கூட்டு பாலியல் வன்கொடுமை: 3-வது மாடியிலிருந்து 16 வயது இளம்பெண்ணை வீசிய கொடூரம்

இச்சம்பவத்தில் தொடர்புடைய சன்னியை காவல் துறையினர் கைது செய்தனர். சன்னியின் நண்பர்கள் இரண்டு பேரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 16 வயது இளம்பெண்ணை கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, மூன்றாவது மாடியிலிருந்து அவரை தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கான்பூர் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சன்னி. இவரது வீட்டிற்கு எதிரே ஒரு குடும்பம் வாடகை வீட்டில் வசித்து வந்தது. இந்நிலையில், சனிக்கிழமை அந்த குடும்பத்தை சேர்ந்த 16 வயது இளம்பெண்ணை சன்னி மற்றும் அவருடைய நண்பர்கள் இரண்டு பேர் கட்டாயமாக கடத்தி அவர்கள் வீட்டுக்கு இழுத்துச் சென்றதாக குற்றம்சாட்டப்படுகிறது.

மேலும், சன்னி மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேர் அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை உட்படுத்தினர். அதோடு மட்டுமல்லாமல், கதறி அழுந்த அந்த பெண்ணை வீட்டின் மூன்றாவது மாடியிலிருந்து தூக்கி வீசியுள்ளனர்.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அப்பெண்ணை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கு கூடி சன்னியின் வீடு மற்றும் இச்சம்பவத்தில் தொடர்புடைய சன்னியின் நண்பர் ஒருவருக்கு சொந்தமான உணவகம் மீது கற்கள் வீசி பொதுமக்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அங்கு வந்த காவல் துறையினர் பொதுமக்கள் மீது தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

அப்பெண்ணை சன்னி மற்றும் அவருடைய நண்பர்கள் கடந்த பல நாட்களாகவே பின் தொடர்ந்து வந்ததாக அப்பெண்ணின் குடும்பத்தினர் காவல் துறையினர் விசாரணையில் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய சன்னியை காவல் துறையினர் கைது செய்தனர். சன்னியின் நண்பர்கள் இரண்டு பேரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

×Close
×Close