/indian-express-tamil/media/media_files/2024/12/23/JdIEb2k0b712tMSYBFMY.jpg)
சமையலறை என்பது ஒரு போர் களம் போல. சில நேரங்களில் சமையல் செய்வது மிகவும் சவாலாக இருக்கும். ஆனால், சில எளிய டிப்ஸ்கள் உங்கள் வேலையை வெகுவாகக் குறைத்து, சமையலை மிகவும் சுவாரசியமாக்கும். உங்கள் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும், அன்றாட வாழ்வில் மிகவும் தேவைப்படும் 10 அத்தியாவசியமான கிச்சன் டிப்ஸ்கள் பற்றி பார்ப்போம். இது பெரும்பாலானொருக்கு தெரியாத ஒன்றாகும்.
1. காய்ந்த இஞ்சி, பூண்டு தோலை நீக்க ஒரு மேஜிக்:
இஞ்சி மற்றும் பூண்டின் தோலை உரிக்க சிரமமாக இருக்கிறதா, இனி கவலை வேண்டாம். இஞ்சி துண்டுகள் அல்லது பூண்டுப் பற்களை வெந்நீரில் 5 முதல் 10 நிமிடங்கள் ஊற வையுங்கள். பிறகு பார்த்தால், தோல் தானாகவே இலகுவாக நீங்கிவிடும். கடினமான வேலை நிமிடங்களில் முடிந்துவிடும்.
2. அதிக நாட்களுக்கு புத்தம் புதியதாக காய்கறிகள்:
வெங்காயம், தக்காளி, கீரை போன்றவற்றை நீண்ட நாட்களுக்கு ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க ஒரு வழி உள்ளது. காய்கறிகளை பேப்பர் டவலில் சுற்றி, காற்று புகாத டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வையுங்கள். பேப்பர் டவல் ஈரப்பதத்தை உறிஞ்சி விடுவதால், காய்கறிகள் அழுகாமல் அதிக நாட்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும். கீரைகளை ஒரு நியூஸ் பேப்பரில் சுற்றலாம்.
3. சமையலில் உப்பு அதிகமானால் என்ன செய்வது:
சில சமயம் தெரியாமல் கறியில் அல்லது சாம்பாரில் உப்பு அதிகமாகிவிடுவதுண்டு. அப்போது பதற்றம் அடையாமல் இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க. ஒரு உருளைக்கிழங்கைத் தோல் சீவி, பெரிய துண்டாக நறுக்கி, அதிக உப்புள்ள சமையலில் போட்டு, சிறிது நேரம் கொதிக்க விடுங்கள். பரிமாறுவதற்கு முன் அதை எடுத்துவிடுங்கள். உருளைக்கிழங்கு அதிகப்படியான உப்பை உறிஞ்சிக் கொள்ளும். புளிப்பு அதிகமாக இருந்தால், சிறிது வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்க்கலாம்.
4. எலுமிச்சை சாறு முழுவதுமாகப் பிழிய:
சாதாரண முறையில் பிழிந்தால், எலுமிச்சையில் இருக்கும் சாறு முழுவதுமாக கிடைக்காது. எலுமிச்சைப் பழத்தை பிழிவதற்கு முன், அதனை சில நிமிடங்கள் சூடான நீரில் போட்டு ஊற வைக்கவும், அல்லது மேஜையின் மீது வைத்து லேசாக அழுத்தி உருட்டவும். இதனால் பழத்தின் உள்ளிருக்கும் சதைப்பகுதி தளரும், முழுச் சாற்றையும் எளிதாகப் பெறலாம்.
5. தேங்காயை எளிதாக உடைக்க:
சிரமமின்றி தேங்காய் ஓட்டிலிருந்து தேங்காயை எடுக்க ஒரு சிம்பிள் டிப்ஸ் உள்ளது. தேங்காயை இரண்டாக உடைத்த பிறகு, அடுப்பில் குறைந்த தீயில் 2 முதல் 3 நிமிடங்கள் வைக்கவும். சூடு படும்போது தேங்காய்க்கும் ஓட்டுக்கும் இடையே உள்ள பிணைப்பு விலகி, தேங்காய் முழுவதுமாக தனியே வந்துவிடும்.
6. காய்ந்த மசாலா பொருட்களைப் புத்துணர்ச்சியாக்க:
மசாலா பொருட்கள் (மிளகாய் தூள், தனியா தூள் போன்றவை) ரொம்ப நாட்களுக்குப் பிறகு வாசனையை இழந்து போகலாம். வாசனையிழந்த மசாலாப் பொருட்களை ஒரு வாணலியில் போட்டு மிதமான சூட்டில் லேசாக சூடுபடுத்தவும். இதனால் அதன் அசல் மணம் திரும்பி, சமையலுக்கு கூடுதல் சுவை கிடைக்கும். சூடு படுத்திய பிறகு, ஆற வைத்து டப்பாவில் சேமிக்கலாம்.
7. பிஸ்கட்கள் மொறுமொறுப்பாக இருக்க:
பிஸ்கட்களை சேமித்து வைக்கும் டப்பாவில் ஒரு கரண்டி சர்க்கரை அல்லது ஒரு சிறிய துண்டு பிரட் சேர்த்து மூடி வைக்கவும். சர்க்கரை அல்லது பிரட் ஈரப்பதத்தை உறிஞ்சி, பிஸ்கட் நீண்ட நாட்களுக்கு மொறுமொறுப்பாக இருக்க உதவும்.
8. முட்டை ஓடுகளை எளிதில் நீக்க:
அவித்த முட்டையின் ஓட்டை நீக்குவது சில சமயங்களில் கடினமாக இருக்கும். முட்டையை வேகவைத்த பிறகு, அதை உடனடியாக குளிர்ந்த தண்ணீரில் போடவும். வெப்ப நிலை திடீரென மாறுவதால், ஓடு எளிதில் தனியாகப் பிரியும்.
9. அரிசி அல்லது பருப்பில் பூச்சி வராமல் தடுக்க:
அரிசி, பருப்பு போன்ற தானியங்களில் பூச்சி வராமல் பாதுகாக்க அந்தப் பொருட்களின் டப்பாவில் சிறிது காய்ந்த வேப்ப இலைகள் அல்லது இரண்டு மூன்று காய்ந்த மிளகாய்கள் அல்லது சிறிது கல் உப்பை சேர்த்து வைக்கவும். இந்த பொருட்கள் இயற்கையான பூச்சி விரட்டியாகச் செயல்பட்டு, நீண்ட நாட்களுக்குப் பூச்சிகள் வராமல் தடுக்கும்.
10. கத்தியின் கூர்மையை அதிகப்படுத்த:
சமையலறைக் கத்தி கூர்மை குறைந்தால், காய்கறிகள் வெட்டுவது கடினம். ஒரு பீங்கான் கப் (Ceramic Mug)-பின் அடியில் உள்ள சொரசொரப்பான பகுதியை ஒரு கூர் தீட்டும் கருவி போலப் பயன்படுத்தலாம். கத்தியின் ஓரத்தை அதன் மீது மெதுவாகத் தேய்க்கவும். கத்தியின் கூர்மை உடனடியாக அதிகரிக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us