/indian-express-tamil/media/media_files/2025/07/27/potato-fry-2025-07-27-16-35-27.jpg)
ரசம் சாதம் மற்றும் தயிர் சாதத்திற்கு உருளைக்கிழங்கு வறுவல் ஒரு செமையான காம்பினேஷன் ஆகும். இந்த வறுவல் சாம்பார் சாதம், காரக்குழம்பு போன்ற அனைத்துக்கும் அட்டகாசமான சுவையைத் தரும். எல்லோரும் ஒவ்வொரு விதமாக உருளைக்கிழங்கு மசாலா செய்வார்கள். ஆனால் இந்த மசாலா சேர்த்து செய்தால் இதன் சுவையை நிச்சயம் யாராலும் மறக்க முடியாது. இதை செய்வது மிகவும் எளிது, ஆனால் சுவை அபாரமாக இருக்கும். இதனை எப்படி செய்வது என்று வில்லேஜ் டைரி இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு
சீரகம்
சோம்பு
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
மல்லித் தூள்
உப்பு
கறிவேப்பிலை
எண்ணெய்
இஞ்சி பூண்டு விழுது
ரகசிய மசாலா: இந்த வறுவலுக்கு பிரத்யேக சுவை தருவது, வறுத்து அரைத்த சீரகம் மற்றும் சோம்பு பொடிதான். ஒரு வாணலியில் சீரகம் மற்றும் சோம்பு இரண்டையும் எண்ணெய் இல்லாமல் தனித்தனியாக மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுக்கவும். நிறம் மாறக்கூடாது. வறுத்த இந்த இரண்டையும் மிக்சியில் போட்டு, நைஸாக பொடி செய்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்பொடி தான் வறுவலுக்கு ஒரு தனி மணத்தையும், சுவையையும் தருகிறது.
செய்முறை:
உருளைக்கிழங்கை தோல் நீக்கி, சிறு சிறு சதுர துண்டுகளாக (அரை அங்குல அளவில்) வெட்டவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, உருளைக்கிழங்கை 5 முதல் 7 நிமிடங்கள் வரை பாதி வேகும் வரை வேகவைத்து தண்ணீரை வடித்துவிடவும். இதனால் வறுவல் விரைவில் தயாராகும். ஒரு அகலமான கடாயில் (பான்) எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும், நறுக்கிய உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து, மிதமான தீயில் பொன்னிறமாக வரும்வரை வறுக்கவும். உருளைக்கிழங்கு துண்டுகள் எல்லா பக்கமும் நன்கு வறுபட வேண்டும். இப்போது, அடுப்பை குறைத்துவிட்டு, ரகசிய மசாலாப் பொடியான சீரகம் - சோம்புப் பொடி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்ப்பதாக இருந்தால், இப்போது சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும்.
மசாலா உருளைக்கிழங்கு துண்டுகளில் ஒட்டுமாறு 2-3 நிமிடங்கள் மெதுவாக கிளறவும். மசாலா கருகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கடைசியாக, ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து ஒருமுறை நன்கு கிளறி அடுப்பை அணைக்கவும். இப்போது உங்கள் சுவையான, மணமணக்கும் உருளைக்கிழங்கு வறுவல் தயார். இதை ரசம் சாதம் அல்லது தயிர் சாதத்துடன் பரிமாறி அசத்தலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.