இந்தியாவின் மிகப்பெரிய கால்பந்து தொடரான இந்தியன் சூப்பர் லீக், கடந்த 2013-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் கால்பந்தை அதிகம் பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காக ஐஎம்ஜி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இத்தொடரை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
2014-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய சூப்பர் லீக் தொடரில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்றன. முதன் மூன்று சீசனும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் அங்கீகாரம் இன்றி தான் நடைபெற்றது. ஆனால், நடப்பு 2017-18 தொடரில் ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இந்தியன் சூப்பர் லீக் 2017-2018 சீசனில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று 95 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. இந்தாண்டு முதன் முறையாக பெங்களூரு எஃப்சி மற்றும் ஜாம்ஷெட்பூர் எஃப்சி ஆகிய இரண்டு அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன. அனைத்து அணிகளும் மற்ற அணிகளுடன் இரு முறை மோத வேண்டும். ஒரு போட்டி உள்ளூரிலும், மற்றொரு போட்டி எதிரணியின் இடத்தில் நடைபெறும். இவ்வாறாக மொத்தம் 90 லீக் போட்டிகள் நடைபெறும். இதன்பின் இரண்டு அரையிறுதிப் போட்டி மற்றும் இறுதிப் போட்டி நடக்கும் நாள் மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
லீக் சுற்றில் ஞாயிறு அன்று மட்டும் இரண்டு போட்டிகள் நடைபெறும். முதல் போட்டி மாலை 5:30 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 8 மணிக்கும் தொடங்கும். மற்ற நாளில் நடைபெறும் போட்டிகள் அனைத்தும் இரவு 8 மணிக்கு தொடங்கும். பெங்களூரு எஃப்சி தனது முதல் போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி அணியை பெங்களூரில் உள்ள ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் நவம்பர் 19-ஆம் தேதி எதிர்கொள்கிறது. மற்றொரு புதிய அணியான ஜாம்ஷெட்பூர் எஃப்சி, டிசம்பர் 1-ஆம் தேதி நடப்பு சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கட்டா அணியை சந்திக்கிறது.