கோடை காலம் வந்துவிட்டதால் மாங்காய் சீசனும் வந்துவிட்டது. இந்த சமயத்தில் மாங்காயை வைத்து உப்பு, காரம் என பல விதமான சுவைகளில் சைடிஷ்களை செய்து பாருங்கள். ஒரு முறை செய்தால் போதும், ஒரு வாரம் முதல் ஆறு மாதம் வரை கெடாமல் இருக்கும் பலவிதமான தொடுகறிகளை எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.
உப்பு மாங்காய்: காய் மாங்காய் எடுத்து சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும். வேண்டும் என்றால் தோலையும் சீவி விடலாம். இதனை ஒரு கண்ணாடி அல்லது பீங்கான் கப்பில் சேர்த்து தூள் உப்பு கொஞ்சம் அதிகமாக சேர்த்து கலந்து மூடி போட்டு ஒரு இரவு முழுவதும் வைக்கவும். பின்னர் திறந்து பார்த்தால் மாங்காயில் உப்பு கலந்து புளிப்பு சுவையுடன் தண்ணீர் விட்டு இருக்கும். மதிய நேரத்தில் மோருடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
பச்சைமிளகாய் உப்பு மாங்காய்: மாங்காயை நீட்டமாக நறுக்கவும். அதேபோல பச்சைமிளகாயையும் நீட்டமாக கீறி விடவும். விதை கொட்டாமல் பார்த்து கொள்ளவும். ஏனென்றால் இதை செய்ய காரம் அவசியம். இதையும் ஒரு பாட்டிலில் சேர்த்து உப்பு பச்சை மிளகாய் போட்டு நன்கு குலுக்கி ஒரு மூன்று மணி நேரம் மூடி விடவும். பின்னர் இதை மீண்டும் குலுக்கி இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வைக்கலாம். நன்கு ஊறியதும் தண்ணீர் சொட்ட சொட்ட மாங்காய் சாப்பிட சுவையாக இருக்கும்.
உப்பு கண்டா மாங்காய்: பிஞ்சு பச்சை மாங்காயை தண்ணீர் இல்லாமல் எடுத்து கீறி, உப்பு நிறைய தடவி வெயிலில் காய வைத்தால் சுவையாக இருக்கும். நீண்ட நாட்கள் கெடாமலும் இருக்கும். இதை போட்டு ரசம் கூட வைக்கலாம்.
மாங்காய் ரைதா: துருவிய பச்சை மாங்காய் மற்றும் வெள்ளரிக்காயை தயிரில் போட்டு, உப்பு மற்றும் வறுத்த சீரகப் பொடி சேர்த்து கலக்கவும். இது சூடான சாதத்திற்கு குளிர்ச்சியான சைடிஷ்.
மாங்காய் சாலட்: நறுக்கிய பச்சை மாங்காய், வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விடவும்.
மாங்காய் சாட் மசாலா: பச்சை மாங்காயை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அதில் உப்பு, மிளகாய் தூள், சீரகப் பொடி, சாட் மசாலா போன்றவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து விடவும். அவ்வளவு தான் ஈவ்னிங் ஸ்நாக்ஸ் மாங்காய் சாட் ரெடியாகிவிடும்.
சக்கரை மாங்காய்: புளிப்பான பச்சை மாங்காயை மெல்லியதாக நறுக்கி, சிறிது தேன் அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். இது புளிப்பும் இனிப்பும் கலந்த சுவையில் இருக்கும்.
இந்த சைடிஷ்கள் எல்லாம் செய்வதற்கு அடுப்பு மற்றும் எண்ணெய் தேவையில்லை. பச்சை மாங்காயின் இயற்கையான சுவையும், உப்பும் மசாலாக்களின் மணமும் சேர்ந்து ருசியாக இருக்கும். கோடை காலம் என்பதால் இவற்றை அதிகமாக சாப்பிட வேண்டாம். குழந்தைகளுக்கு சிறு துண்டுகள் மட்டும் கொடுக்கவும். இதனை தயிர் மோர், பழைய சோறுடன் சேர்த்து சாப்பிடுவது சுவையாக இருக்கும்.