105 ஆண்டுகளுக்கு முன்பே மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை அளித்த முன்மாதிரி கேரள பள்ளி

கேரளாவில் 105 வருடங்களுக்கு முன்பே அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகள் மற்றும் பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் விடுமுறை அளித்து வருகிறது.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிக்க வேண்டுமா? கூடாதா என்பது குறித்த வாதம் சமீப காலமாக வலுத்து வருகிறது. ஒருபுறம் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல் வலி, சோர்வு, அசௌகரியம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு பணிபுரியும் பெண்களுக்கு விடுமுறை அளிக்கலாம் என பரவலாக சில தரப்பினர் கூறிவருகின்றனர். இன்னொருபுறம், மாதவிடாய் குறித்து பேச இன்னும் பெரும்பாலானோர் தயங்கும் நிலையில், அந்நாட்களில் விடுமுறையை கேட்பது பெண்களுக்கு மேலும் தயக்கமாக இருக்கும் என சிலர் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், கேரளாவில் 105 வருடங்களுக்கு முன்பே அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகள் மற்றும் பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் விடுமுறை அளித்து வருகிறது. கேரள மாநிலம் கொச்சினில் இந்த பள்ளி அமைந்துள்ளது. 1912-ஆம் ஆண்டிலிருந்தே இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பாஸ்கரன் உன்னி என்பவர் எழுதிய 19-ஆம் நூற்றாண்டில் கேரளா (Kerala in the 19th Century) என்ற புத்தகத்தில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. இவர்தான் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர். அப்பள்ளியில், ஆண்டுத்தேர்வை எழுத 300 நாட்கள் வருகைப்பதிவு கட்டாயம். ஆனால், மாதவிடாய் காலத்தில் மாணவிகள் பலர் பள்ளிக்கு வராமல் இருப்பதால், அவர் இந்த முடிவை எடுத்ததாக புத்தகத்தில் குறிப்பிட்டார்.

“தேர்வுகள் முறையாக நடத்தப்படுகின்றன. மாணவர்கள் தேர்வெழுதுவது கட்டாயம். ஆனால், மாதவிடாய் காலத்தில் மாணவிகளும், பெண் பணியாளர்களும் பள்ளிக்கு வராமல் இருந்தால் பிரச்சனை அல்லவா.”, என பாஸ்கரன் உன்னி புத்தகத்தில் குறிப்பிட்டார்.

அதனால், தேர்வு காலங்களில் மாதவிடாய் ஏற்படும் மாணவிகள் அன்றைய நாள் விடுமுறை எடுத்துவிட்டு, வேறொரு நாள் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என, அவர் கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார். அதை கல்வித்துறையும் ஏற்றுக்கொண்டது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close