப்பட்டன. அதற்கான சான்றுகள் இன்று காணப்படுகிறது.

மசூதியின் பெயர் அருகிலுள்ள கிணற்றின் பெயரில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அது ‘ஞானவாபி’ அல்லது ‘ஞானக் கிணறு’ என்று அழைக்கப்படுகிறது. தற்போதைய காசி விஸ்வநாதர் கோயிலின் வளாகத்தில் உள்ள நந்திக் காளையின் பழைய சிற்பம் கோயிலின் கருவறைக்குப் பதிலாக மசூதியின் சுவரைப் பார்த்துள்ளது. நந்தி உண்மையில் மூல விஸ்வேஷ்வர் கோவிலின் கருவறையை நோக்கி இருந்ததாக நம்பப்படுகிறது.

சிவன் கோயில்

மசூதி கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கும் மேலாக, அந்த இடத்தில் கோவில் இல்லை. தற்போதைய காசி விஸ்வநாதர் கோயில் 18ஆம் நூற்றாண்டில் இந்தூரின் ராணி அஹில்யாபாய் ஹோல்கரால் மசூதியின் தெற்கே கட்டப்பட்டது. பல பத்தாண்டுகளாக இது இந்து மதத்தின் மிக முக்கியமான மற்றும் வணங்குதற்கு குரிய இடங்களில் ஒன்றாக உருவானது.

ஔரங்கசீப்பின் தாக்குதலின் போது, ​​விஸ்வேஷ்வர் கோவிலின் உண்மையான லிங்கம் ஞானவாபி கிணற்றுக்குள் பூசாரிகளால் மறைத்து வைக்கப்பட்டதாக பல இந்துக்கள் நீண்ட காலமாக நம்புகிறார்கள் – அது மசூதி இப்போது இருக்கும் புனித இடத்தில் பூஜை மற்றும் சடங்குகளை நடத்துவதற்கான விருப்பத்தைத் தூண்டியுள்ளது.

நீண்ட கால கோரிக்கைகள்

அவ்வப்போது, மனுதாரர்கள் மசூதிக்கு உரிமை கோருகின்றனர். இது இந்து வழிபாட்டின் உண்மையான புனித இடமாக உள்ளது என்று கூறினர். வி.எச்.பி.-யின் ராமர் கோயில் இயக்கம் அயோத்தியில் உள்ள ராமஜென்மபூமி கோயில்-பாபர் மசூதி தளம், காசி-விஸ்வநாதர் கோயில்-ஞானவாபி மசூதி மற்றும் மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி ஆகியவற்றைத் விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்கள் தலங்கள் சட்டம் (சிறப்பு சட்டம்) 1991 – அயோத்தியில் இந்த வழக்கின் கீழ் இருந்ததைத் தவிர்த்து, அனைத்து வழிபாட்டுத் தலங்களின் தன்மையும் ஆகஸ்ட் 15, 1947-இல் இருந்ததைப் போலவே பராமரிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடுகிறது. மேலும், இந்த தேதிக்கு முன் எந்த ஒரு இடத்தையும் ஆக்கிரமித்திருந்தால் நீதிமன்றங்களில் சவால் செய்ய முடியாது – வாரணாசியில் உள்ள சர்ச்சைக்குரிய வளாகத்திற்கு இது பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 2021 இல், விரைவு நீதிமன்ற சிவில் நீதிபதி (மூத்த நீதிபதிகள் அமர்வு) அசுதோஷ் திவாரி, இந்திய தொல்லியல் ஆய்வு தலைமை இயக்குநர், காசி விஸ்வநாதர் கோயில்-ஞானவாபி மசூதி வளாகத்தில் விரிவான தொல்லியல் இயற்பியல் ஆய்வு செய்யுமாறு இந்திய தொல்லியல் துறையின் இயக்குநர் ஜெனரலுக்கு உத்தரவிட்டார். “சர்ச்சைக்குரிய இந்த இடத்தில் தற்போது உள்ள மதக் கட்டமைப்பு மேலோட்டமாக, மாற்றியமைக்கப்படுகிறதா அல்லது கூடுதலாக மாற்றியமைக்கப்படுகிறதா அல்லது ஏதேனும் ஒரு மதக் கட்டமைப்புடன் அல்லது அதற்கு மேல் ஏதேனும் ஒரு கட்டமைப்பு ஒன்றுடன் ஒன்று உள்ளதா கண்டறிய வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

ஞானவாபி மசூதி இந்திய தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட இடம் அல்ல, அதன் பராமரிப்பு அல்லது பராமரிப்பில் இந்திய தொல்லியல் துறைக்கு எந்தப் பங்கும் இல்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: What is the dispute around the gyanvapi mosque kashi vishwanath temple complex in varanasi

Best of Express