மே மாதம் தொடங்க இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், இப்போதே வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழைப் பொழிவு இருந்தாலும், சூரிய பகவான் கருணை காட்டுவதாக தெரியவில்லை. பல இடங்களில் பகலில் கடும் வெயிலும், இரவில் கடும் குளிரும் நிலவுகிறது. அதேநேரத்தில், பல்வேறு இடங்களில் அக்னி வெயில் போல் கொளுத்தி இருக்கிறது.
எனவே, மே மாதம் நெருக்கும் போது வெயில் இன்னும் உக்கிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க நாம் முறையான உணவுகளை எடுத்துக் கொள்ளுதல் அவசியமாகும். இந்நிலையில், இந்த வெயில் நாள்களில் நாம் எந்த மாதிரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளலாம், உடலை குளிர்விக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய பானங்கள் குறித்தும் நாம் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ப்ரீத்தி ராஜிடம் கேட்டறிந்தோம்.
/indian-express-tamil/media/post_attachments/804c6974-be5.jpg)
இது தொடர்பாக அவர் தொலைபேசியில் நம்மிடம் பேசுகையில், "இந்த வெயில் காலத்தில் நமக்கு மிகவும் முக்கியமானது நீர்ச்சத்து. அதற்கு முதலில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் 3 லிட்டர் தண்ணீர் எல்லோரும் கண்டிப்பாக பருக வேண்டும். பிரிட்ஜில் வைத்த தண்ணீரை குடிப்பதை விட, மண்பானையில் வைத்த நீரை பருகி வரலாம்.
புதிய மண்பானை வாங்கினீர்கள் என்றால், அதில் வைத்த தண்ணீரை பருகும் முன், பானையை நன்கு கழுவ வேண்டும். 10 நாள்களுக்குப் பின் அந்த தண்ணீரை பருகுவது உடலுக்கு ரொம்பவும் நல்லது. பானை தண்ணீர் மிதமான குளிர்ச்சியில் இருக்கும். இதனை நாம் குடிக்கும் போது, தொண்டைக்கு எந்தவித பிரச்சனையையும் ஏற்படுத்தாது.
பழங்களில் மிகச் சிறந்தது தண்ணீர் பழம் என்பேன். நீரிழப்பு ஏற்படுவதை தடுப்பதில் 'அரசி' என்று இதனை அழைக்கிறார்கள். அந்த அளவிற்கு அதில் இருக்கும் வைட்டமின்களும், தாதுக்களும் இந்த வெயில் நேரத்தில் மிகவும் உதவுகிறது. நீங்கள் வெயிலில் சென்று வந்த பிறகு, 100 கிராம் தண்ணீர் பழம் சாப்பிட்டால், உங்களுக்கு நீரிழப்பு ஏற்படுவதை தடுக்கும்.
அடுத்து, கோடை காலத்தில் முக்கிய பிரச்சனையாக, சிறுநீர் பாதை தொற்று இருக்கிறது. இதனைத் தடுக்க பழைய சோறில் கொஞ்சம் மோர், வெங்காயம் சேர்த்து சாப்பிட்டு வரலாம். இந்த மோர் சேர்த்த கஞ்சியில் நிறைய புரோபயாடிக்ஸ் இருக்கிறது. அதாவது, இவை உடலில் 'நல்ல' பாக்டீரியாவை உற்பத்தி செய்யக்கூடியவை. அதனால், அவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
இதேபோல், தினமும் தயிர் சாப்பிட்டு வரலாம். இதில் இருக்கும் லாக்டோ பேசில்லஸ் பாக்டீரியா உடலுக்கு கோடிக்கணக்கான நன்மைகளைச் செய்கிறது. மேலும், தயிருடன் ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட பெர்ரி பழங்களைச் சேர்த்து சாப்பிட்டு வரலாம். இதுவும் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுவதை தடுக்கிறது.
இதேபோல், கொம்புச்சா போன்ற பானத்திலும் நிறைய புரோபயாடிக்ஸ் இருக்கிறது. இவையும் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுதலை தடுக்க உதவுகிறது. இட்லி, தோசையில் புரோபயாடிக்ஸ் இல்லை என்றாலும், அவை புளித்த மாவில் தயார் செய்யப்படுவதால், அவற்றை அவ்வப்போது சாப்பிட்டு வரலாம்.
மாம்பழம் என்னதான் சூடு என்று சொன்னாலும், அது பழங்களின் 'அரசி'யாக இருக்கிறது. இந்த கோடை காலத்தில் மட்டும் கிடைக்கும் பழமாகவும் அவை இருக்கிறது. அவற்றை தயிரில் கலந்து சாப்பிடும் போது, அதில் இருக்கும் சூடு தன்மை குறையும். இதில் வைட்டமின் 'ஏ' அதிகம் இருக்கிறது. அதனால், அன்றாட பாதி மாம்பழத்தை தயிரில் கலந்து சாப்பிட்டு வரலாம்.
மாம்பழத்தில் வைட்டமின் 'ஏ' இருப்பது போல், மாங்காயில் வைட்டமின் 'சி' இருக்கிறது. இது உடல் சூட்டினால் வரும் நோய்களை தடுக்க வல்லது. இவை தவிர, சிட்ரஸ் பழங்களான லெமன், ஆரஞ்சு போன்றவைகளையும் சாப்பிட்டு வரலாம். இவற்றிலும் வைட்டமின் 'சி' நிறைந்து இருக்கிறது.
இதேபோல், இந்த கோடை காலத்தில் தாராளமாக கிடைக்கும் நுங்கு-விலும் வைட்டமின் 'சி' அதிகம் இருக்கிறது. இது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. உடல் வீக்கம் அடைவதையும், வேர்க்குரு வராமலும் தடுக்கிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும், டயரியா, மலச்சிக்கல் வராமலும் தடுக்கவும் உதவுகிறது. அதனால், தினமும் மாலை நேரத்தில் 4 முதல் 5 நுங்கு சாப்பிடலாம்.
வெயில் காலத்தில் அதிகம் வரும் மற்ற நோய் தொற்றுகளாக சின்னம்மை, தட்டம்மை, அம்மைக்கட்டு நோய் அல்லது கூகைக்கட்டு உள்ளிட்டவை உள்ளன. இதனைத் தடுக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அவசியமாகும். அதற்கு ஆக்ஸிஜனேற்றம் அதிகம் தேவை. இவை பலதரப்பட்ட வண்ணங்களில் இருக்கும் காய்கறிகளில் இருந்து கிடைக்கிறது. உதாரணமாக, சிவப்பு முட்டைக்கோஸ், கேரட், மாங்காய், கீரைகள், கொத்தமல்லி தழை, சர்க்கரைவள்ளி கிழங்கு உள்ளிட்டவற்றை அன்றாட நாம் எடுத்துக் கொள்ளவும். இவற்றை நன்கு கழுவி சமைத்தல் அவசியம். இதேபோல், பாதாம், பிஸ்தா பருப்பு வகைகளை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம்." என்று ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ப்ரீத்தி ராஜ் தெரிவித்தார்.
டாக்டர் ப்ரீத்தி ராஜ் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். அவர் வூட்டு நியூட்ரிஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.