/indian-express-tamil/media/media_files/2025/06/07/cdVVMFC9Ncd2iYPElHxU.jpg)
மென்மையான, பஞ்சு போன்ற இட்லிகள் என்பது நம்மில் பலரின் விருப்பம். ஆனால், கடைகளில் கிடைப்பது போன்ற பந்து போல மிருதுவான இட்லியை வீட்டிலேயே செய்வது ஒரு சவால். இட்லி மாவில் அரிசி மற்றும் உளுந்தின் விகிதம் மிக முக்கியமானது. சரியான அளவில் உளுந்து சேர்ப்பதும், அதை நன்கு நுரைக்க அரைப்பதும் தான் இட்லியைப் பஞ்சு போல் மாற்றும் இரகசியம் ஆகும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள அளவுகள் மற்றும் செய்முறையைப் பின்பற்றி இட்லி மாவை அரைக்கும்போது, உங்கள் இட்லிகள் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும். இதனை எப்படி செய்வது என்று ஜென்னி குக்ஸ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி (குண்டு அரிசி) - 8 கப்
முழு வெள்ளை உளுந்து - 2 கப்
வெந்தயம் -1 முதல் 1.5 டீஸ்பூன்
கல் உப்பு
குளிர்ந்த நீர்
செய்முறை:
அரிசி, உளுந்து மற்றும் வெந்தயம் ஆகியவற்றை தனித்தனியாகக் குறைந்தபட்சம் 3 முதல் 4 முறை நன்கு கழுவி, சுத்தப்படுத்தவும். பின் இரண்டையும் குறைந்தது 4 முதல் 5 மணி நேரம் வரை குளிர்ந்த நீரில் ஊற வைக்கவும். உளுந்து நன்கு ஊறுவது, அது கிரைண்டரில் அரைபடும்போது நுரைத்து எழுந்து, அதிக மாவு கிடைக்க உதவும். முதலில் உளுந்து மற்றும் வெந்தயத்தை கிரைண்டர் அல்லது மிக்ஸியில் சேர்க்கவும். கிரைண்டர் சூடாகாமல் இருக்க ஐஸ் வாட்டர் அல்லது மிகக் குளிர்ந்த நீரை சிறிது சிறிதாகச் சேர்த்து, மாவு நன்கு நுரைத்து, பஞ்சு போல மாறும் வரை அரைக்கவும். மாவு எவ்வளவு லேசாக இருக்கிறதோ, அவ்வளவு சாஃப்டாக இட்லி வரும்.
அடுத்து, ஊறிய அரிசியைச் சேர்த்து, சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்து, ரவை பதத்தை விடச் சற்றே மென்மையாக அரைத்து எடுக்கவும். அரைத்த உளுந்து மாவு மற்றும் அரிசி மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து, தேவையான அளவு கல் உப்பு சேர்த்து, உங்கள் கைகளால் சுமார் 5 நிமிடங்கள் நன்கு கலக்கவும். கைகளால் கலக்கும்போது மாவில் உள்ள நுரை குறையாமல் பார்த்துக்கொள்ளவும்.
பாத்திரத்தை மூடி, மாவை 8 முதல் 10 மணி நேரம் வரை (குளிர்காலத்தில் 12 மணி நேரம் வரை) சூடான இடத்தில் புளிக்க விடவும். மாவு நன்கு பொங்கி, இரட்டிப்பாகி இருந்தால், சரியான பதத்தில் உள்ளது என்று அர்த்தம். புளித்த மாவை இட்லி தட்டுகளில் ஊற்றி, 10 முதல் 12 நிமிடங்களுக்கு நீராவியில் வேக வைத்து எடுத்தால், பஞ்சு போன்ற சூப்பர் சாஃப்ட் இட்லி தயார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us