ஆசைத்தம்பி
FIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று பெரிய திருப்பங்கள் இல்லை. எதிர்பார்த்தபடி போர்ச்சுகல், உருகுவே, ஸ்பெயின் வென்றன.
FIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று மாலை 05.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் போர்ச்சுகல் மற்றும் மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. போர்ச்சுகல் வீரர் கார்னரில் இருந்து பந்தை அடிக்காமல், மற்றொரு வீரருக்கு பாஸ் செய்தார். அவர் பந்தை கோல் போஸ்ட்டை நோக்கி அடிக்க, கிறிஸ்டியானோ ரொனால்டோ தலையால் முட்டி அதனை அபாரமான கோலாக மாற்றினார். இதன்பின், மொராக்கோ அணி எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும், கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில், போர்ச்சுக்கல் 1-0 என வெற்றி பெற்றது.
முதல் போட்டியில் ஸ்பெயினுக்கு எதிராக 3-3 என டிரா செய்த போர்ச்சுகல், நேற்றைய போட்டியில் 1-0 என வென்றுள்ளது. போர்ச்சுகலின் இந்த நான்கு கோல்களையும் கிறிஸ்டியானோ ரொனால்டோவே அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இரவு 08.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில், 'A' பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் 22வது நிமிடத்தில் உருகுவே அணியின் நடசத்திர வீரர் லூயிஸ் சுவாரஸ் கோல் அடிக்க, அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதையடுத்து, ஆட்டத்தின் இறுதி வரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இறுதியில், உருகுவே அணி சவுதி அரேபியா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் பெற்ற வெற்றி மூலம் உருகுவே அணி 2-வது சுற்றை நெருங்கியுள்ளது. அதேசமயம், சவுதி அரேபிய அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும்.
இரவு 11.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில், ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டியின் முதல் பாதியில் கோல் ஏதும் விழவில்லை. இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், 54-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் தியாக கோஸ்டா ஒரு கோல் அடித்தார். அதன்பின்னர், இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இறுதியில், ஈரான் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் வெற்றிப் பெற்றது.