முட்டை மஞ்சள் கருவில் இருக்கும் சத்து; இந்த 3 பொருள் சேர்த்த கஷாயம்: ஈரல் கொழுப்பை கரைக்க டாக்டர் ப்ரீத்தி ராஜ் பகிரும் டிப்ஸ்

"வலி நிவாரணி மாத்திரைகள் அதிக நாள்களாக எடுத்து கொள்வதாலும், உடல் பருமன், சர்க்கரை நோய், அடி வயிற்றில் அதிகம் கொழுப்பு சேருவது போன்ற இன்னும் பிற காரணங்காளாலும் ஃபேட்டி லிவர் ஏற்படுகிறது." என்று ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ப்ரீத்தி ராஜ் கூறினார்.

"வலி நிவாரணி மாத்திரைகள் அதிக நாள்களாக எடுத்து கொள்வதாலும், உடல் பருமன், சர்க்கரை நோய், அடி வயிற்றில் அதிகம் கொழுப்பு சேருவது போன்ற இன்னும் பிற காரணங்காளாலும் ஃபேட்டி லிவர் ஏற்படுகிறது." என்று ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ப்ரீத்தி ராஜ் கூறினார்.

author-image
Martin Jeyaraj
New Update
Fatty liver reduce foods and diet plan Nutrition Dr Preeti Raj Interview Tamil News

"முட்டையின் மஞ்சள் கரு கூட ஃபேட்டி லிவர் ஏற்படுவதை தடுக்கிறது. முட்டையின் மஞ்சள் கருவில் கோலின் எனப்படும் சத்து இருக்கிறது. இது ஈரலில் கொழுப்பு அதிகரிப்பதை தடுக்க உதவுகிறது" என்று ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ப்ரீத்தி ராஜ் கூறினார்.

நமது உடலில் இருக்கும் முக்கிய உறுப்புகளில் ஒன்று கல்லீரல். இதனை ராஜ உறுப்பு என்றும் மருத்துவர்கள் அழைக்கிறார்கள். உடல் சீராக இயங்க உதவுவது முதல் இன்னும் பல வேலைகளை செய்து வருகிறது. 

Advertisment

ஏப்ரல் 19 ஆம் நாள் உலக கல்லீரல் தினமாக அனுசரிக்கப்படும் நிலையில், தற்போது ஈரலில் அதிகப்படியான கொழுப்பு சேருவது குறித்த (ஃபேட்டி லிவர்) பேச்சுக்கள் அதிகரித்துள்ளது. அப்படி ஈரலில் கொழுப்பு சேருவதை அல்லது படிவதை எப்படித் தடுக்கலாம்? என்ன மாதிரியான உணவுகளை நாம் அன்றாட எடுத்துக் கொள்ள வேண்டும்? என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ப்ரீத்தி ராஜிடம் கேட்டோம். அவரும் இன்முகத்தோடு பதில் அளித்தார்.  

அவ்வகையில், ஈரலில் கொழுப்பு சேருவது தொடர்பாக டாக்டர் ப்ரீத்தி ராஜ் நம்முடன் பகிர்ந்து கொண்டதாவது:- 

Advertisment
Advertisements

பொதுவாக கல்லீரல் சிவப்பு நிறத்தில் இருக்கும். அதில் கொழுப்பு சேரும் போது வெள்ளையாகவும் குண்டாகவும் மாறுகிறது. ஈரலை அல்ட்ராசவுண்ட் எடுத்து பார்ப்பதன் மூலம் அதனை கிரேடு 1, கிரேடு 2, கிரேடு 3, கிரேடு 4 என்று பிரிப்பார்கள். அதன் மூலம் ஃபேட்டி லிவர் இருக்கிறதா என்பதைக் கண்டறியலாம். 

ஃபேட்டி லிவர் என்பது மீளக்கூடியது. அதாவது அதன் செயல்படும் தன்மையை மீட்டு எடுக்கலாம். ஆனால், ஈரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து விட்டால், அதன் செயல்படும் தன்மையை மீட்டு எடுப்பது கடினம் ஆகிவிடும். 90-களில் மதுப் பழக்கம் காரணமாக ஃபேட்டி லிவர் வருகிறது என அதிகம் பேசப்பட்டது. இப்போது 10 வயது குழந்தைக்குக் கூட ஃபேட்டி லிவர் பிரச்சனை இருக்கிறது. அதாவது, மதுப் பழக்கம் அல்லாத காரணங்களினால் கூட கல்லீரல் பாதிப்புகள் அதிகமாகி வருகிறது. இதனை ஆங்கிலத்தில் non alcoholic fatty liver syndrome என்று கூறுகிறார்கள். இது குழந்தைகள் முதல் மது அருந்தாதவர்கள் என அனைவருக்கும் வருகிறது. 

இதனை எப்படி தடுக்கலாம் என்றால், அதிக பிரக்டோஸ் கார்ன் சிரப் இருக்கும் உணவுப் பண்டங்களை குழந்தைகளுக்கு கொடுக்கூடாது. குறிப்பாக, அதிக பிரக்டோஸ் கார்ன் சிரப் உள்ள பிஸ்கட், சாக்லேட், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகள், ஐஸ் கிரீம் போன்றவற்றை கொடுக்கக்கூடாது. இப்படி செய்யும் போது, ஃபேட்டி லிவர் பிரச்சனை வருவதனை 50 சதவீதம் தடுக்கலாம். 

ஃபேட்டி லிவர் ஏற்பட மற்றொரு முக்கிய காரணமாக, எடை குறைப்பு செய்யும் போது நாம் எடுக்கும் நடவடிக்கைகள் தான். ரொம்ப சீக்கிரமாக வெயிட் லாஸ் செய்வதில் எந்தப் பெருமையுமே இல்லை என்று சொல்லாம். அதாவது, ஒரே மாதத்தில் நான் 10 கிலோ குறைத்துவிட்டேன் என்று சிலர் பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், ஒரு மாதத்தில் நான்கு, ஐந்து கிலோவுக்கு மேல் வெயிட் லாஸ் பண்ணும் போது ஃபேட்டி லிவர் ஏற்படும் அபாயம் இருக்கிறது. இது நமது ஆயுளையும் குறைத்து விடும். அதனால், கொஞ்சம் மெதுவாக வெயிட் லாஸ் செய்வது நல்லது. 

அடுத்ததாக, மது அருந்துவதாலும் ஃபேட்டி லிவர் ஏற்படுகிறது. இதேபோல், வலி நிவாரணி மாத்திரைகள் அதிக நாள்களாக எடுத்து கொள்வதாலும், உடல் பருமன், சர்க்கரை நோய், அடி வயிற்றில் அதிகம் கொழுப்பு சேருவது போன்ற இன்னும் பிற காரணங்காளாலும் ஃபேட்டி லிவர் ஏற்படுகிறது. 

இதனைத் தடுக்க, காலையில் அதிகம் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். காலை உணவில் குறைந்தது 25 முதல் 30 கிராம் வரையிலான புரதம் இருக்க வேண்டும். ஒரு முட்டியில் 6 கிராம் புரதம் இருக்கிறது. அதனால், இரண்டு முழு முட்டையுடன் ஐந்து, ஆறு முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து சாப்பிடலாம். அல்லது 200 கிராம் சிக்கன் எடுத்துக் கொள்ளலாம். இப்படி ஒவ்வொரு உணவு வேளையின் போதும் சீரான அளவில் புரதச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும். 

பூண்டு, மஞ்சள், சீரகம் போன்றவை கல்லீரல் நொதிகளுக்கு மிகவும் நல்லது. இவை மூன்றையும் சேர்த்து ஒரு கஷாயமாக குடிப்பது ஈரலுக்கு அதிக நன்மை பயக்கும். இதேபோல், சிட்ரஸ் பழங்கள், பெரி பழங்களில் இருக்கும் ஆண்டி ஆக்சைடுகள் ஈரலை பாதுகாக்கிறது. பல நிறங்களில் இருக்கும் காய்கறிகளில் சாப்பிடுவதும் ஈரலுக்கு நல்லது. சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கு வைட்டமின் ஈ நிறைந்த உணவுகள் அதிகம் உதவும். தவிர, 200 கிராமுக்கு கீழே இருக்கும் காஃபின் உணவுப் பொருள்கள் கூட ஈரலை பாதுகாக்க உதவும் என ஆய்வுகள் கூறுகிறது. 

நிறைவுற்ற கொழுப்பு இருக்கும் உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். உதாரணமாக, ரெட் மீட் என அழைக்கப்படும் மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்றவற்றை சாப்பிடக்கூடாது. இவற்றுக்குப் பதிலாக, ஒமேகா 3 நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். மீனில் ஒமேகா 3 அதிகம் காணப்படுகிறது. 

மீன் சாப்பிடாதவர்கள் கருஞ்சீரகம், வால்நட்ஸ் போன்றவைகளை எடுத்துக் கொள்ளலாம். எண்ணெயைப் பொறுத்தவரை, மறுபடியும் சூடு செய்யப்படாத எண்ணெயில் தயார் செய்யப்படும் உணவுகளை சாப்பிடலாம். அதனால், கடைகளில் பஜ்ஜி, போண்டா, வறுத்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

தினமும் 400 கிராம் காய்கறிகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இதேபோல்,வெள்ளை நிறத்தில் இல்லாத தானியங்கள், அதாவது நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். முட்டையின் மஞ்சள் கரு கூட ஃபேட்டி லிவர் ஏற்படுவதை தடுக்கிறது. முட்டையின் மஞ்சள் கருவில் கோலின் எனப்படும் சத்து இருக்கிறது. இது ஈரலில் கொழுப்பு அதிகரிப்பதை தடுக்க உதவுகிறது. 

இதேபோல், வெர்ஜின் தேங்காய் எண்ணெய் சராசரியான அளவில் எடுக்கும் போது, அது ஃபேட்டி லிவர் ஏற்படுவதை தடுக்கிறது. வெர்ஜின் தேங்காய் எண்ணெயை ஒருநாளைக்கு ஒன்று முதல் மூன்று ஸ்பூன் நாம் எடுத்துக் கொள்ளலாம். கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளை எடுப்பதை குறைக்க வேண்டும். மொத்தத்தில், நாம் சரியான உணவுகள் மற்றும் டயட் பிளானை தொடர்ந்து  வந்தால் ஃபேட்டி லிவர் பிரச்சனையில் இருந்து எளிதில் மீண்டு வரலாம்.

இவ்வாறு ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ப்ரீத்தி ராஜ் கூறினார். 

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: