/indian-express-tamil/media/media_files/2025/03/06/5i6F4i6xssjn66cj8FII.jpg)
முட்டை என்பது நீண்ட காலமாக மனித உணவில் இருக்கும் ஒரு முக்கியமான உணவுப் பொருள் ஆகும். நவீன அறிவியல் முட்டையைச் சத்துக்கள் நிறைந்த, 'விட்டமின் டானிக்' என்றே சிறப்பித்துக் கூறுகிறது. இது புரதச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் பல்வேறு உயிர்ச்சத்துக்களை ஒருங்கே கொண்ட ஒரு சிறந்த காலை உணவுத் தேர்வாகும்.
முட்டையில் உள்ள சத்துக்களில் மிக முக்கியமான ஒன்று, கோலின் (Choline) ஆகும். இந்த சத்து பல தாவரப் பொருட்களில் குறைவாக இருக்கும் நிலையில், முட்டையில் மிக அதிகமாக உள்ளது. கோலின், மூளையின் செல் சவ்வுகளுக்குப் பயனளித்து, நினைவாற்றல் மற்றும் புத்திசாலித்தனம் போன்றவற்றுக்கு இன்றியமையாத பொருளாகப் பார்க்கப்படுகிறது.
மேலும், முட்டையில் நீரில் கரையும் வைட்டமின்களான ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் பி12 ஆகியவை அதிக அளவில் உள்ளன. இதுதவிர, ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படும் செலினியம் மற்றும் நம் உடல் எளிதில் உட்கிரகிக்கக்கூடிய இரும்புச்சத்தும் முட்டையில் நிறைந்துள்ளன. முட்டை சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடும் என்ற பொதுவான கருத்து தவறானது என்கிறார் டாக்டர் சிவராமன். ஒரு முட்டையில் சுமார் 80 கலோரிகள் மட்டுமே உள்ளன. இது ஒரு இட்லியின் கலோரியை ஒத்திருந்தாலும், சத்துக்களை ஒப்பிடும்போது முட்டை கூடுதல் பலனை அளிக்கிறது.
முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்புச் சத்து மற்றும் கொலஸ்ட்ரால் இருக்கத்தான் செய்கிறது. இருப்பினும், கொழுப்பில் கரையும் வைட்டமின்களை உடல் உறிஞ்சிக் கொள்ள கொழுப்பு சத்து அவசியமானதால், குறைந்த அளவு கொலஸ்ட்ரால் உடலுக்குத் தேவை. முட்டையில் இருந்து கிடைக்கக்கூடிய கொழுப்புச் சத்து, கெட்ட கொலஸ்ட்ராலை உயர்த்தாமல், நல்ல கொலஸ்ட்ராலை அளிப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிடுவதால் பெரிய தீங்கு ஏற்படாது.
முட்டையை வேகவைத்து (Boiled Egg) சாப்பிடுவதே சிறந்தது. கிருமித் தொற்று மற்றும் ஜீரணக் குறைபாடு போன்ற அபாயங்கள் இருப்பதால், பச்சை முட்டையை அருந்துவது உசிதமல்ல. முட்டையைத் தேர்ந்தெடுக்கும் போது, பிராய்லர் முட்டையை விட நாட்டுக்கோழி முட்டைக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நாட்டுக்கோழி முட்டையை விட, காடை முட்டையில் ஆறு மடங்கு அதிக சத்துக்கள் இருப்பதாக அவர் கூறுகிறார். வளரும் குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் கட்டாயம் முட்டை கொடுக்க வேண்டும் என்று டாக்டர் சிவராமன் வலியுறுத்துகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.