தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும், மிகவும் மகிழ்ச்சியான தருணம். இருப்பினும் அது அவ்வளவு சுலபமானதும் இல்லை. விடாத வாந்தி, தலைச்சுற்றல், குமட்டல், சோர்வு என இந்நாளில் கர்ப்பிணிகள் உடல் ரீதியாக பல சிக்கல்களை சந்திக்கின்றனர்.
இதைத்தான் மருத்துவர்கள் ’மார்னிங் சிக்னஸ்’ என்று அழைக்கின்றனர். இந்த வாந்தி, காலை வேளைகளில் மட்டுமல்லாமல், எல்லா வேளைகளிலும், குறிப்பாக இரவு உணவின்போது அதிகம் காணப்படுகிறது. மேலும் முதல் மூன்று அல்லது நான்கு மாதங்கள் முடியும்போது மெல்லக் குறைந்தும் விடுகிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு வாந்தி வருகிறது என்பதற்காக சாப்பிடாமல் இருப்பதோ, பட்டினி கிடப்பதோ நல்லதல்ல. அடிக்கடி வாந்தி வருகிறது என்பதற்காக சாப்பிடாமல் இருப்பதைக் காட்டிலும் 3 முறை மட்டுமே சாப்பிடாமல் 6 அல்லது 7 முறை என பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவதன் மூலம் தாய், சேய் இருவருக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். நீர்ச்சத்துள்ள உணவுகளை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவது நல்லது.
மசக்கையில் இருந்து உடனடி நிவாரணம் பெற உதவும் சில அத்தியாவசிய வீட்டு வைத்தியங்களை உணவியல் நிபுணர் அகன்ஷா ஜே ஷர்தா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மார்னிங் சிக்னெஸ், கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனை. கறிவேப்பிலை தேநீர் குடிப்பது வாந்தி மற்றும் குமட்டலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும் என்று அவர் பகிர்ந்து கொண்டார்.
தேவையான பொருட்கள்
1 கிளாஸ்- தண்ணீர்
10-15 - கறிவேப்பிலை
1 தேக்கரண்டி - கொத்தமல்லி
எப்படி செய்வது?
தண்ணீரை ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து கறிவேப்பிலை, கொத்தமல்லி போடவும்.
வடிகட்டி குடிக்கவும்
கொத்தமல்லி வைட்டமின் கே நிறைந்து, இது வயிற்று வலியை போக்கும். அவை செரிமான கோளாறுகள், வயிற்று போக்கு, மார்னிங் சிக்னெஸ் மற்றும் வாந்தி ஆகியவற்றைத் தடுக்கின்றன என்று ஆயுர்வேத நிபுணர் விகாஸ் சாவ்லா பகிர்ந்து கொண்டார்.