அமர்நாத் யாத்ரீகர்களை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் யாத்ரீகர்கள் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் இருக்கும் பனி லிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆண்டுதோறும் செல்வது வழக்கம். பிரசித்தி பெற்ற அமர்நாத் குகைக்கோயிலின் இந்த ஆண்டுக்கான யாத்திரை கடந்த மாதம் தொடங்கியது.
இதையடுத்து, நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு சென்று தரிசித்து வருகின்றனர். அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பல்வேறு முகாம்களில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டு அமர்நாத் கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமர்நாத் யாத்ரீகர்களை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் யாத்ரீகர்கள் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ராம்பன் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் மீட்பு பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
அமர்நாத் யாத்திரை சென்று விட்டு குஜராத் மாநில யாத்ரீகர்கள், ஜம்முவுக்கு கடந்த 10-ம் தேதி இரவு பேருந்தில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். பேருந்து அனந்தநாகின் கானாபால் எனுமிடதுக்கு வந்த போது, அதன் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது, இந்த சோகம் நெஞ்சை விட்டு நீங்காத நிலையில், பேருந்து விபத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் 16 பேர் பலியான சம்பவம் வேதனை அளிப்பதாக அமைந்துள்ளது.