/indian-express-tamil/media/media_files/2025/01/23/RBASN7fDQdIaZ0AyIINC.jpg)
முறுக்கு என்றாலே தமிழர்களுக்கு ஒரு தனி பிரியம் உண்டு. குறிப்பாக, மொறுமொறுவென கடித்துச் சாப்பிடத் தூண்டும் அரிசி முறுக்கு பல பண்டிகைகளிலும், கொண்டாட்டங்களிலும் தவறாமல் இடம்பிடிக்கும் ஒரு பலகாரம். இதை வீட்டிலேயே செய்வது மிகவும் எளிது. தேவையான பொருட்களைத் தெரிந்து கொண்டு, சில குறிப்புகளைப் பின்பற்றினால், கடை முறுக்கை விட சுவையான முறுக்கை நீங்களும் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு
பொட்டுக் கடலை மாவு
உளுத்தம் மாவு
வெண்ணெய்
எள்
சீரகம்
பெருங்காயத்தூள்
உப்பு
தண்ணீர்
எண்ணெய்
செய்முறை:
அரிசி முறுக்கு சுவையாக வர, மாவு தயாரிப்பில் கவனம் தேவை.அகலமான பாத்திரம் ஒன்றில் அரிசி மாவு, பொட்டுக் கடலை மாவு, உளுத்தம் மாவு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். மாவு கட்டிகள் இல்லாமல் இருக்க, ஒருமுறை சலித்துக் கொள்வது நல்லது.இதனுடன், அறை வெப்பநிலையில் உள்ள வெண்ணெய், எள், சீரகம் (அ) ஓமம், பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். வெண்ணெய் மாவின் எல்லா பகுதியிலும் பரவி இருக்க வேண்டும்.
சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து, மாவை மென்மையாகப் பிசையவும். சப்பாத்தி மாவை விட இன்னும் சற்று மென்மையாக இருக்க வேண்டும். மாவு மிகவும் கெட்டியாகவோ, மிகவும் தளர்வாகவோ இருக்கக் கூடாது. மாவு வெடிப்பு இல்லாமல், மிருதுவாக இருந்தால் முறுக்கு எண்ணெயைக் குடிக்காது.பிசைந்த மாவை, ஒரு ஈரத் துணியால் மூடி, 10 நிமிடங்கள் தனியாக வைக்கவும்.
இப்போது முறுக்கைப் பொரிக்கத் தயாராகலாம்.ஒரு கடாயில் பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் சூடாக்கவும்.முறுக்கு பிழியும் அச்சில் (தேன்குழல் அச்சு பொருத்தப்பட்டது) பிசைந்த மாவில் ஒரு பகுதியை நிரப்பவும்.சிறு வட்ட வடிவங்கள் கொண்ட பிளாஸ்டிக் ஷீட், பட்டர் பேப்பர், அல்லது எண்ணெய் தடவிய தட்டு ஒன்றின் மீது முறுக்கை வட்டமாகப் பிழியவும்.
அல்லது, நன்கு சூடான எண்ணெயில் நேரடியாகவும் முறுக்கைப் பிழியலாம் (பழகியவர்கள் மட்டும் இதைச் செய்யவும்).பிழிந்த முறுக்குகளை மெதுவாக எடுத்து, மிதமான சூட்டில் உள்ள எண்ணெயில் போடவும். ஒரே நேரத்தில் அதிக முறுக்குகளைப் போட வேண்டாம்.முறுக்கு ஒரு பக்கம் வெந்ததும், மெதுவாகத் திருப்பி விடவும். இரு பக்கமும் பொன்னிறமாக மாறி, சலசலப்பு (எண்ணெயில் வரும் குமிழிகள்) அடங்கும் வரை பொரிக்கவும்.முறுக்கு மொறுமொறுப்பாக வெந்ததும், அதை எடுத்து டிஷ்யூ பேப்பர் மீது வைக்கவும். இது அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சிவிடும்.முறுக்கு முழுவதுமாக ஆறிய பின், காற்று புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.