1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பான வழக்கில் அபு சலீம் உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என மும்பை தடா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் 12 இடங்களில் அடுத்தடுதது குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்ந்தப்பட்டது. இந்த கொடூர தொடர் குண்டு வெடிப்பில் அப்பாவி பொதுமக்கள் 257 பேர் உயிரிழந்தனர். மேலும் 713-பேர் படுகாயம் அடைந்தனர்.
நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் தொடர்பான விசாரணையை மும்பையில் உள்ள பயங்கரவாதம் மற்றும் சீர்குலைப்பு செயல்கள் தடுப்பு பிரிவு நீதிமன்றம்(TADA) விசாரணை செய்து வந்தது.
2006-ம் ஆண்டு இந்த வழக்கு தொடர்பான முக்கிய விசாரணை நிறைவு பெற்று, அதில், யாகுப் மேனன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட 100 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது.
மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக அபு சலீம், முஸ்தபா தேசா, ஃபரோஸ்கான், கரிமுல்லா கான், தாகீர் மெர்சன்ட், ரியாஸ் சித்திக், அப்துல் குவாயும் ஆகிய 7 பேர் சேர்க்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய தடா நீதிமன்றம் அபு சலீம் உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் இருந்து அப்துல் குவாயும் விடுவிக்கப்பட்டார்.