உருளைக்கிழங்கில் (ஆலு) பல்வேறு ரெசிபிகள் செய்யலாம். குழம்பு செய்வது முதல் ஸ்நாக்ஸ் ரெசிபி வரை பலவற்றை செய்து சாப்பிடலாம். அந்த வகையில் இதுவரை இல்லாத வகையில் புது ரெசிபி, உருளைக்கிழங்கு வைத்து பாப்கார்ன் எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
உருளைக்கிழங்கு - 250 கிராம்
சோள மாவு - தேவையான அளவு
முட்டை - 1
எண்ணெய் - தேவையான அளவு
பிரெட் தூள் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கு
செய்முறை
உருளைக்கிழங்கை தோல் நீக்கி சதுரமான துண்டுளாக (cube shape) நறுக்கி கொள்ளவும். நறுக்கிய உருளைக்கிழங்கை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற விடவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் உருளைக்கிழங்கை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் மூடி போட்டு வேக விடவும். 5 நிமிடம் கழிந்த பின்னர் தண்ணீரை வடித்து விட்டு உருளைக்கிழங்கை மட்டும் தனியாக எடுத்து குளிர்ந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைக்கவும்.
ஒரு பிளாஸ்டிக் கவரில் சோள மாவை போட்டு அதில் உருளைக்கிழங்கை தண்ணீர் இல்லாமல் வடித்து போட்டு நன்றாக கலக்கவும். இப்போது சோளமாவு முழுவதும் உருளைக்கிழங்கில் ஒட்டியிருக்கும். ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும், ஒரு தட்டில் பிரெட் தூளை கொட்டி பரப்பி வைக்கவும். இப்போது உருளைக்கிழங்கு துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து முட்டையில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும். அடுப்பில் கடாய் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து உருளைக்கிழங்குகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இப்போது சூப்பரான மொறு மொறு ஆலு பாப்கார்ன் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“