/indian-express-tamil/media/media_files/2025/10/14/moringa-leaves-2025-10-14-15-47-18.jpg)
முருங்கைக் கீரை நம் வீட்டுக்குப் பக்கத்தில் எளிதில் கிடைக்கக்கூடிய, ஆனால் எண்ணற்ற சத்துக்களை தன்னகத்தே கொண்ட ஓர் அற்புதமான மூலிகை. இது வெறும் கீரை அல்ல, சத்துக்களின் சுரங்கம். முருங்கைக் கீரையில் இரும்புச் சத்து, வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், பல ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். இதன் நார்ச்சத்து செரிமான மண்டலத்தின் இயக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலை நிரந்தரமாகப் போக்க உதவுகிறது.
கால்சியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளதால், எலும்புகளுக்கு வலு சேர்க்கும். இதில் உள்ள இரும்புச்சத்து இரத்த சோகையைத் தடுக்கவும், இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. வைட்டமின் ஏ, சி, இ போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை பலப்படுத்துகிறது. சத்தான இந்த கீரையை சாதாரணமாக சமைப்பதை விட, சுவை மிகுந்த சட்னி அல்லது துவையலாகச் செய்து சாப்பிட்டால், கீரையை விரும்பாதவர்கள் கூட விரும்பிச் சாப்பிடுவார்கள். இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்ற இந்த முருங்கைக் கீரை துவையலை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை 2 கப்
உளுத்தம் பருப்பு 1/4 கப்
வேர்க்கடலை 1 கைப்பிடி
தனியா 1 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
மிளகாய் (வரமிளகாய்) 6
உப்பு
புளி
சின்ன வெங்காயம் 6
எண்ணெய்
செய்முறை:
முருங்கைக்கீரையை ஆய்ந்து, சுத்தம் செய்து, தண்ணீரில் நன்கு அலசி எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, தனியா, சீரகம் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை நன்கு வறுத்தெடுக்கவும். வறுத்ததை ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு, மிளகாய் மற்றும் புளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு, தோல் உரித்த சின்ன வெங்காயத்தையும் சேர்த்து, அது லேசாக வதங்கி நிறம் மாறும் வரை வதக்கி எடுக்கவும். இறுதியாக, அதே வாணலியில் சுத்தம் செய்த முருங்கைக் கீரையைப் போட்டு நன்கு வதக்கவும். இரண்டு நிமிடங்களில் கீரை நன்கு சுருங்கி வதங்கியதும் அடுப்பை அணைத்து ஆறவிடவும். மிக்ஸி ஜாரில் முதலில் வறுத்த உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, தனியா, சீரகம், மிளகாய், புளி ஆகியவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் விடாமல் நன்கு பொடிக்கவும்.
பிறகு, வதக்கிய முருங்கைக்கீரை மற்றும் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து அரைக்கவும். தண்ணீர் அதிகம் சேர்க்கத் தேவையில்லை. சட்னி அல்லது துவையலை விழுதாக அரைக்காமல், சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். கெட்டியாக இருந்தால் தான் சாதத்தில் பிசைந்து சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும். அவ்வளவுதான்,மிகவும் சத்தான மற்றும் ருசியான முருங்கைக் கீரை துவையல் தயார்.
சூடாக வடித்த சாதத்தில் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு, இந்த முருங்கைக் கீரை துவையலை சேர்த்து பிசைந்து சாப்பிட... அதன் சுவையே தனி தான்! அத்துடன் தயிர் பச்சடி அல்லது பொரித்த அப்பளத்தை சேர்த்துக்கொண்டால், அருமையான மதிய உணவு தயார். கீரையின் சத்துக்கள் நிறைந்துள்ள இந்தத் துவையலை வாரம் இருமுறை சாப்பிட்டு வர, மலச்சிக்கல் நீங்குவதுடன், உடலும் ஆரோக்கியம் பெறும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us