உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை அகன்ற திரையில் கண்டு களிக்க ஏதுவாக, வடசென்னை கால்பந்து ரசிகர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விளையாட்டு என்றால் முதல் இருப்பது எப்போதும் கிரிக்கெட் மட்டுமே. ஆனால், வட சென்னையில் கால்பந்து விளையாட்டு தான் பிரதானம். அங்குள்ள இளைஞர்களிடம் சென்று உங்கள் ஹீரோ யாரென்று கேட்டால், முதலில் உச்சரிப்பது மெஸ்ஸி, ரொனால்டோ என்ற பெயர்களைத் தான். கிட்டத்தட்ட வட சென்னையின் அடையாளமாகவே கால்பந்து உள்ளது எனலாம்.
ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்கியதிலிருந்து, சென்னையில், அதிக கால்பந்து ரசிகர்களைக் கொண்டுள்ள வட சென்னை கோலாகலம் பூண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் நடைபெற்ற லீக் மற்றும் காலிறுதி, அரையிறுதிப் போட்டிகளை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர். இறுதிப் போட்டி ரஷ்ய தலைநகரம் மாஸ்கோவில் இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு நடக்கிறது. இதில் பிரான்ஸ், குரோஷிய அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், வியாசர்பாடியில் உள்ள ‘குடிசைப்பகுதி குழந்தைகள் விளையாட்டு மற்றும் கல்வி மேம்பாட்டு மையம்’ சார்பில் வியாசர்பாடி முல்லைநகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள திடலில் அகன்ற திரையில் இன்று நடக்கும் இறுதிப் போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வடசென்னை தமிழ்ச் சங்கத் தலைவர் இளங்கோ கூறும்போது, “வியாசர்பாடி பகுதியில் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஆறுதல் மாதா ஆலயம் கட்டப்பட்டது. அதன் அருட்தந்தைகளாக இருந்த மந்தோனி, ஸ்லூஸ் ஆகியோர் அப்பகுதியில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு உணவிட்டு, கால்பந்து விளையாட்டை கற்றுக்கொடுத்தனர். அங்கு பலர் சென்னை துறைமுகத் தொழிலாளிகளாக இருந்தனர். அவர்களின் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பிரிவில் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு கிடைத்தது. அதனால் கால்பந்து விளையாட்டு மீது வட சென்னை மக்களுக்கு பற்று ஏற்பட்டது. அப்போது தொடங்கிய உறவு, இன்றும் நீடிக்கிறது” என்றார்.
‘குடிசைப்பகுதி குழந்தைகள் விளையாட்டு மற்றும் கல்வி மேம்பாட்டு மையம்’ தலைவர் தங்கராஜ் கூறுகையில், "வட சென்னையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கால்பந்து விளையாடப்படுகிறது. கால்பந்து விளையாட்டில் பிரகாசிக்க வேண்டுமென்றால் போராட்ட குணம், தைரியம், தன்னம்பிக்கை, உடல் பலம் அவசியம். இவை அனைத்தும் வட சென்னை மக்களிடம் இருப்பதால், வட சென்னையுடன் கால்பந்து ஒன்றிவிட்டது. குழந்தைகளிடம் கால்பந்து விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியை அகன்ற திரையில் ஒளிபரப்பு செய்தோம். இதைத் தொடர்ந்து 4-வது முறையாக ஒளிபரப்பு செய்ய இருக்கிறோம்" என்று அவர் கூறினார்.
இதேபோன்று ஹாரிங்டன் கால்பந்து அகாடமி சார்பில் ஐசிஎஃப் தெற்கு காலனியில் உள்ள பன்நோக்கு விளையாட்டு வளாகத்தில் மாலை 4.45 மணிக்கு காட்சி போட்டியும், இரவு 7.30 மணிக்கு அகண்ட திரையில் இறுதிப் போட்டி ஒளிபரப்பும் செய்யப்பட உள்ளது. பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு ஹோட்டல்கள் மற்றும் கால்பந்து விளையாட்டு சங்கங்கள் சார்பிலும் வெவ்வேறு இடங்களில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.