தென்னிந்திய உணவு வகையில் அதிகம் விரும்பப்படும் உணவாக இட்லி இருக்கிறது. பஞ்சு போன்ற இட்லிகளுடன் சாம்பார், சட்னிகளை சேர்த்து சுவைத்தால் அற்புதமாக இருக்கும். ஒருவேளை, சாம்பார், சட்னிகளை தயார் செய்ய உங்களுக்கு நேரம் இல்லை என்றால், இட்லி மிளகாய் பொடியை தயார் செய்து வைத்துக் கொண்டு, அவற்றுடன் சேர்த்து ருசித்து மகிழலாம்.
இப்போது, இட்லி மிளகாய் பொடியை பல்வேறு வகைகளில் தயார் செய்கிறார்கள். அந்த வகையில், மிகவும் எளிமையான செய்முறையில், சமையல் கலை வல்லுநர் செஃப் வெங்கடேஷ் பட் கை வண்ணத்தில் எப்படி எளிதில் செய்து அசத்தலாம் என்று இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வெள்ளை அல்லது கருப்பு எள் - 1/4 கப் (50 கிராம்)
கடலை பருப்பு - 1/4 கப் (50 கிராம்)
உளுந்தம் பருப்பு - 1/2 கப் (100 கிராம்)
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு கொத்து
நல்லெண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
கட்டி பெருங்காயம் - 25 கிராம்
மங்களூரு வர மிளகாய் - 15
வர மிளகாய் - 10
நீங்கள் செய்ய வேண்டியவை:
முதலில் அடுப்பில் ஒரு சிறிய கடாய் வைத்து சூடேற்றவும். அதில் வெள்ளை எள் சேர்த்து கருகி விடாமல் பொரித்து எடுக்கவும். அவற்றை ஒரு தட்டில் தனியாக வைத்து விடவும்.
பிறகு அதே கடாயில் கடலை பருப்பு போட்டு வறுக்கவும். அதனை ஏற்கனவே தனியாக தட்டில் வைத்து எள்ளுடன் சேர்த்து விடவும்.
பிறகு, உளுந்தம் பருப்பையும் நன்கு வறுத்துக் கொள்ளவும். அவை பொன்னிறமாக வரும் வரை நன்றாக வறுத்து எடுக்கவும். இவற்றையும், எள், கடலை பருப்புடன் சேர்த்து விடவும்.
இதன் பின்னர், அதே கடாயில் சீரகம், மிளகு, கருவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வறுக்கவும். இதனையும் அந்தத் தட்டில் இருக்கும் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் சேர்த்து விடவும்.
பிறகு, அதே கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கட்டி பெருங்காயம் சேர்த்து பொரித்து எடுக்கவும். அவற்றில் எண்ணெய் இல்லாமல் தட்டில் இருக்கும் பொருட்களுடன் சேர்க்கவும்.
பின்னர், அதே கடாயில் அரை டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், அடுப்பை குறைத்து விட்டு மங்களூரு வர மிளகாய் மற்றும் நம்முடைய ஊர் வர மிளகாய் சேர்த்து வறுக்கவும். இவற்றை அப்படியே 10 நிமிடங்களுக்கு ஆற விடவும்.
பிறகு, முதலில் வர மிளகாயை மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும். இவை நன்கு பவுடர் போல் அரைபட்ட உடன், ஏற்கனவே வறுத்து தட்டில் வைத்து பொருட்களை மிளகாய் பொடியுடன் சேர்த்து நொறுநொறுப்பாக அரைத்து எடுத்தால், இட்லி மிளகாய் பொடி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.