/indian-express-tamil/media/media_files/2025/05/28/Uw9L6IRCjKVhu3nOb9ew.jpg)
அடம்பிடித்து சாப்பிட மறுக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்தி, ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிட வைப்பது என்பது பெற்றோர்களுக்கு ஒரு பெரிய சவால்தான். அதிலும் குறிப்பாக, நீர்ச்சத்து நிரம்பிய, பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட சுரைக்காயை குழந்தைகளுக்கு ஊட்டுவது இன்னும் கடினம். ஆனால் கவலையை விடுங்கள் சோர்வாக இருக்கும்போதும், கோடைக்காலத்திலும் உடலுக்குக் குளிர்ச்சி தரும் இந்தச் சுரைக்காயை, குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் சுவையான பிரியாணி வடிவில் செய்து கொடுத்துப் பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 1 கப்
சுரைக்காய் - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி-பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
புதினா இலைகள்
கொத்தமல்லி இலைகள்
நெய் அல்லது எண்ணெய்
உப்பு
தண்ணீர்
பிரியாணி மசாலா அல்லது மிளகாய்த் தூள்
மல்லித்தூள்
மஞ்சள் தூள்
தயிர்
சீரகம்
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
பிரிஞ்சி இலை
சோம்பு
செய்முறை:
பாஸ்மதி அரிசியைக் கழுவி, 20 முதல் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடிகட்டித் தனியாக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் (அல்லது குக்கரில்), நெய் அல்லது எண்ணெயைச் சூடாக்கி, தாளிப்பதற்கு எடுத்து வைத்துள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை மற்றும் சோம்பு சேர்த்துப் பொரிய விடவும். பிறகு, நீளமாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவும்.
இஞ்சி-பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து, பச்சை வாடை போகும் வரை வதக்கவும். நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, அது நன்றாகக் குழைந்து வரும் வரை வதக்கவும். பின்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள்/பிரியாணி மசாலா, மல்லித்தூள், சீரகம் மற்றும் உப்பு சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கவும். நறுக்கிய சுரைக்காய்த் துண்டுகள் மற்றும் தயிர் சேர்த்து, மசாலா சுரைக்காயில் சேரும்படி ஒரு நிமிடம் கிளறவும்.
புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளில் பாதியைச் சேர்த்து (மீதியைத் தனம் போடும்போது பயன்படுத்த), கிளறவும். தேவையான அளவு தண்ணீர் (1.5 முதல் 2 கப்) சேர்த்து, உப்பு சரிபார்த்து, தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், ஊற வைத்த அரிசியைச் சேர்க்கவும். குக்கரை மூடி, மிதமான தீயில் ஒரே ஒரு விசில் வரும் வரை சமைக்கவும். விசில் வந்தவுடன், தீயை அணைத்து, குக்கரின் ஆவி அடங்கும் வரை காத்திருக்கவும்.
நீங்கள் பாத்திரத்தில் செய்தால், கொதித்த பிறகு அரிசியைச் சேர்த்து, தீயைக் குறைத்து, பாத்திரத்தின் மேல் கனமான மூடியை வைத்து, 15 முதல் 20 நிமிடங்கள் வரை தம் போடவும். ஆவி அடங்கிய பின், மூடியைத் திறந்து, மீதமுள்ள புதினா, கொத்தமல்லி இலைகளைத் தூவி, அரிசி உடையாமல் மெதுவாகக் கிளறி விடவும். இப்போது, சத்து நிறைந்த, சுவையான சுரைக்காய் பிரியாணி தயார். இதனைச் சூடாக தயிர் பச்சடி அல்லது கத்திரிக்காய் கிரேவியுடன் சேர்த்து உங்கள் குழந்தைகளுக்குப் பரிமாறவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us