2 ஸ்பூன் உப்பு, பாதி எலுமிச்சை... தோசைக் கல்லில் எண்ணெய் பிசுக்கு ஈஸியா அகற்றுவது எப்படி?
வெரைட்டியான தோசைகளை சுட்டு அசத்த நமக்கு நம்முடைய தோசை கல் சுத்தமாக இருத்தல் வேண்டும். எண்ணெய் படிந்த கறைகள் நம்முடைய தோசைகளின் வடிவத்தை முற்றிலும் பாதிக்கிறது.
தென்னிந்திய காலை உணவு வகைகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக தோசை உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி ருசிக்கும் இந்த அற்புதமான உணவு தற்போது ஏகப்பட்ட வெரைட்டிகளில் செய்து அசத்தலாம்.
Advertisment
இப்படியான தோசைகளை சுட்டு அசத்த நமக்கு நம்முடைய தோசை கல் சுத்தமாக இருத்தல் வேண்டும். எண்ணெய் படிந்த கறைகள் நம்முடைய தோசைகளின் வடிவத்தை முற்றிலும் பாதிக்கிறது. நாம் எதிர்பார்ப்பது போல் நமக்கு தோசை கிடைப்பதில்லை. அதனால், தோசைக் கல்லை எப்படி எளியமாக சுத்தம் செய்வது என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளவது இப்போது அவசியமாகிறது.
அந்த வகையில், நம்முடைய தோசைக் கல்லை எப்படி எளிதில் சுத்தம் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம். இதற்கு 2 பொருட்கள் தான் தேவை. அவை 2 ஸ்பூன் உப்பு, பாதி எலுமிச்சை. இவற்றை கொண்டு உங்கள் தோசைக் கல்லில் இருக்கும் கறைகளை அடித்து விரட்டலாம்.
நீங்கள் செய்ய வேண்டியவை:
முதலில் தோசைக் கல்லை எடுத்து அடுப்பில் வைத்துக் கொள்ளவும். அடுப்பை அதிகமான தீ வைத்து சூடேற்றவும். கல்லில் சூடு ஏறியதும், 2 ஸ்பூன் உப்பு சேர்க்கவும். பிறகு, ஒரு எலுமிச்சை பழம் எடுத்து அதை பாதியாக நறுக்கி, ஒரு பாதியை ஸ்பூன் அல்லது ஃபோர்க்கில் வைத்து குத்தி உப்பு மேல் வைத்து நன்கு தேய்த்து கொள்ளவும். இதேபோல் கல் முழுதும் நன்கு உரசி தேய்க்கவும். குறைந்தது 2 நிமிடங்களுக்கு அவ்வாறு தேய்க்கவும்.
பிறகு மீதமுள்ள பாதி எலுமிச்சையை எடுத்து தோசைக் கல் மீது பிழிந்து விடவும். அவற்றுடன் 2 ஸ்பூன் அளவு உப்பு சேர்த்து மீண்டும் ஒரு முறை தேய்க்கவும். பின்னர் தோசைக் கரண்டி கொண்டு உரசிக் கொள்ளவும். அவற்றை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர், ஒரு வெங்காயத்தை பாதியாக நறுக்கிக் கொள்ளவும். தோசைக் கல் மீது எண்ணெய் ஊற்றிய பிறகு, அதில் வெங்காயத்தை வைத்து தேய்த்துக் கொள்ளவும். இப்போது பார்த்தல் தோசைக் கல் தோசை சுட தயாராக இருக்கும். அவற்றின் மீது மாவை ஊற்றி தோசைகளை சுட்டுக் கொள்ளலாம்.