/indian-express-tamil/media/media_files/2025/10/16/adirasam-2025-10-16-11-44-14.jpg)
தீபாவளிப் பலகாரங்களில் அதிரசம் செய்வதுதான் பலருக்கும் ஒரு சவாலான விஷயமாக இருக்கும். அரிசியை ஊறவைத்து, மாவு அரைத்து, சரியான பக்குவம் பார்ப்பது ஒரு பெரிய வேலை. ஆனால், கடையிலோ அல்லது வீட்டிலோ திரித்த பச்சரிசி மாவை வைத்தே, அரிசி ஊறவைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் மிக எளிதாக, கச்சிதமான அதிரசத்தை சுட்டு எடுக்கலாம். அதிரசம் செய்யத் தெரியாதவர்கள் கூட இந்த சிம்பிள் ஸ்டெப்ஸை பின்பற்றி அசத்தலாம். இனி அதிரசம் செய்வதற்கு அரிசி ஊற வைக்கத் தேவையில்லை. இதனை எப்படி செய்வது என்று கோமுஸ் லைஃப்ஸ்டைல் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு - 1 கப்
வெல்லம் - 1 கப்
தண்ணீர் - கால் கப்
ஏலக்காய் தூள்
உப்பு
நெய்
எண்ணெய்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 1 கப் பச்சரிசி மாவை எடுத்து, அதில் சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்து, மாவை ஈரப்பதமாக்கி புட்டு மாவு பதத்திற்குப் பிசையவும். மாவை கையில் பிடித்தால் பிடிக்க வர வேண்டும், தட்டிவிட்டால் உடைந்து போக வேண்டும். பிசைந்த மாவை சலித்து, பின்னர் காயாமல் இருக்க மூடி போட்டு வைக்கவும். ஒரு கடாயில் 1 கப் வெல்லத்துடன் கால் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி எடுக்கவும். வடிகட்டிய பாகை மீண்டும் கொதிக்க வைத்து, அதன் பதத்தைச் சோதிக்க, ஒரு தட்டில் தண்ணீர் வைத்து அதில் பாகை ஊற்றினால், அது உருட்ட வர வேண்டும். அதை அமுக்கிப் பார்க்கும்போது 'தக்காளிப் பதத்தில்' இருக்க வேண்டும். இதுவே அதிரசத்திற்கான சரியான பக்குவம்.
பாகில் ஏலக்காய் தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கிளறிய பின், சலித்து வைத்துள்ள பச்சரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கிளறவும். இதனுடன் சிறிது நெய்யும் சேர்த்து நன்றாகக் கிளறினால், நல்ல வாசனையுடன் அதிரச மாவு தயாராகிவிடும். மாவை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி, நெய் தடவி, மூடி போட்டு ஒரு நாள் இரவு முழுதும் நன்றாக ஊறவிட வேண்டும்.
மறுநாள் மாவு டைட்டாக இருந்தால், கை சூடு தாங்கும் அளவிலான வெதுவெதுப்பான நீரைச் சேர்த்துப் பிசைந்து அல்லது அழுத்தி பிசைந்து மாவை இளக்கம் கொடுக்கலாம். மாவை சிறு உருண்டையாக எடுத்து, வாழை இலை அல்லது பால் கவரில் வைத்து தட்டி, நடுவில் ஒரு ஓட்டை இடவும். சூடான எண்ணெயில் தட்டிய அதிரசத்தைப் போட்டு, மேலே எழும்பி வந்த பிறகு மாற்றிப் போட்டு எடுத்தால் சுவையான அதிரசம் ரெடி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.