பீகார் மாநிலத்தில் பின்தங்கிய சமுதாய குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுப்பதற்காக, 20 வயதான சோத்தி குமாரி என்ற பெண்ணுக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்த சோத்தி குமாரி, தனக்கு 17 வயதாக இருந்தபோதே, அவர் வசித்த ரத்தன்பூர் பகுதியில் பின்தங்கிய சமுதாயத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்.
அப்பகுதியில் உள்ள முசாஹர் சமுதாய மக்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கென சொந்த நிலம் இல்லை. எந்தவித அடிப்படை வசதிகளையும் அரசாங்கம் செய்துகொடுக்கவில்லை. அச்சமுதாய குழந்தைகள் அடிப்படை கல்வி கற்கக்கூட வழியில்லை. இந்நிலையில்தான், சோத்தி குமாரி, தான் அங்கம் வகிக்கும் அமிர்தானந்தமயி மேக் எனும் அரசு-சாரா நிறுவனத்தின் உதவியுடன், முசாஹர் இன குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். இந்நிறுவனம், 101 கிராமங்களை தத்தெடுத்து, அவர்கள் அனைத்து அடிப்படை வசதிகளிலும் தன்னிறைவு அடைவதை உறுதி செய்கிறது.
அங்குள்ள அரசு பள்ளிகளிலும் முசாஹர் இன குழந்தைகள் பெரும்பாலும், மதிய உணவுக்காகவே செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. மேலும், முசாஹர் இனத்தில் சிறுமிகளை 10 வயதிலேயே குழந்தை திருமணம் செய்துகொடுக்கின்றனர்.
ஒவ்வொரு வீடாக சென்று குழந்தைகளை கல்வி கற்க தனது வீட்டுக்கு அழைத்தார் சோத்தி குமாரி. கல்வியுடன் சேர்த்து சுகாதாரத்தையும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். இப்போது, அக்குழந்தைகள் படிப்படியாக சுகாதாரத்தையும் கல்வியையும் கற்கின்றனர். இதுவரை, 108 குழந்தைகளுக்கு அடிப்படை கல்வியை போதித்திருக்கும் சோத்தி குமாரி, அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை புரியவைத்து கல்வி கற்றுக்கொடுப்பது சாதாரணமானது அல்ல என்கிறார்.
கல்வியின் முக்கியத்துவத்தை முசாஹர் இன மக்களுக்கு புரிய வைக்க பாடுபடும் சோத்தி குமாரிக்கு Women's World Summit Foundation எனப்படும் ஸ்விட்சர்லாந்து அமைப்பு விருது வழங்கி சிறப்பித்துள்ளது. இந்த விருதை பெறும் இளம் வயது நபர் சோத்தி குமாரிதான்.
இதையும் படியுங்கள்: 12 வயது தமிழ் சிறுவன் பெயர் சர்வதேச விருதுக்கு பரிந்துரை: நரிக்குறவ சமுதாய குழந்தைகளின் கல்விக்கு பாடுபட்டான்