/indian-express-tamil/media/media_files/2025/07/11/ladies-finger-poriyal-2025-07-11-14-27-43.jpg)
சாதம், ரசம், சாம்பார் என எல்லாவற்றுக்கும் பொருத்தமான ஒரு சைட் டிஷ் என்றால் அது வெண்டைக்காய் பொரியல் தான். ஆனால், எப்போதும் ஒரே மாதிரி இல்லாமல், இந்த முறை ஹைதராபாத் கல்யாண வீடுகளில் பரிமாறப்படும் பிரத்யேக மொறுமொறுப்பான வெண்டைக்காய் ஃப்ரை ஸ்டைலில் செய்து பாருங்கள். வெண்டைக்காயை மாவில் பிரட்டி பொரித்து, வறுத்த நிலக்கடலை மற்றும் மசாலாக்களுடன் இணைத்து செய்யும் இந்த வெண்டைக்காய் பொரியல், அதன் மொறுமொறுப்புடன் வெங்காயத்தின் இனிப்புச் சுவையும் சேரும்போது அலாதியான சுவையைக் கொடுக்கும். ஒருமுறை இதைச் சுவைத்தால், எப்போதும் இந்த முறையிலேயே செய்யச் சொல்லி வீட்டில் கேட்பார்கள். இந்த எளிமையான டிப்ஸ்களுடன் கல்யாண வீட்டு ஸ்டைல் வெண்டைக்காய் பொரியலை எப்படிச் செய்வது என்று ஸ்பைசி சமையல் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய்
கடலை மாவு
அரிசி மாவு
மஞ்சள் தூள்
உப்பு
வேர்கடலை
கறிவேப்பிலை
எண்ணெய்
கடுகு
உளுத்தம்பருப்பு
கடலைப்பருப்பு
வெங்காயம்
மிளகாய்த் தூள்
சீரகத் தூள்
செய்முறை:
சிறு துண்டுகளாக நறுக்கிய வெண்டைக்காயை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிரட்டி விடுங்கள். மாவு வெண்டைக்காயுடன் ஒட்டிக்கொள்ளும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மாவு கலந்த வெண்டைக்காயைச் சேர்த்து, மிதமான தீயில் மொறுமொறுப்பாகும் வரை பொரித்து தனியே எடுத்து வையுங்கள். அதே எண்ணெயில், வேர்கடலையைச் சேர்த்து பொரித்து வெண்டைக்காயுடன் சேருங்கள். இறுதியாக, ஒரு கைப்பிடி கறிவேப்பிலையைச் சேர்த்து பொரித்து அதையும் தனியே எடுத்துக்கொள்ளுங்கள்.
அதே கடாயில் மீதமுள்ள எண்ணெயில், கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பருப்புகள் சிவந்ததும், நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்த பிறகு, மிளகாய்த் தூள், சீரகத் தூள் மற்றும் மீதமுள்ள உப்பு சேர்த்து, மசாலா வாசனை போகும் வரை சில நொடிகள் வதக்குங்கள். இப்போது, பொரித்து வைத்துள்ள வெண்டைக்காய், வேர்கடலை மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்து, மசாலா அனைத்து வெண்டைக்காயிலும் ஒட்டும் வண்ணம் மெதுவாகக் கலக்கவும். மொறுமொறுப்பான, கல்யாண வீட்டு ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் தயார், இதனை சூடான சாதத்துடன் சேர்த்துப் பரிமாறலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.