ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பூன்ச் மாவட்டத்தில், பாகிஸ்தான் படைகள் இன்று அத்துமீறி நடத்திய தாக்குதலில் மூன்று சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எட்டு பேர் படுகாயமடைந்து உள்ளனர். பூன்ச் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தானியங்கி ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் படைகள் இத்தாக்குதலை அரங்கேற்றியுள்ளன.
nbsp;
தாக்குதலில் மரணமடைந்த மூன்று சிறுவர்களில் ஒருவரது பெயர் இஸ்ரார் அஹ்மத்(10) என்றும் அவர் கெர்னி பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ரேஷ்மி பி(55) மற்றும் அவரது 31 வயது மகன் ரஃபிக் ஆகியோரும் இதில் படுகாயமடைந்துள்ளனர்.
அதேபோல், யாசிர் அஹ்மத்(13), முஹமத் சாதிக் (16), மற்றொரு முகமத் சாதிக்(51) ஆகியோரும் இத்தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் சிலரது விவரங்கள் வெளியிடப்படவில்லை.
எல்லைப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின் மீதான தாக்குதலுடன், பொதுமக்கள் வாழும் டெக்வார், ஷாபூர், கெர்ணி மற்றும் கஸ்பா ஆகிய பகுதிகளிலும் பாகிஸ்தான் நிலைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. கெர்ணி கிராமத்தின் சில இடங்களில் குண்டுகள் விழுந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த செப்.,27-ஆம் தேதி பாகிஸ்தான் படைகள், பாலகோட் மற்றும் மஞ்சகோட் என்ற இவ்விரு மக்கள் வசிக்கும் கிராமங்களில் நடத்திய தாக்குதலில், 50 வயது பெண் உட்பட இருவர் படுகாயமடைந்தனர்.
இந்திய துருப்புகள் இந்த தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றன. இந்த தாக்குதலால் மக்கள் பயத்தில் தங்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
கடந்த இரு மாதங்களில் பாகிஸ்தான் துருப்புகள் அத்துமீறி 50 முறை தாக்குதல் நடத்த முயற்சி செய்தன என்றும், இதில் 44 முயற்சிகளை நம்முடைய 'எச்சரிக்கை துருப்புகள்' முறியடித்து விட்டதாக, துணை முதல்வர் டாக்.நிர்மல் சிங் தெரிவித்துள்ளார். அதேபோல், மாநிலத்திற்குள் நுழைய முயன்ற சில தீவிரவாதிகளும் தடுக்கப்பட்டுள்ளனர் என்றார்.
கடந்த மாதம் பாகிஸ்தான் படைகள் சர்வதேச மற்றும் இந்திய எல்லைகளில் நடத்திய தாக்குதலில், ஒரு பிஎஸ்எஃப் கான்ஸ்டபிள் மற்றும் ஒரு பெண் ஆகியோர் கொல்லப்பட்டனர். பலரும் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்று மீண்டும் பூன்ச் மாவட்டத்தில் பாக்., துருப்புகள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் மூன்று சிறுவர்கள் பலியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.