உடல் எடை அதிகரிப்பு தற்போது உலகளாவிய பிரச்சனையாக இருந்து வருகிறது. உடல் எடை குறைப்புக்கு உணவுக் கட்டுப்பாடு அவசிமான ஒன்றாக இருக்கிறது. சரியான உணவுகளை சரியான நேரத்தில் எடுத்து வருவதும், தினசரி உடற்பயிற்சியும் உடல் வெகுவாக குறைய உதவுகிறது.
அந்த வகையில், உடல் எடையை எப்படிக் குறைக்கலாம், அதற்கான திட்டத்தை எப்படி வகுப்பது, எடை குறைப்பில் ஈடுப்படும் என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் போன்ற அடுக்கான கேள்விகளை சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ப்ரீத்தி ராஜிடம் கேட்டோம். அதற்கு இன்முகத்துடன் தனது பதில்களை அவர் வழங்கியுள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/804c6974-be5.jpg)
இதுதொடர்பாக ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ப்ரீத்தி ராஜ் பேசியதாவது:-
உடல் எடையை குறைக்க, முதலில் நாம் அன்றாட சாப்பிடும் கலோரிளை கட்டுப்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு, ஒருநாளைக்கு 1800 கலோரிகள் சாப்பிடுகிறோம் என்றால், அதனை 300 கலோரிகளாக குறைக்கலாம். காலை உணவாக 4 இட்லிகள் சாப்பிட்டு வந்தால், அதை மூன்றாக குறைக்கலாம். மதியம் சாதம் சாப்பிடும் போது, ஒரு பங்கை குறைக்கலாம். இதேபோல், இரவு நேரத்தில் ஐந்து சாப்பத்திகள் சாப்பிட்டு வந்தால், அதை மூன்றாக குறைக்கலாம்.
இப்படி செய்து வரும்போது, உங்களது உடலில் 300 கலோரிகள் குறையும். நீங்கள் தினமும் நடைப்பயிற்சி மேற்கொண்டால் அதில் 200 கலோரிகள் கரையும். டயட் மூலம் 300 கலோரிகள், உடற்பயிற்சி மூலம் 200 கலோரிகள் குறைக்கும் போது, நீங்கள் ஒருநாளைக்கு 500 கலோரிகளை எளிதில் குறைத்து விடலாம். அதன் மூலம், நீங்கள் ஒரு மாதத்திற்கு 2 முதல் 3 கிலோ வரை உடல் எடையைக் குறைக்கலாம்.
இரண்டாவதாக, உடல் எடையை குறைக்க தண்ணீர் மிக முக்கிய ஒன்றாக இருக்கிறது. நீங்கள் உடல் எடையை குறைக்கத் தொடங்கும் போது, தண்ணீர் தவிப்பதற்கும், பசி எடுப்பதற்கும் இடையிலான வித்தியாசத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியாமல் போகலாம். அதனால், குறிப்பிட்ட நேர இடைவெளியில் தண்ணீர் பருகி வரலாம். அதாவது, ஒரு மணி நேர இடைவெளியில் 200 மில்லி லிட்டர் தண்ணீர் குடிக்கலாம். இதன் மூலம், தேவையில்லாமல் உண்பதை நீங்கள் அறவே தவிர்க்கலாம்.
மூன்றாவதாக, உடல் எடை குறைப்பு நேரங்களில் நொறுக்குத் தீனி உண்பதையும், இனிப்பு திண்பதையும் தவிர்க்கலாம். அதற்கு பதிலாக புரதச்சத்து நிறைந்தவற்றை எடுத்துக் கொள்ளலாம். நமக்கு ஒருநாளைக்கு 200 கிராம் புரதம் தேவை. அதற்கு ஏற்ப மூன்று வேளைகளிலும் பிரித்து சாப்பிடலாம். புரதச்சத்து சிக்கன், முட்டை உள்ளிட்ட நான்-வெஜ் உணவுகளில் நிறைந்து இருக்கிறது. ஒருவேளை, நீங்கள் வெஜிடேரியனாக இருந்தால் பன்னீர், சோயா பீன்ஸ், கீரைகள், வேர்க்கடலை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். பால் குடித்து வந்தால் தயிர் அவசியம் எடுத்துக் கொள்ளலாம்.
முட்டை எடுக்கும் போது, அதிலிருந்து நமக்கு 20 கிராம் புரதம் தேவைப்படுகிறது. ஒரு முட்டையில் தேவையான புரதம் கிடைக்காது. அதில் 6 கிராம் மட்டுமே இருக்கும். கொலஸ்ட்ரால் அதிகரிக்கக் கூடாது என்றால், இரண்டு முழு முட்டையுடன் 5 முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் கொஞ்சம் காய்கறிகள் சேர்த்து சாப்பிடலாம். இதன் மூலம் 20 கிராம் புரதம் நமக்கு கிடைத்து விடும்.
இனிப்பு திண்ண வேண்டும் அல்லது சாக்லேட் சாப்பிட வேண்டும் என உங்களுக்கு தோன்றினால், கொஞ்சம் மாம்பழம், சப்போட்டா, பலாப்பழம் போன்ற அதிக நார்ச்சத்து இருக்கும் பழங்களை எடுத்துக் கொள்ளலாம். இவற்றில் இருந்து உங்களுக்கு தேவையான குளுக்கோஸ், புரோட்டோஸ் போன்றவையும் கிடைக்கிறது. இவை உடலுக்கு தேவையான வலுவை கொடுக்கிறது. அத்துடன் குடலில் நல்ல பாக்டீரியா உற்பத்தியாகவும் உதவுகிறது.
இனிப்பு அதிகம் சாப்பிடும் போது, கெட்ட பாக்டீரியா உற்பத்தியாகும், உடல் எடையும் அதிகரிக்கும். எனவே, உடல் எடையை குறைக்க இப்போதுதான் நீங்கள் தொடங்குகிறீர்கள் என்றால், மேலே குறிப்பிட்டவற்றை நீங்கள் கடைப்பிடித்து வந்தாலே, ஒரு மாதத்திற்கு 4 முதல் 5 கிலோ வரை அப்படியே குறைக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.