மும்பையில் 16 வயது சிறுவன் ஒருவன், அதே வயதை ஒத்த 15 இளைஞர்களால் தொடர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மஹராஷ்டிரா மாநிலம் மும்பை நகரத்தில் உள்ள அந்தேரியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன், தான் ஒரு வருடமாக 15 பேரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகியதாக தனக்கு தெரிந்த ஒருவரிடம் கடந்த இரு நாட்களுக்கு முன் கூறியுள்ளான். இதையடுத்து, அவர் அந்த சிறுவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் அளித்தார்.
இதன்பின்பு, அவர் புகார் கூறிய 15 பேர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அதில் ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அந்த சிறுவன் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும், மருத்துவ பரிசோதனையில் அவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து காவல் துறை தரப்பில் மேலும் கூறப்பட்டதாவது, கடந்த 2016-ஆம் ஆண்டு அந்த சிறுவனை, கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு அதனை வீடியோவாக பதிவு செய்ததாகவும், அதனை தன்னுடைய மற்ற நண்பர்களுக்கு காண்பித்ததாகவும் தெரிவித்தனர்.
தங்களுடைய ஆசைக்கு இணங்காவிட்டால், அந்த வீடியோவை எல்லோருக்கும் காண்பித்துவிடுவோம் என அந்த கும்பல் மிரட்டியதால், அந்த சிறுவன் பயந்து அச்சம்பவத்தை யாரிடமும் சொல்லவில்லை. இதைப்பயன்படுத்திக் கொண்டு அந்த சிறுவனை 15 பேரும் ஒருவர்பின் ஒன்றாக பாலியல் வன்புறுத்தல் செய்ததாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.
மற்றொரு தினம், அந்த 15 பேரில் ஒருவர் உணவகத்திற்கு செல்வதற்காக அந்த சிறுவனிடம் 1,100 ரூபாய் கேட்டு, அதனை அவர் தர மறுத்ததால் அவர் மீண்டும் பாலியல் வன்புறுத்தல் செய்யப்பட்டார்.
இவ்வாறு 15 பேரும் அந்த சிறுவனை 4 முறை பாலியல் வன்புறுத்தல் செய்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. தொடர் பாலியல் வன்புறுத்தலால் அவருக்கு வலி ஏற்படவே தனக்கு தெரிந்த ஒருவரிடம் இதுகுறித்து கூறியதையடுத்து அவர் அந்த சிறுவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் அளித்தார்.
இதையடுத்து, அச்சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. புகார் கூறப்பட்ட 15 பேரின் மீதும் காவல் துறையினர் பாக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் அனைவருமே 15 மற்றும் 17 வயதை உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
16 வயது சிறுவன், 15 பேரால் தொடர் பாலியல் வன்புறுத்தலுக்கு ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.