/indian-express-tamil/media/media_files/2025/10/08/pori-dosa-2025-10-08-18-00-16.jpg)
பொதுவாக நாம் அரிசியையும், உளுந்தையும் பயன்படுத்தி தோசை மாவு தயாரிப்போம். ஆனால், வீட்டில் மிஞ்சிப்போகும் பொரியைக் கொண்டு, ஒரு துளி எண்ணெய் கூட சேர்க்காமல், பஞ்சு போல மிருதுவான தோசையை சுடலாம் என்று தெரியுமா? இந்த ஆயுதபூஜைக்கு மீதமான பொரியை வைத்து மிகவும் சாஃப்டாகவும், சுவையாகவும் தோசை சுடலாம். ஆரோக்கியமான மற்றும் சுலபமான இந்த ‘பொரி தோசை’ ரெசிபியை எப்படி செய்வது என்று மாலினி கிச்சன் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி : 1.5 கப்
வெந்தயம்: 1 டேபிள் ஸ்பூன்
பொரி : 3 கப்
உப்பு
செய்முறை:
முதலில், 1.5 கப் பச்சரிசியை நன்றாகக் கழுவி சுத்தம் செய்த பிறகு, அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தைச் சேர்த்து, சுமார் 4 முதல் 5 மணி நேரம் வரை ஊற வைக்கவும். அதே சமயம், 3 கப் பொரியை எடுத்து, அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, சுமார் 5 நிமிடங்களுக்கு மட்டும் ஊற வைக்கவும். ஊறிய அரிசி மற்றும் வெந்தயத்தை எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து முதலில் அரைக்கவும்.
பிறகு, ஊறிய பொரியில் உள்ள நீரை நன்றாகப் பிழிந்து எடுத்துவிட்டு, அதையும் அரைக்கும் மாவுடன் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு மிகவும் நைசாக அரைத்தெடுக்கவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, மிக்ஸி ஜாரை அலசிய நீருடன் ஒரு டீஸ்பூன் உப்பையும் சேர்த்து, மாவை நன்றாகக் கலக்கவும். மாவை மூடி வைத்து, சுமார் 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். மாவு புளித்து வந்த பிறகு, அதை மெதுவாக ஒருமுறை கலந்து விடவும். கூடுதலாகத் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
தோசைக் கல்லை நன்றாக சூடுபடுத்தி, அதில் 1.5 கரண்டி மாவை ஊற்றி, மிகவும் மெல்லியதாகவும் இல்லாமல், தடிமனாகவும் இல்லாமல் தோசையாகப் பரப்பவும். தோசையின் மேல் பகுதியில் சிறு சிறு ஓட்டைகள் வந்த பிறகு, ஒரு மூடியால் மூடி, 2 முதல் 3 விநாடிகள் வேக விடவும். எண்ணெய் சேர்க்காமலேயே, மல்லிகைப்பூ போல சாஃப்ட்டான பொரி தோசை சூப்பராகத் தயாராகிவிட்டது. சட்னி அல்லது சாம்பாருடன் சேர்த்து இதனை சாப்பிட சுவையாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us