/indian-express-tamil/media/media_files/NT2vezO22B6dHyXCmX20.jpg)
அனைவராலும் விரும்பப்படும் ஒரு காலை உணவு அல்லது சிற்றுண்டி பூரிதான். ஆனால், பூரி சுடும்போது அது அதிகப்படியான எண்ணெயைக் குடித்து விடுவதால், ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு பலர் அதைத் தவிர்ப்பதுண்டு. இனி, அந்தக் கவலைக்கு விடை கிடைத்தது. சமையல் நிபுணர்கள் பரிந்துரைக்கும் ஒரு எளிய ரகசியத்தைப் பயன்படுத்தி, உங்கள் பூரிகளை சற்றும் எண்ணெய் ஒட்டாமல், பஞ்சு போல புசுபுசுவென உப்ப வைக்கும் செய்முறை பற்றி நளினிமானிக் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதை பற்றி பார்ப்போம். மாவு பிசையும் இந்த தனித்துவமான முறை, பூரி எண்ணெய் குடிப்பதைத் தடுப்பதுடன், ஒரே நேரத்தில் நிறைய பூரிகளைத் தயாரிக்க ஒரு சிம்பிள் டிப்ஸும் இதில் உள்ளது.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
தண்ணீர் - அரை கப்
ரவை- 1 ஸ்பூன்
உப்பு
சமையல் எண்ணெய்
செய்முறை:
இந்தச் செய்முறையின் முக்கிய அம்சம், மாவை சாதாரண நீருக்குப் பதிலாக சூடான கலவையில் பிசைவதுதான். இது பூரியில் எண்ணெய் சேர்வதைத் தடுக்கிறது. முதலில் ஒரு பௌலில் அரை கப் தண்ணீர் ஊற்றி, அதில் பூரிக்குத் தேவையான உப்பு, ஒரு ஸ்பூன் ரவை மற்றும் கொஞ்சமாக சமையல் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்தக் கலவையை அடுப்பில் வைத்து சூடேற்றவும். தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்து, குமிழ்கள் வரத் தொடங்கியவுடன், அடுப்பிலிருந்து இறக்கி, அதில் ஒரு கப் கோதுமை மாவைச் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். கலந்த மாவை ஒரு தட்டுப் போட்டு மூடி வைத்து நன்கு ஆற விடவும். ஆறிய பிறகு, மாவை பூரி மாவு பதத்திற்கு (சப்பாத்தி மாவை விட சற்று கெட்டியாக) பிசையவும். தேவைப்பட்டால், லேசாக தண்ணீர் தெளித்து பிசையலாம். ரவையை சூடான நீரில் சேர்ப்பதால், பூரி உப்பி வருவதுடன், எண்ணெய் ஒட்டாமல் இருக்கும்.
பிசைந்த மாவை பெரிய உருண்டைகளாகப் பிரித்து, அதை நல்ல பெரிய சப்பாத்தி போல வட்டமாகத் தேய்க்கவும். நேரம் மிச்சப்படுத்த, வட்டமான பூரிகளுக்குப் பதிலாக, கத்தியைப் பயன்படுத்தி வட்டத்தை கிராஸ் ஆக வெட்டி, முக்கோண வடிவப் பூரிகளாகத் தயாரித்துக் கொள்ளலாம். இந்த முறையில் ஒரே நேரத்தில் பல பூரிகளைத் தேய்த்து விடலாம். பிறகு, இந்த முக்கோண பூரிகளை சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால், சற்றும் எண்ணெய் குடிக்காத, சுவையான, புசுபுசுவென்ற பூரிகள் தயாராகிவிடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us