/indian-express-tamil/media/media_files/2025/10/01/constipation-after-60-2025-10-01-11-30-43.jpg)
முதுமைக் காலத்தில் ஏற்படும் சவாலான ஆரோக்கியப் பிரச்சனைகளில் ஒன்று மலச்சிக்கல். 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு இது மிகவும் பொதுவானதாகவும், சிரமம் அளிப்பதாகவும் மாறுகிறது. வயது அதிகரிக்கும்போது செரிமானம் மந்தமாவதால், வாயுப் பிரச்சனை, பசியின்மை, சோர்வு, மன அழுத்தம் போன்ற உபாதைகள் ஏற்படலாம்.
மலச்சிக்கலுக்கான முக்கியக் காரணங்கள்:
வயதாவதால் உடல் இயக்கம் குறைவது, தாகம் குறைந்து தண்ணீர் குடிக்கும் பழக்கம் குறைவது, மற்றும் நார்ச்சத்து குறைவான உணவுகள் ஆகியவை மலச்சிக்கல் ஏற்பட அடிப்படை காரணங்கள் ஆகும். குறிப்பாக, கால்சியம், இரத்த அழுத்தம், மனச்சோர்வு மற்றும் வலி நிவாரணிகள் போன்ற சில வழக்கமான மருந்துகளின் பக்க விளைவுகளும் குடல் இயக்கத்தை பாதிக்கின்றன. கழிப்பறையில் அதிக அழுத்தம் கொடுத்து மலம் கழிக்கும்போது இரத்த ஓட்டம் திடீரெனக் குறைந்து, படபடப்பு அல்லது மயக்கம் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை சரிசெய்யவும் சில வழிகள் உள்ளதாக ஹெல்த் கஃபே தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்:
நிதானமான உடற்பயிற்சி: தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் நிதானமாக நடப்பது, குடல் இயக்கம் மந்தமாகாமல் இருக்க உதவும்.
போதுமான நீர்ச்சத்து: கருப்பை நோய், இருதய அல்லது சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன், மற்றவர்கள் தினமும் 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம்.
பப்பாளி பழத்தின் சக்தி: பப்பாளியில் உள்ள பப்பைன் (Papain) எனும் செரிமான என்சைம் குடல் இயக்கத்தைத் தூண்டுகிறது. தினமும் காலை அல்லது இரவு உணவுக்குப் பின் 100 முதல் 150 கிராம் பப்பாளி சாப்பிடுவது சிறந்தது.
நார்ச்சத்து நிறைந்த உணவு: அரிசி உணவைக் குறைத்து, அதற்கு மாற்றாக அதிக நார்ச்சத்து கொண்ட சிறுதானியங்களான ராகி, கம்பு, சோளம் போன்றவற்றை உணவில் சேர்ப்பது மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வாகும். அத்துடன், பாகற்காய், புடலங்காய் போன்ற அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளையும் தினசரி உணவில் சேர்க்க வேண்டும்.
வெதுவெதுப்பான நீர்: காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது, குடல் இயக்கத்தைத் தூண்டி, மலம் இளகச் செய்ய உதவுகிறது.
திரிபலா சூரணம்: கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகள் அடங்கிய திரிபலா சூரணத்தை, தினமும் இரவு வெந்நீரில் கலந்து ஒரு தேக்கரண்டி அளவு அருந்துவது மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தி, தூக்கத்தையும் மேம்படுத்தும். இந்த எளிய இயற்கை வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் 60 வயதிற்குப் பிறகும் ஆரோக்கியமான குடலுடன் வாழ முடியும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.