கொலையில் முடிந்த இந்து – முஸ்லிம் காதல் திருமணம்

”என்னையும், என் மகனையும் அவன் கொலை செய்துவிடுவேன் என கூறினான். இன்னும் அவர்களை கைது செய்யவில்லை. அவர்கள் உறவினர்கள் வீட்டில் தான் ஒளிந்திருக்க வேண்டும்.”

By: Updated: July 19, 2017, 10:44:39 AM

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் கடந்த 2015-ஆம் ஆண்டு இந்து மதத்தை சேர்ந்த பெண்ணும், இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஆணும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டதால் அவர்களது குடும்பத்தினருக்கு அவர்கள் மீது கோபம், பகை, மதவெறி இவையெல்லாம் குறைந்திருக்கும் என நம்பி, கடந்த ஜூன் மாதம் 26-ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாட முசாஃபர்நகருக்கு வந்தனர். ரம்ஜான் பண்டிகையையும் கொண்டாடினர். கடந்த திங்கள் கிழமை அவர்களது மகனின் முதல் பிறந்த நாள். அதையும் தங்களது ஊரிலேயே கொண்டாட முடிவெடுத்து கேக் வாங்க சென்றார் அப்பெண்ணின் கணவர். ஆனால், அவர் மீது பகைமை உணர்ச்சியை தீர்த்துக்கொள்ளும் வரை அமைதிக்காத்த அப்பெண்ணின் குடும்பத்தினர் அவரை கொலை செய்தனர்.

முசாஃபர்நகரை சேர்ந்த நசீம் கான் மற்றும் பிங்கி குமாரி. இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். 2013-ஆம் ஆண்டு முசாஃபர் நகரில் நடைபெற்ற மத கலவரத்தை நாம் நினைவுப்படுத்திக் கொண்டால் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வது எளிதானது அல்ல என நமக்குப் புரியும். இருவரும் பள்ளியிலிருந்து ஒன்றாக படித்தவர்கள். அவர்களுடைய காதல், பிங்கி வீட்டுக்கு தெரிந்தபோது, அவரை வீட்டில் அடைத்து வைத்து பெற்றோரும் சகோதரரும் அடித்து துன்புறுத்தினர்.

2015-ஆம் ஆண்டு நசீம் கான், விசாகப்பட்டிணத்தில் ஆடைகளை விற்று வாழ்வாதாரத்தை ஈட்டிய காலம். அவரை திருமணம் செய்துகொள்ள விரும்பிய பிங்கி குமாரி, தன் வீட்டை விட்டு வெளியேறி விசாகப்பட்டிணத்திற்கு சென்றார். இருவரும் மீண்டும் முசாஃபர்நகர் திரும்பி நீதிமன்ற உதவியுடன் திருமணம் செய்துகொண்டு விசாகப்பட்டிணத்திற்கு சென்றனர். பிங்கி குமாரி இஸ்லாம் மதத்திற்கு மாறி, தன் பெயரை ஆயிஷா என மாற்றிக்கொண்டார். அவர்களுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.

திருமணம் ஆன நாளிலிருந்தே பிங்கியின் பெற்றோர் நசீம் கானின் வீட்டாரை மிரட்டுவதை வழக்கமாகக் கொண்டனர். இருப்பினும், கடந்த ஜூன் மாதம் 25-ஆம் தேதி, ரம்ஜானுக்கு முந்தையை நாள் அவர்கள் முசாஃபர்நகருக்கு வந்தனர். இருவரும் நசீம் கானின் வீட்டில் தங்கினர். கடந்த திங்கள் கிழமை தங்களுடைய குழந்தையின் முதல் பிறந்தநாளை முசாஃபர்நகரில் கொண்டாடிவிட்டு ஊர் திரும்புவதாக முடிவு செய்தனர்.

“நசீம் கான் மற்றும் அவனுடைய தம்பி ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்கள். நான் அவர்களுக்குப் பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தேன். நசீம் தன் மகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக கேக் வாங்கினான். பாதிவழியில், கரும்பு தோட்டத்திலிருந்து மறைந்திருந்த ஒருவன் நசீமை கட்டையால் தாக்கினான். அதன்பிறகு ஒரு கும்பல் அவனை சரமாரியாக தாக்கியது. எங்களையும் அவர்கள் தாக்க முற்பட்டனர். ஆனால், மக்கள் ஒன்றுகூடுவதை பார்த்துவிட்டு அவர்கள் தப்பித்து ஓடிவிட்டனர்.”, என நசீமின் நண்பர் நாசர் முகமது கூறுகிறார்.

பிங்கியின் தந்தை ராஜேஷ், சகோதரர் பிரதீப் உள்ளிட்ட உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

“என் கணவர் கொலை செய்யப்பட்டதாக தெரிந்து நான் அப்போதே என் சகோதரனை தொடர்புகொண்டு பேசினேன். அவனிடம், எப்படி என் கணவரை கொலை செய்தாய்? அவரை கொலை செய்யும்போது என் ஒரு வயது மகன் உனக்கு நினைவில் வரவில்லையா? என கேட்டேன். அதற்கு என்னையும், என் மகனையும் அவன் கொலை செய்துவிடுவேன் என கூறினான். இன்னும் அவர்களை கைது செய்யாமல் இருக்கின்றனர். அவர்கள் எங்காவது உறவினர்கள் வீட்டில் தான் ஒளிந்துகொண்டிருக்க வேண்டும்.”, என்கிறார் பிங்கி.

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கிலம் இணையத்தளத்திலிருந்து…

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the India News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:2 years on hindu muslim marriage ends in murder

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X