/indian-express-tamil/media/media_files/2025/06/02/Y3btjJtutCAbj1AhMhb0.jpg)
தீபாவளி என்றாலே புதுத்துணி, பலகாரம், பட்டாசு என இருந்தாலும், அசைவப் பிரியர்களுக்கு மட்டன் கறிக்குழம்பு இல்லையென்றால் அந்த கொண்டாட்டம் முழுமையடையாது. இந்த வருடம், உங்கள் தீபாவளியை மிகவும் விசேஷமாக மாற்ற மிகச் சுலபமான முறையில் மட்டன் கறிக்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மட்டன்
மஞ்சள் தூள்
இஞ்சி பூண்டு விழுது
உப்பு
நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய்
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
சீரகம்
சோம்பு
கறிவேப்பிலை
சின்ன வெங்காயம் (அல்லது பெரிய வெங்காயம்)
தக்காளி
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
தனியா தூள்
மட்டன் மசாலா/கரம் மசாலா
கொத்தமல்லி இலை
தேங்காய்த் துருவல்
முந்திரி
பொட்டுக்கடலை (அ) கசகசா
செய்முறை:
மட்டனை நன்றாகக் கழுவி, அதில் மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து, குறைந்தது 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். இது மட்டன் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்க உதவும். அரைக்க வேண்டிய பொருட்களை (தேங்காய், முந்திரி, சோம்பு, பொட்டுக்கடலை) சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
அடுத்து கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவும். மீதமுள்ள 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, அது நன்றாக மசியும் வரை வதக்கவும். இப்போது மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், மட்டன் மசாலா/கரம் மசாலா மற்றும் தேவையான உப்பு சேர்த்து, தீயைக் குறைத்து இரண்டு நிமிடங்கள் கிளறவும். மசாலா கருகாமல் பார்த்துக்கொள்ளவும். ஊறவைத்த மட்டனை குக்கரில் சேர்த்து, மசாலாவுடன் நன்கு கலந்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
2 - 2.5 கப் தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி வந்ததும், குக்கரை மூடி, மிதமான தீயில் 5 முதல் 6 விசில் வரும் வரை வேக விடவும். மட்டன் நன்றாக வெந்திருக்க வேண்டும். மட்டன் வெந்ததும், குக்கரை திறந்து, நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதைச் சேர்க்கவும். குழம்பின் கெட்டித்தன்மைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து, குழம்பை நன்றாகக் கலக்கி, மிதமான தீயில் 5 முதல் 7 நிமிடங்கள் கொதிக்க விடவும். தேங்காயின் பச்சை வாசனை நீங்கி, எண்ணெய் மேலே பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும். இறுதியாக, நறுக்கிய கொத்தமல்லி இலையைத் தூவி அடுப்பை அணைக்கவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.