‘ட்ரவுசர் கடை’ என்று கேட்டால், அது ஒரு துணிக்கடை என்று மக்கள் உடனே நினைக்கலாம். ஆனால், சென்னையின் மந்தவெளியில் உள்ள ஆர்.கே.மட் சாலையில் உள்ள ஒரு சிறிய உணவகம் தான் 46 ஆண்டுகளுக்கும் மேலாக அசைவ உணவு பிரியர்களின் உணவகமாக உள்ளது.
சிறிய பெயர் பலகை வைத்திருக்கும் இந்த உணவகம், மற்ற பெரிய ஹோட்டல்களின் முன்னிலையில் மக்கள் மத்தியில் காணாமல் போய்விடும். முதன்முதலில் செல்லும் மக்களுக்கு இந்த உணவகத்தை கண்டுபுடிப்பது கடினம் தான்.

யாரேனும் முதன்முதலில் இந்த உணவகத்திற்கு செல்லவேண்டும் என்று நினைத்தால், அக்கம்பக்கத்தில் உள்ள பூ விற்கும் அக்கா அல்லது ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் அண்ணா என்று எல்லோரும் உங்களுக்கு ‘ட்ரவுசர் கடை’க்கு செல்ல வழிகாட்டுவார்கள்.
ஒரு சிறிய சமையலறையில், அடர்ந்த புகைக்கு மத்தியில், ஒரு சிறிய விளக்கிலிருந்து வரும் ஒளி மூலம், நான்கு தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கும் குரல் கேட்கிறது. சற்று உற்று நோக்கினால், கறுப்பு சட்டை அணிந்து ஒரு நபரைக் காணலாம். அவர்தான் ‘ட்ரவுசர் கடை’ நிறுவனர், ஆர்.ராஜேந்திரன், (வயது 78).
கடையின் வாசலில் புகழ்பெற்ற பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசனின் உருவப்படம் மாட்டப்பட்டு உள்ளது. ராஜேந்திரன் அவருடைய பாடல்களைக் கேட்காத நாளே இல்லை. கண்ணதாசனின் பாடல்கள் வாழ்க்கையைப் பற்றி மிகவும் திறமையான முறையில் தெரிவிக்கிறது என்கிறார் ராஜேந்திரன்.
ராஜேந்திரனின் நாள் காலை 6 மணிக்கு தொடங்குகிறது. மகன்கள் ரமேஷ் மற்றும் விஜய் ராஜ் மற்றும் பிற தொழிலாளர்களுடன் சேர்ந்து, கடையில் மூலப்பொருட்களை எடுத்துக்கொள்வது, காய்கறிகளை வெட்டுவது, சுத்தம் செய்வது என அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார். ராஜேந்திரன் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் மதியம் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவளிக்க எப்போதும் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
சாப்பாடு முதல் மட்டன் சுக்கா, பரோட்டா, கோலா உருண்டை என பல்வேறு வகையான கடல் உணவுகள் வரை, இந்த சிறிய இடத்தில் உணவு வகைகளின் பெரிய பட்டியல் உள்ளது.
சிறுவயதிலிருந்தே, மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பல வேலைகளில் ஈடுபட்டிருந்தார். திருச்சிராப்பள்ளியில் தனது ஆரம்ப ஆண்டுகளை கழித்த பிறகு, அவர் மே 1977 இல் தனது மனநலம் பாதிக்கப்பட்ட மகளுக்கு சிகிச்சை பெற சென்னைக்கு வந்தார்.

குடும்ப செலவு மற்றும் மருத்துவமனை செலவுகளை சமாளிக்க, பெயர் பலகை இல்லாமல், ராஜேந்திரன் உணவகத்தை துவக்கினார். ‘ராஜேந்திரன் அப்பா கடை’ என்று வாடிக்கையாளர்களால் அழைக்கப்பட்டது. நாளடைவில் அந்தக் கடையை ‘அப்பா கடை’ என்றும், விரைவில் அது ‘ட்ரவுசர் கடை’ என்றும் மக்கள் அழைத்தனர்.
தனது கடையை வாய்மொழியில் மக்களின் மத்தியில் அறிமுகப்படுத்தியதாக கூறுகிறார் ராஜேந்திரன். “முன்பு அந்த இடம் ஒரு வீடு. நான் உரிமையாளரை அணுகி, உணவகத்தை நடத்துவதற்கு வாடகை அடிப்படையில் இடத்தைப் பயன்படுத்தலாமா என்று கேட்டேன்.

சுமார் 5,000 ரூபாயில் இந்த இடத்தை ஆரம்பித்தேன். வாய் வார்த்தை மூலம், தினமும் சுமார் 10 முதல் 20 பேர் வரத் தொடங்கினர், மேலும் அவர்கள் மலிவு விலையில் தரமான உணவை சாப்பிட முடியும் என்பதால், மற்றவர்களுக்கு இங்கு முயற்சி செய்ய பரிந்துரைத்தனர்.
ஆரம்பத்தில் இந்த இடம் நானும் என் மனைவியும் தான் நடத்தி வந்தோம். என் மாமனார் திருச்சியில் ஒரு உணவகம் நடத்தி வந்தார். ஆரம்ப காலத்தில் நான் அங்கும் இங்கும் ஒன்றிரண்டு விஷயங்களைக் கற்றுக்கொண்டேன், மேலும் அவர் எனக்கு இரண்டு பொருட்களை சமைக்கக் கற்றுக் கொடுத்தார்.
சிலர் வேலைக்குச் சேருவார்கள், பின்னர் அவர்கள் பாதியிலேயே சென்றுவிடுவார்கள், அதனால் பொருட்களை நானே சமைக்கக் கற்றுக்கொண்டேன். பின்னர் எங்கள் கடையில் பட்டியலிடப்பட்ட அனைத்தையும் சமைக்க கற்றுக்கொண்டேன், ”என்று அவர் கூறினார்.

“அருகில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் ஸ்டேஷனில் இறங்குபவர்கள், நல்ல அசைவ உணவுக்கு எது சிறந்த இடம் என்று விசாரிப்பது வழக்கம். பார்வையாளர்கள் இந்தக் கடைக்குச் செல்லும் வழியைக் காட்டி, ‘ஒருத்தர் டூசர் போடுனு நிப்பாரு’ என்று சொல்வார்கள். அதனால்தான் உணவகத்திற்கு அதன் பெயர் வந்தது,” என்று அவர் கூறினார்.
“பெயரைப் பார்த்ததும் இங்கே ஏதோ தனித்தன்மை இருக்கணும்னு நினைச்சேன். நாங்கள் கறி தோசை சாப்பிட்டோம், சுவை நன்றாக இருந்தது, செலவும் மிகவும் மலிவாக இருந்தது. அடுத்த முறை, மதிய உணவு அல்லது இரவு உணவுக்கு இங்கு வர திட்டமிட்டுள்ளேன்,” என்று வாடிக்கையாளர் ஒருவர் கூறினார்.
பல ஆண்டுகளாக தமிழ் இயக்குனர் மறைந்த விசு, நடிகர் பார்த்தீபன் மற்றும் பல பிரபல அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள், இந்த உணவகத்தின் வழக்கமான வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
மந்தவெளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல உணவகங்களில் இருந்து ‘ட்ரவுசர் கடை’ தனித்து நிற்க உதவுவது எது? ராஜேந்திரனின் கூற்றுப்படி, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விலை மற்றும் வீட்டு பாணியிலான உண்மையான சமையல் ஆகும். சாலையோரக் கடைகளில் கூட ஒரு தோசை சுமார் 15 ரூபாய்க்கு விற்கிறது ஆனால் இங்கே அது 10 ரூபாய் என்கிறார்.
“நாங்கள் இப்போதும் விறகில் சமைப்போம், கல் கிரைண்டரில் மசாலா அரைக்கிறோம். நாங்கள் எந்தவிதமான கெமிக்கல் பயன்படுத்துவதில்லை.
இதில் அனைத்தையும் தயார் செய்கிறோம். அளவான மசாலா மற்றும் பிற பொருட்களைக் கொண்டு, மற்ற ஹோட்டல்களில் பரிமாறப்படுவது போல் நமது உணவு இருக்காது. இந்த 45 வருடங்களில், எங்களுடைய சமையல் முறையால், எங்கள் உணவகத்தில் உணவு உண்ட பிறகு யாருக்கும் வயிற்றுப் பிரச்சனை ஏற்பட்டதில்லை.
கவலைக்குரிய ஒரு பகுதி என்னவென்றால், இந்த இடத்தை விரிவுபடுத்துவதற்கான நிதி ஆதாரம் என்னிடம் இல்லை. எனது மகன்கள் எனக்கு உறுதுணையாக இருந்தாலும், இதை பெரிய அளவில் முன்னெடுத்துச் செல்வதற்கு அவர்கள் முயற்சி எடுக்கவில்லை” என்று ராஜேந்திரன் மேலும் கூறினார்.
அவரது கூற்றுப்படி, தினமும் சுமார் 150-200 பேர் உணவகத்திற்கு வருகை தருகின்றனர். மேலும் பல உணவு விநியோக ஒருங்கிணைப்பாளர்களின் வருகையுடன் சமீப காலங்களில் எண்ணிக்கை குறைந்துள்ளது.
“மக்கள் இணையத்தில் என்னைத் தேடி என் இடத்தைப் பார்க்கிறார்கள். அவர்களில் பலர் வழக்கமான வாடிக்கையாளர்களாக மாறிவிட்டனர். அவர்கள் சென்னைக்கு வரும்போதெல்லாம், இங்கு வருகைத்தர தவறுவதில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.