/indian-express-tamil/media/media_files/2025/08/02/karuvadu-moxhai-2025-08-02-19-24-14.jpg)
மீன் குழம்பு என்றாலே நாவில் எச்சில் ஊறும். அதிலும் குறிப்பாக, பாரம்பரிய முறைப்படி, அதாவது பாட்டியின் கைபக்குவத்தில் செய்யும் கருவாட்டு குழம்பின் சுவைக்கு ஈடு இணையே இல்லை. அந்த வகையில், செஃப் சாய் அவர்கள் 'டாப் குக் பெசன்ட் ரவி'யின் நெத்திலி கருவாட்டு குழம்பு ரெசிபியை நமக்காக எளிமையாக செய்து காட்டியுள்ளார்.
இதை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட ஏற்ற, மணம் நிறைந்த சுவையான கருவாட்டு குழம்பை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து அசத்த, இதனை பின்பற்றுங்கள்.இந்த ரெசிபியில் பயன்படுத்தும் நெத்திலி கருவாடு குழம்பிற்கு ஒரு தனி சுவையை கொடுக்கும். இதனை எப்படி செய்வது என்று மீடியாமாசன்ஸ்கிச்சன் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
நெத்திலி கருவாடு 100 கிராம்
நல்லெண்ணெய்
சின்ன வெங்காயம் 4-5
தக்காளி 1
பூண்டுப் பற்கள் 8-10
பச்சை மிளகாய் 2
முருங்கைக்காய் 1
புளி
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
தனியா தூள் 1.5 டீஸ்பூன்
கடுகு, வெந்தயம், உளுந்து, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை
உப்பு
செய்முறை:
நெத்திலி கருவாட்டை (உப்பு இல்லாத கருவாடு சிறந்தது) லேசான சூடுள்ள தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து, தலை மற்றும் வால் பகுதிகளை நீக்கி, உள்ளே இருக்கும் கழிவுகளை சுத்தம் செய்யவும். பின்னர், மீண்டும் ஒருமுறை சூடான தண்ணீரில் நன்கு அலசி தனியே வைக்கவும். இது கருவாட்டை சுத்தப்படுத்தவும், அதிக உப்பை நீக்கவும் உதவும்.
ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிக்க வைத்துள்ள கடுகு, வெந்தயம், உளுந்து, சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொரிய விடவும். பின்னர், பூண்டுப் பற்களை சேர்த்து நன்கு வதக்கவும். பூண்டு சிவந்ததும், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியைச் சேர்த்து நன்கு சுருள வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து (கருவாட்டில் உப்பு இருப்பதால் உப்பை கவனமாக சேர்க்கவும்) பச்சை வாசனை போக வதக்கவும். உங்களுக்கு குழம்பு போல தேவைப்பட்டால் அதிக தண்ணீர் சேர்க்கவும், தொக்கு போல தேவைப்பட்டால் குறைவான தண்ணீர் சேர்க்கவும்.
குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன், கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரை ஊற்றி, கூடவே முருங்கைக்காயையும் (சேர்ப்பதாக இருந்தால்) சேர்க்கவும். குழம்பு நன்றாக கொதித்து வரும்போது, அடுப்பை மிதமான அல்லது 'சின்ன ஃபிளேம்'க்கு மாற்றவும். சுத்தம் செய்து வைத்திருக்கும் நெத்திலி கருவாட்டை சேர்த்து, மிதமான சூட்டில் குக் செய்யவும். முக்கியமான குறிப்பு: குழம்பை மிக அதிகமாக கொதிக்க விடக்கூடாது. அப்படி செய்தால் நெத்திலி கருவாடு குழம்பில் கரைந்து காணாமல் போய்விடும். சுவையான பாட்டி கைப் பக்குவத்தில் செய்த கருவாட்டு குழம்பு தயார். இதனை சூடான சாதத்துடன் சேர்த்துப் பரிமாறினால், அதன் அசாத்திய சுவையை அனைவரும் உச்சு கொட்டி ரசிப்பார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.