/indian-express-tamil/media/media_files/2025/02/06/Va00cpJwUQDkJkSYKEbt.jpg)
இட்லி, தோசை, பூரி, சப்பாத்திக்கு என்ன செய்வது என்று தினமும் குழம்ப வேண்டாம். கும்பகோணத்தின் தனிச்சிறப்புமிக்க, தேங்காய் மற்றும் பாசிப் பருப்பு கலந்த கமகமக்கும் கடப்பா குழம்பு, சாம்பாருக்கு மாற்றாக ஒரு புதிய சுவையைத் தரும். இந்த ரெசிபியின் தனித்துவமே, இதற்கு உருளைக்கிழங்கும் பாசிப்பருப்புமே போதும் என்பதுதான். வெறும் குக்கரில் 4 விசில் சத்தம் கேட்டால் போதும், காலை உணவுக்கான சைடிஷ் சட்டுன்னு ரெடியாகிவிடும். இதனை எப்படி செய்வது என்று அற்புதாஸ் கிச்சன் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு (மசூர் பருப்பு) கால் கப்
உருளைக்கிழங்கு 2 நடுத்தர அளவு
மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
தண்ணீர் 2 கப்
துருவிய தேங்காய் அரை கப்
பச்சை மிளகாய் 3 - 4
சோம்பு (சீரகம்) அரை டீஸ்பூன்
பூண்டுப் பல் 2 - 3
பொட்டுக்கடலை 1 டீஸ்பூன் (கெட்டித்தன்மைக்கு)
சமையல் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
பட்டை சிறிய துண்டு (1 இன்ச்)
கிராம்பு 2
பிரியாணி இலை (பிரிஞ்சி இலை) 1
வெங்காயம் 1 நடுத்தர அளவு (நீளமாக நறுக்கியது)
கறிவேப்பிலை சிறிதளவு
தக்காளி 1 நடுத்தர அளவு (பொடியாக நறுக்கியது)
உப்பு
கொத்தமல்லித் தழை
செய்முறை:
முதலில் பாசிப்பருப்பை நன்றாகக் கழுவவும். உருளைக்கிழங்கைத் தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கி குக்கரில் போடவும். கழுவிய பாசிப்பருப்பு, நறுக்கிய உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைக்கவும். சரியாக 4 விசில் வரும் வரை வேகவைத்து அடுப்பை அணைக்கவும். ஆவி அடங்கியதும் குக்கரைத் திறக்கவும். வெந்த உருளைக்கிழங்கை வெளியே எடுத்து, தோராயமாக கையால் மசித்து வைக்கவும். பருப்பை கரண்டியால் லேசாக மசித்து தனியே வைக்கவும்.
தேங்காய், பச்சை மிளகாய், சோம்பு, பூண்டு, பொட்டுக்கடலை மிக்ஸி ஜாரில் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி மிருதுவாக அரைத்து விழுது போல எடுத்து வைக்கவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். நீளமாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, நிறம் மாறாமல், கண்ணாடி பதம் வரும் வரை லேசாக வதக்கவும். நறுக்கிய தக்காளியையும், தேவையான உப்பையும் சேர்த்து, தக்காளி குழையும் வரை நன்றாக வதக்கவும்.
இப்போது, மசித்து வைத்துள்ள வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் பாசிப்பருப்பை கடாயில் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் (குழம்பின் பக்குவத்திற்கேற்ப) சேர்த்து, ஒரு கொதி வர விடவும். கடைசியாக, அரைத்து வைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, குழம்பை நன்றாகக் கலக்கவும். தேங்காய் விழுது சேர்த்த பிறகு, குழம்பு கொதிக்க விடக் கூடாது. விளிம்புகளில் ஆவி வருவது போல சிறு குமிழிகள் வந்தவுடன், அடுப்பை அணைத்து விடவும். (அதிகம் கொதித்தால் தேங்காய் திரிந்துவிடும்). நறுக்கிய கொத்தமல்லித் தழையை மேலே தூவி மூடவும். கமகமக்கும் கும்பகோணம் கடப்பா சட்டுன்னு ரெடி. சூடான இட்லி, தோசை, பூரியுடன் இதைச் சேர்த்து பரிமாறினால், கணக்கில்லாமல் சாப்பிடுவது உறுதி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us