சுரைக்காயில் பொரியல், குழம்பு செய்து சாப்பிட்டிருப்போம். இனிப்பு செய்வது குறித்து கேள்விப்பட்டிருக்கீங்களா? சுரைக்காயில் பர்ஃபி செய்வது குறித்து இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
தோல், விதை நீக்கி துருவிய சுரைக்காய் – ஒன்றரை கப்
தேங்காய்த் துருவல் – அரை கப்
மைதா மாவு - கால் கப்
பொட்டுக்கடலை மாவு – கால் கப்
நெய் – சிறிதளவு
பச்சை நிற ஃபுட் கலர் – 1 சிட்டிகை
ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்
சர்க்கரை – 1 கப்
கண்டன்ஸ்டு மில்க் – அரை கப்
நட்ஸ் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
சுரைக்காய் துருவலில் நீர் இல்லாமல் பிழிந்து அடுப்பில் பாத்திரம் வைத்து வேக விட்டு எடுக்கவும். அடுத்து மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு சேர்த்துச் சிவக்க வறுத்து எடுக்கவும். மாவை வேறு பாத்திரத்தில் மாற்றிவிட்டு அதே கடாயில் சர்க்கரையுடன் சிறிதளவு தண்ணீர் விட்டுக் கொதிக்க விட்டு பாகு காய்ச்சவும். அதனுடன் மைதா மாவு, பொட்டுக்கடலை மாவு, நெய், சுரைக்காய்த் துருவல், தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறவும். பிறகு ஃபுட் கலர், நெய், ஏலக்காய்த்தூள், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து கிளறி விடவும்.
இப்போது ஒரு தட்டு எடுத்து அதில் நெய் (அ) வெண்ணெய் தடவி வைக்கவும். அதில் இந்த கலவையை ஊற்றவும்.மேலே நட்ஸ் தூவி விடவும். ஆறியதும் உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் நறுக்கி சுவையாக சாப்பிடவும். அவ்வளவு தான் சுரைக்காய் பர்ஃபி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“